Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/பன்றியால் எழுந்த கோவில்!

பன்றியால் எழுந்த கோவில்!

பன்றியால் எழுந்த கோவில்!

பன்றியால் எழுந்த கோவில்!

PUBLISHED ON : மார் 31, 2024


Google News
Latest Tamil News
ஒருவரைத் திட்டும் போது, 'போடா பன்னி...' என்கிறோம். பன்றியை இன்று வரை நாம் கேவலமான பிராணியாகத் தான் பார்க்கிறோம். ஆனால், அதுவே தெய்வமாகும் போது, கையெடுத்து வணங்குகிறோம்.

நம் பாரதத்துக்கே பெருமை சேர்க்கும் கோவில் என்றால், அது தஞ்சாவூர் பெரிய கோவில் தான். அந்தக் கோவில் எழ, ஒரு பன்றி காரணமாக இருந்திருக்கிறது என்ற விசேஷ தகவல் உங்களுக்கு தெரியுமா?

பெண் தெய்வங்களில் நம்மைக் கவர்பவள், வாராஹி. வராஹம் என்றால் பன்றி. தசாவதாரங்களில் ஒன்று வராஹம்.

பூமித்தாயை, இரண்யாட்சன் என்ற அசுரன் கடத்திச் சென்று பாதாளத்தில் வைத்தபோது, திருமால் வராஹ அவதாரம் எடுத்து, அவளை மீட்டார். அவரது பெண் சக்தியே, வாராஹி என்பர்.

மற்றொரு வரலாறின் படி, ரத்த பீஜன் என்ற அசுரனைக் கொல்ல, பார்வதி தேவி துர்க்கையாக மாறி, தன் சக்திகளை ஏழாகப் பிரித்தாள். அவர்கள் சப்த கன்னிகள் எனப்பட்டனர்.

சப்தம் என்றால் ஏழு. இவர்களில் ஒருத்தி, வாராஹி. ஒருவேளை ரத்த பீஜன், பூமிக்கு அடியில் சென்று மறைவான் என்றால், அவனை அங்கு சென்று கண்டுபிடிக்க ஒருத்தி வேண்டும். அதனால் தான் வாராஹியை உருவாக்கினாள், அம்பாள். வராஹம், பூமியைக் குடையும் ஆற்றலுடையது.

இந்த சக்தியை தங்கள் குலதெய்வமாகவே கருதினர், சோழ மன்னர்கள். போர்களுக்கு செல்லும் போது, வெற்றி வேண்டி, வாராஹியை வணங்கிச் சென்றனர். அதிலும், தஞ்சாவூர் பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜ சோழன், வாராஹியின் தீவிர பக்தனாக விளங்கினான்.

பொதுவாக சிவாலயங்களுக்குள் நுழைந்தால், விநாயகர் வணக்கமே முதன்மையானதாக இருக்கும். தஞ்சை கோவிலிலோ, நம் கண்ணில் முதலில் படுவது, வாராஹி சன்னிதி தான். அந்தளவுக்கு, ராஜராஜ சோழன், வாராஹி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.

வாராஹியை வணங்கியதால் தான், இப்படி ஒரு அரிய கலைப் பொக்கிஷத்தை, ராஜராஜனால் பாரத மண்ணுக்கு தர முடிந்தது போல!

அது மட்டுமல்ல, ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை செவி வழி செய்தி தருகிறது.

பெரிய கோவிலைக் கட்ட திட்டம் தீட்டிவிட்டான், ராஜராஜ சோழன். எந்த இடத்தில் கட்டுவது என, அவனுக்கு ஏக குழப்பம். அப்போது, பன்றி ஒன்று அவன் முன் வந்து, ஓட ஆரம்பித்தது.

வாராஹி பக்தனான மன்னன், அதை அம்பிகையாகவே கருதி, பின் தொடர்ந்தான். அந்த பன்றி ஓரிடத்தில் வந்து நின்று, மறைந்து விட்டது.

வாராஹியே தனக்கு இடம் காட்டி கொடுத்ததாக கருதிய மன்னன், அங்கேயே கோவில் கட்டத் துவங்கினான். பன்றி நின்ற இடத்தில், வாராஹிக்கு பிரமாண்ட சிலை எழுப்பி, சன்னிதியும் அமைத்தான்.

தஞ்சாவூர் பெரிய கோவிலே ஒரு அதிசயம் தான். அந்த அதிசயத்திற்குள் இப்படி ஒரு விசேஷம் புதைந்து கிடப்பது வித்தியாசம் தானே!     

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us