Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : மார் 31, 2024


Google News
Latest Tamil News
கீழே பணம் கிடந்தால்!

எங்கள் தெருவில் உள்ள மளிகை கடையில், பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். அங்கு சில இளைஞர்கள், நின்று, பேசிக் கொண்டிருந்தனர்.

துாரத்தில், கீழே குனிந்து எதையோ எடுத்தார், ஒரு பெண். அதை, தங்கள் மொபைல் போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர், இங்கிருந்த இளைஞர்கள்.

கோபமடைந்த நான், அந்த இளைஞர்களை மிரட்டி, மொபைல் போனை வாங்கி பார்த்ததும், அதிர்ந்தேன்.

அதில், அந்த பெண்ணின் உள்ளாடையும், மார்பகங்களும் அப்பட்டமாக தெரிந்தது.

அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து, அவர்களை போலீசில் ஒப்படைத்தோம். விசாரித்ததில், ரோட்டில் பெண்கள் நடந்து வரும்போது, இவர்களே பணத்தை கீழே போட்டு வைப்பராம். பெண்கள் குனிந்து எடுக்கும்போது, அதை படம் எடுத்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கமாம்.

பெண்களே... சாலையில் பணம் கிடந்தால் அதை எடுக்க வேண்டாம். பணத்திற்கு ஆசைப்பட்டு, உங்களது மானத்தை இழக்க நேரிடும்.

—செ. சவுமியா, தருமபுரி.

கிராமத்து இளைஞர்களின் நல்ல முயற்சி!

சமீபத்தில், எங்கள் பகுதியில், புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம், புத்தகக் கண்காட்சிக்கு வந்த அனைவரையும், நெகிழ வைத்தது.

அருகிலுள்ள கிராமத்திலிருந்து வந்திருந்த இளைஞர்கள், கண்காட்சியின் முகப்பில், தரையில் அமர்ந்து, 'எங்கள் கிராம நுாலகத்திற்கு, புத்தகக் கொடை தாருங்கள்...' என்ற பதாகையை வைத்திருந்தனர்.

கண்காட்சி நடந்த, 10 நாட்களுமே, இளைஞர்கள், சுழற்சி முறையில் வந்து, புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.

விசாரித்ததில், தங்கள் கிராம நுாலகத்திற்கு நன்கொடையாக அளிப்பதாக கூறினர்.

கிராமத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் உதவும் வகையில், பல்வேறு பாடப் புத்தகங்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும், தங்களின் முயற்சியால் சேகரித்தனர்; அவர்களால், புத்தகங்களும் நிறைய விற்பனையாகின.

சமூக அக்கறை கொண்ட கிராமத்து இளைஞர்களை, அனைவருமே பாராட்டினர்.

ஒவ்வொரு பகுதியிலும், புத்தகக் கண்காட்சி நடக்கும் இடங்களில், புத்தகங்களை வாங்கி, நுாலகங்களுக்கு வழங்கலாமே... செய்வீரா?

- ஆ. வீரப்பன், திருச்சி.

சிசிடிவியால், தொல்லையா?

தெருவில், எங்க வீட்டில் மட்டும் தான், 'சிசிடிவி கேமரா' உள்ளது. தெருவில் உள்ளோர், தங்கள் வீட்டில் எதாவது பொருட்கள், திருட்டு போனால், 'சிசிடிவி புட்டேஜ்' பார்க்க வேண்டும் என்பர்.

அனைவரிடமும் நட்புடன் இருப்பதால், அவர்கள் கேட்டதும், மறுக்காமல், 'சிசிடிவி புட்டேஜை' போட்டுக் காட்டுவோம்.

பின், அவசியமற்றதுக்கெல்லாம், 'புட்டேஜை' போட்டுக் காட்ட கூறினர். இது, எங்களுக்கு பெரிய தொல்லையாகவும், தர்மசங்கடமாகவும் இருந்தது.

இது குறித்து, நண்பரிடம் கூறினேன்.

'இப்படித்தான் எங்கள் பகுதியில் ஒரு வீட்டில், தெருவாசிகள் தொல்லை தந்தனர். ஒரு முறை ஊர் கூட்டத்தில், 'தெருக்களில் கேமரா பொருத்தி, 'சிசிடிவி புட்டேஜை' கோவிலில் பார்க்க ஏற்பாடு செய்கிறேன்...' என, 'ஐடியா' தந்துள்ளார்.

'ஊர் மக்களிடம் பேச, அனைவரும் ஆமோதித்தனர். அதன்படி, வசூல் செய்து, கேமரா பொருத்தி கோவிலிலேயே, 'புட்டேஜ்' பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது, ஊர் மிக பாதுகாப்பாக இருக்கிறது. யாருடைய தொல்லையும் இன்றி, அவரும் நிம்மதியாக இருக்கிறார்...' என்றார்.

அதே, 'ஐடியா'வை, எங்கள் ஊரிலும் கடைப்பிடித்தோம். இப்போது, எந்த தொல்லையும் இல்லை; ஊரும் பாதுகாப்பாக இருக்கிறது.

என்ன நண்பர்களே, இதே, 'ஐடியா'வை, உங்கள் ஊரிலும் கடைப்பிடிக்க சொல்லலாமே...

—ப.சிதம்பரமணி, கோவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us