Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

PUBLISHED ON : மார் 17, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள அம்மாவுக்கு -

நான், 24 வயது பெண். எனக்கு ஒரு தங்கை, கல்லுாரியில் படிக்கிறாள். என் பெற்றோரும், தங்கையும் சொந்த ஊரில் வசிக்கின்றனர். நான், வேலை நிமித்தம் காரணமாக சென்னையில், கட்டணம் செலுத்தி, ஒரு வீட்டில் தங்கி உள்ளேன்.

அந்த வீட்டின், இரு அறைகளிலும், இரண்டு பேர் வீதம் மொத்தம் நான்கு பேர் தங்கியுள்ளனர். அனைவருமே, வேலைக்கு செல்பவர்கள் தான்.

அலுவலகத்துக்கு அருகில் இருப்பதால், இங்கு தங்கியுள்ளேன். என்னுடன் தங்கியிருக்கும் பெண், எனக்கு முன்பிருந்தே இங்கு தங்கியுள்ளார். வேளைக்கு நல்ல சாப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எந்த குறையும் இல்லை.

சமீபத்தில், வெளியூரிலிருந்து வந்ததாக கூறி, ஒரு பெண்ணை, எங்கள் அறையில் தங்க வைத்தார், வீட்டு உரிமையாள பெண்மணி.

அந்த பெண், படித்து முடித்து ஒரு ஆண்டு ஆகியும், இன்னும் எந்த வேலையிலும் சேரவில்லை; அதற்கான முயற்சி எதுவும் செய்யாமல், வெட்டியாக ஊர் சுற்றி வருகிறாள்.

நாங்கள், ஏதாவது வேலை வாய்ப்பு இருந்து, அதற்கு முயற்சிக்கலாமே என்றால், 'அதெல்லாம் எனக்கு சரி வராது...' என்று, அலட்சியமாக கூறுகிறாள்.

வளமையான பின்னணி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. புதுப்புது டிரஸ் மற்றும் 'மேக் - அப்' சாதனங்கள் வாங்க, தாராளமாக செலவு செய்கிறாள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

மேலும், அறைக்குள் இருந்தபடி எப்போதும், மொபைல் போனில் யாருடனோ தொடர்ந்து பல மணி நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அப்படி இல்லையெனில், வீட்டுக்கார அம்மாவுடன் அமர்ந்து அரட்டை அடிப்பாள்.

இவளால் எங்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கிறது. சரியாக துாங்கக்கூட முடியாமல் தவிக்கிறோம். மொத்தத்தில், அவள் சரியான பாதையில் செல்லவில்லை என்று மட்டும் தெரிகிறது.

வீட்டுக்கார அம்மாவிடம் சொன்னால், 'அப்பெண், என் துாரத்து சொந்தம். எங்களை நம்பி வந்துள்ளாள். கொஞ்சம், 'அட்ஜெஸ்ட்' செய்து கொள்ளுங்கள்...' என்கிறார்.

இவளால் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று பயப்படுகிறோம்.

இப்பிரச்னையிலிருந்து வெளி வர, தக்க ஆலோசனை கூறுங்கள், அம்மா!

- இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு -

உங்கள் கூட்டுக்கு வந்திருக்கும் புதிய பறவையின் இடைஞ்சல்களிலிருந்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

இன்னும் எத்தனை நாட்கள், அந்த புதிய பறவை, உங்களுடன் சேர்ந்து தங்கி இருக்கப் போகிறதோ, அத்தனை நாட்களும் அவளை விரோதமும் இல்லாது, நட்பும் இல்லாத அந்நியப் பார்வை பார்.

'தொடர்ந்து நீ, 100 ஆண்டுகள் எங்களுடன் தங்கி இருந்தாலும், உன்னுடன் நட்பாக மாட்டோம்...' என, உன் நடத்தையால் உணர்த்து.

நீ செய்வதையே மற்ற பெண்களும் நகல் எடுக்கட்டும். உங்களின் புறக்கணிப்பு புதிய பறவையை காயப்படுத்தும். ஒரு கட்டத்தில் அவளே உங்கள் அறையை காலி பண்ணி போக வாய்ப்பிருக்கிறது.

புதிய பறவை கொடுக்கும் வாடகை எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதை, நான்காக பிரித்து, உங்களது வாடகையுடன் சேர்த்து கொடுத்து, புதிய பறவையை விரட்ட முயற்சிக்கலாம்.

ஐந்தாவது நபரின் வாடகை, முதல் நான்கு நபர்களிடமிருந்து கிடைக்கிறது என்றால் துாரத்து சொந்தம் என்ன, பக்கத்து சொந்தம் என்ன... விரட்ட சம்மதிப்பாள் வீட்டு உரிமையாளினி.

ஒருவேளை புதிய பறவையை வீட்டு உரிமையாளினி விரட்ட சம்மதிக்கவில்லை என்றால் பதட்டப்படாதே. நான்கு பெண்களும் ஒரு சேர அறையை காலி செய்து, வீட்டு உரிமையாளினிக்கு நெருக்கடி தரலாம். மீதி மூன்று பெண்கள், உன்னுடன் ஒத்துழைக்க மறுத்தால், நீ தனியாக வேறொரு இடத்துக்கு குடி பெயரலாம்.

புதிய இருப்பிடத்திலும் புதிய பறவை போன்றதொரு கதாபாத்திரம் இருக்க வாய்ப்பிருக்கிறது. புதிய இருப்பிட அறை தோழிகளை பற்றி சிறிது அலசி ஆராய்ந்து விட்டு போ.

சென்னையில் நுாற்றுக்கணக்கான வேலை பார்க்கும் பெண்கள் விடுதிகள் உள்ளன. இணையதளத்தில் பார்த்து உனக்கு பொருத்தமான விடுதியை நீ தேர்ந்தெடுக்கலாம்.

நீ எங்கு போனாலும், அங்கு பழகும் பத்து தோழிகளில் நால்வர், இவளைப் போன்றவர்களாகத் தான் இருப்பர். உனக்கான பாதுகாப்பு வளையத்தை அமைத்து இயல்பாக இரு.

ஆண் நிர்வாகம் கற்றுக் கொள். ஆடம்பரம் தவிர். வாரம் ஒரு முறை கோவிலுக்கு போ. சுயமாய் சமைத்து சாப்பிடு. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, சொந்த ஊருக்கு போய் வா. தங்கையின் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் உன் திருமணத்தை நுணுக்கமாக திட்டமிடு.

தேனாக இராதே விழுங்கி விடுவர்; வேம்பாக இராதே துப்பி விடுவர். மத்திமமாக வாழ் என் தங்கமே!

- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us