Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : ஏப் 14, 2024


Google News
Latest Tamil News
பா - கே

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவே, சாயந்தரம், 'பீச்'சுக்கு செல்லலாம் என்றனர், நண்பர்கள். நானும், லென்ஸ் மாமாவும், அலுவலகத்திலிருந்து நேராக அங்கு சென்றோம்.

'பீச் மீட்டிங்'கில், குப்பண்ணா மட்டும், 'மிஸ்சிங்!' குல தெய்வ வழிபாட்டுக்காக, சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக தகவல் அனுப்பியிருந்தார். அவருக்கு பதிலாக, சில ஆண்டுகளுக்கு முன், தேர்தல் கமிஷனராக, டி.என்.சேஷன் இருந்தபோது, அவருக்கு கீழ் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் வந்திருந்தார்; லென்ஸ் மாமாவுக்கு தெரிந்தவர்.

தேர்தல் பற்றி பேச்சு வர, 'எங்க காலத்துல நடந்த தேர்தலுக்கு பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், பணம் தான் விளையாடுகிறது. என்ன தேர்தலோ, என்ன மக்களோ...' என்று அலுத்துக் கொண்டு, அவரே தொடர்ந்தார்:

இப்போது எந்த கட்சியினரும், மக்கள் பிரச்னையை முன் நிறுத்தவில்லை. ஒவ்வொருவரும், அடுத்தவர்களின் ஊழல் பட்டியலை எடுத்துக் கூறி, நாறடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த லோக்சபா தேர்தலை ஒட்டி எடுக்கப்பட்ட கணக்கின்படி, நாடு முழுவதும், 1.84 கோடி புதிய வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதில், மாற்றுத்திறனாளிகள் மட்டும், 88 லட்சம் பேர் புதிதாக இணைந்திருக்கின்றனர்.

முதல் முறையாக ஓட்டு அளிக்க இருப்பவர்களில் பெரும்பாலோர், கல்லுாரி படிப்பில் காலடி எடுத்து வைத்திருப்பவர்கள். இவர்களிடம், 'யாருக்கு ஓட்டளிக்க போகிறீர்கள், வேட்பாளர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்...' என்று கேட்டதும், அவர்கள் கூறிய பதில் ஆச்சரியமளித்தது.

இளைய தலைமுறையினர் இப்படியெல்லாம் ஆசைப்படுகின்றனர் என்பது, நம் வேட்பாளருக்கோ, கட்சி தலைமைக்கோ தெரியுமா? இன்றைய இளைஞர்கள், சுயமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். இது, நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது தான்.

இந்த தேர்தலும், அதன் முடிவுகளும் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ, பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் மட்டும் தான் அமையப் போகிறது. மற்ற அத்தனை கட்சிகளும், பந்து எடுத்து போடும் பையன்கள் போல், கேலரிக்கு பக்கத்தில் நிற்பவர்கள் தான், என்றார்.

இடையில் புகுந்த, திண்ணை நாராயணன் தொடர்ந்தார்:

நேற்று இரவு, 'திண்ணை' மேட்டர் எழுதிக்கிட்டிருந்தேன்பா... திடீரென, 'கரன்ட்' போய் விட்டது. என்னடா அதிசயமா இருக்கே என, எழுந்து வெளியே வந்து பார்த்தேன்.

பக்கத்து வீட்டுக்காரர், 'டீக்'காக உடை அணிந்து, அவர் வீட்டு வாசலில் நின்றிருந்தார். இந்த நேரத்தில் எதற்கு பேன்ட் - ஷர்ட் அணிந்து நிற்கிறார் என்று யோசித்தபடி, 'எங்காவது வெளியே கிளம்புகிறீர்களா?' என்றேன்.

'எங்கும் செல்லவில்லை. சும்மாதான் நின்று கொண்டிருக்கிறேன்...' என்று கூறி, நக்கலாக சிரித்தார்.

'எதற்கு இந்த சிரிப்பு?' என்று புரியாமல் பார்த்தேன்.

'என்னத்தை எழுதி கிழிக்கறீங்களோ... உங்களுக்கு விபரமே பத்தலை! நேற்று இரவு இதே நேரத்தில், 'கரன்ட்' போனதே நினைவிருக்கா. அடுத்த தெரு வரை, வாக்காள பெருமக்களுக்கு, கட்சிக்காரர்களின், 'டிஸ்டிரிப்யூஷன்' நடந்துள்ளது. இன்றைக்கு இந்த சைடு வருவாங்க, பாருங்கள்...' என்றார், அவர்.

என்னவோ கள்ளக்கடத்தல் கும்பலுக்கு, 'டார்ச்' அடித்து, சிக்னல் கொடுத்து, காத்திருப்பது போல், ஏதோ ஒரு கட்சி தரும் பணத்திற்காக காத்திருந்தார், என்று புலனானது.

எனக்கு வருத்தமா போயிடுச்சு. மிஞ்சி போனால், 2,000 அல்லது 5,000 ரூபாய் கொடுப்பரா? சரி... 10 ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கட்டுமே. ஐந்து ஆண்டு ஆட்சி அதிகாரத்தை நாம் துாக்கிக் கொடுப்பதற்கு இதுதான் விலையா?

படித்தவர், பாமரர் பேதமில்லாமல், இந்த பணத்துக்காக, மக்கள் நாக்கை சப்புக்கொட்டும் வழக்கம் ஒழிந்தாலன்றி, அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை என்றார், நாராயணன்.

'நீர் சொல்வது உண்மை தான்...' என்ற அதிகாரி தொடர்ந்தார்:

இப்படி கொடுக்கப்படும் தொகையை, நாளை, ஜெயித்து அதிகாரத்திற்கு வந்ததும், மீட்டர் வட்டி போட்டு நம்மிடமிருந்து திரும்ப எடுப்பர் என்று, மக்கள் உணர வேண்டாமா?

ஜனநாயகத்தில், ஓட்டளிப்பது, மக்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவம்; நம்மை ஆள்பவரை, நாமே தேர்ந்தெடுக்கிற சுதந்திரம். இது எவ்வளவு மகத்தானது.

நாம் தேர்ந்தெடுப்பவர் சரியில்லை என்றால், அடுத்த, ஆறாவது ஆண்டு துாக்கி கடாசி விட்டு, வேறொருவரை ஆட்சி கட்டிலில் அமர வைக்க நம்மால் முடியும்; அரசாங்கத்துக்கு கூட, இப்படி ஒரு அதிகாரம் இல்லை.

பிடிக்காத அதிகாரிகளை, அமைச்சரால், 'டிரான்ஸ்பர்' செய்ய முடியும்; வேலையிலிருந்து துாக்க முடியாது. ஆனால், வாக்காளர்கள் நினைத்தால், அமைச்சரையே துாக்கலாம்; ஆட்சியிலிருந்தே இல்லாமலும் செய்ய முடியும்.

இந்த கவுரவத்தை விட்டுக் கொடுக்கலாமா? தவறாமல் ஓட்டளித்து, சரியான நபரை தேர்ந்தெடுப்பது, நாட்டுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு.

நமக்கு இன்னொரு வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன், ஒரு நாள் விடுமுறையும் கொடுத்துள்ளது, அரசு.

நமக்காக உழைக்கக் கூடிய, நாட்டு நலனுக்காக சிந்திக்கக் கூடிய ஒருவரை, இந்த முறை தேர்ந்தெடுக்கலாம்.

கட்சிகள் முக்கியமல்ல; தொகுதிக்கு ஒரு உத்தமமானவரை தேர்ந்தெடுத்தால் போதும். ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களும், மிகச் சரியான நபரை தேர்ந்தெடுத்தால், அமையும் ஆட்சி அற்புதமாக இருக்குமே!

எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில் தான் உள்ளது. இதற்காக, எங்கள் பகுதி இளைஞர்களை ஒன்றிணைத்து அறிவுறுத்தி வருவதாக கூறி முடித்தார், அந்த அதிகாரி.

அதுவரை, 'தேமே' என்று எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, அதிகாரியின் கையைப் பிடித்து, குலுக்கினார்.

அவரது கூற்றில் இருந்த உண்மை புரிய, ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தேன், நான்.

'அதிகாரி சொன்னது நுாற்றுக்கு நுாறு சரியானது. நானும், என் வீட்டினர், அக்கம் பக்கத்தினர், உறவினர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன். அடுத்த, 'எவிக் ஷன்' வரை நான் இருப்பேனா மாப்ளே...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.

'ஐயோ பெருசு... நல்லா பேசறீங்களேன்னு ஒரு விநாடி மலைச்சு போயிட்டேன். ஆனால், வழக்கம் போல, உம்ம சொதப்பலை அரங்கேற்றி விட்டீர். அது, 'எவிக் ஷன்' இல்ல, 'எலெக் ஷன்' - தேர்தல் என்று தமிழில் சொல்கிறோமில்லையா?' என்று சீறினார், மாமா.

மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்த, 'பீச் மீட்டிங்' பயனுள்ளதாக முடிந்ததில், எனக்கு திருப்தி.  





      Our Apps Available On




      Dinamalar

      Follow us