Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
கல்விப் பணியோடு, சமூகப் பணி!

தனியார் பள்ளியொன்றின், விடுதி மேலாளராக, ஊழியர்களுக்கான குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்து வருகிறார், நண்பர்.

சமீபத்தில், அவரை சந்திக்க சென்றேன். என்னை வரவேற்று, உபசரித்து, பள்ளி வளாகத்தை சுற்றிக் காட்டினார்.

எங்கு பார்த்தாலும் நிழல் தரும் மரங்கள், சூழலை இனிமையாக்கும் சிறு சிறு பூங்காக்கள் என, ரம்மியமாக இருந்தது.

பள்ளியை ஒட்டி நிர்வாகத்திற்கு சொந்தமான வயல்களில், இயற்கை விவசாயத்தில் விளையும் தானியங்கள் மற்றும் காய்கறிகளை, விடுதி மாணவர்களின் சமையலுக்குப் பயன்படுத்துவதை அறிந்து வியந்தேன்.

மேலும், அங்குள்ள பண்ணையில் பராமரிக்கப்படும் பசுக்களின் பால் தான், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கும் வழங்கப்படுகிறது என கூறி, மேலும் வியக்க வைத்தார்.

இவற்றை விட, 'ஹைலைட்' ஆக, அந்தப் பள்ளியின் விதை வங்கியில், பல்வேறு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பாரம்பரிய விதைகளை சேமித்து வைத்திருப்பதாகவும், தேவைப்படும் சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கு தந்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருவதாகவும் கூறினார்.

கல்விப் பணியோடு, சிறப்பான சமூகப் பணி செய்து வரும், பள்ளி நிர்வாகத்தினரை, மனதார பாராட்டினேன்!

- ஆர்.செந்தில்குமார், மதுரை.

கைத்தொழில் கைவசம் இருந்தால்...

நண்பரின் மகன், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படிப்பு முடித்து, உள்ளூரிலேயே, பிரபல, 'டூ - வீலர்' ஷோரூமின் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்தான்.

சமீபத்தில் அவனை சந்தித்தேன்.

'வேலை செய்யும் இடத்தில், சம்பளம் குறைவாக இருப்பதால், எதிர்கால வாழ்க்கையை நினைத்து பயமாக உள்ளது...' என, வருத்தத்துடன் கூறினான்.

'கையில் வெண்ணெயை வைத்து, ஏன் நெய்க்கு அலைகிறாய்...' என்றேன். புரியாமல் விழித்தான்.

'டூ - வீலர் பழுது பார்க்கும் திறனையும், அதே வேலையில் ஆறேழு ஆண்டு அனுபவத்தையும் கையில் வைத்திருக்கிறாய். அதை வைத்து, அதிகமாக சம்பாதிப்பது எப்படி என யோசி.

'உனக்கு, தனியாக சர்வீஸ் சென்டர் வைக்கும் ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் சொல். எனக்கு தெரிந்த வங்கி மேலாளரிடம் சிபாரிசு செய்து, கடன் கிடைக்க உதவி செய்கிறேன்...' என்றேன்.

உற்சாகத்துடன், சம்மதம் தெரிவிக்க, வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்தேன்.

தோதான இடம் ஒன்றில், சர்வீஸ் சென்டர் திறந்து, தொழிலில், 'பிசி'யாக இருப்பதோடு, துணைக்கு பணிபுரிய, சிலரை வேலைக்கு அமர்த்தியுள்ளான்.

இப்போது, போதுமான வருமானத்தோடு, மகிழ்ச்சியாக உள்ளான். கைத்தொழில் ஒன்று கைவசம் இருந்தால், கவலையை விரட்டி, வசதியாக வாழ முடியும் என்பதை, நிரூபித்து வருகிறான்.

வடிவேல் முருகன், நெல்லை.

உறவினர் மகளின் ஆக்கப்பூர்வ சிந்தனை!

மகளின் திருமண பத்திரிகையை கொடுக்க வந்திருந்தார், நெருங்கிய உறவினர். வரவேற்று உபசரித்து, அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

பத்திரிகையில், மகள் பெயரோடு, முதுகலை பட்டம் இடம்பெற்றிருந்தது. மாப்பிள்ளை பெயரில், படிப்பேதும் குறிப்பிடவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டேன்.

'மகளை விட, நிறைய படித்த வரன்களும், எங்களை விட வசதியான வரன்களும் வந்தன. அவர்களுள் சிலர், அரசு பணியில் உள்ளவர்களாக இருந்தனர்.

'ஆனால், அவர்களைப் பற்றி விசாரித்ததில், நடத்தை சரியில்லாதவர்களும், மது, புகை போன்ற தீய பழக்கம் உள்ளவர்களாகவும், லஞ்சம் பெறுபவர்களாகவும் இருந்தனர். இதை நாங்கள் விரும்பவில்லை.

'படிப்பு, வசதி, அரசு வேலைக்காக மட்டுமே திருமணம் செய்து கொள்வதில், மகளுக்கும் அறவே விருப்பமில்லை. 'என்னை விட குறைவான படிப்பு உள்ள வரனாக இருந்தாலும், நல்ல பண்பு, சுயதொழிலில், நேர்மையாக உழைக்கும் வரனை தேர்ந்தெடுங்கள்...' என, கண்டிப்பாக கூறி விட்டாள்.

'அவள் விருப்பப்படியே, பள்ளிப் படிப்பு முடித்து, சுயதொழில் மூலம் வாழ்க்கையில் உயர்ந்து, பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் குடும்ப முன்னேற்றத்துக்கு உதவும், பெருந்தன்மையான நற்குணங்கள் நிறைந்த இந்த வரனையே ஏற்பாடு செய்து விட்டேன்...' என்று, மகிழ்வோடு கூறினார். உறவினர் மகளின் ஆக்கப்பூர்வ சிந்தனையை, மனதார வாழ்த்தினேன்.

— மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us