PUBLISHED ON : மார் 17, 2024

ஆளுமை தோரணையோடு, மேடையில், 'மைக்' பிடித்து, 'காலத்துக்கும், நேரத்துக்கும் ஏற்ப, மாற்றம் நடந்துகிட்டே இருக்கணும், நண்பர்களே... மாறாமல் இருந்தால், அதுவும் கூட ஒரு விதமான வீழ்ச்சி தான்...' என, சிவா பேசிக் கொண்டிருந்ததை, இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார், தேனப்பன்.
அரங்கத்தை கண்களால் ஒருமுறை சுழற்ற, சிவாவின் வயசை ஒத்த இளவட்டங்கள், கை தட்டி, ரசித்துக் கொண்டிருந்தனர். நல்ல கருத்துத் தான். ஆனால், ஏனோ அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை, தேனப்பனுக்கு.
தமிழ்நாடு ஹார்டுவேர் அசோசியேஷனின் வருடாந்திர சந்திப்பு. வளர்ச்சி, முயற்சி என்று பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு.
வந்திருந்தவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தான், இளம் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருந்த, சிவா.
சிவாவைத் தொடர்ந்து நான்கைந்து பேர் பேசி முடிக்க, மதிய உணவுவேளை வந்தது.
தேனப்பனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான், சிவா.
''சொல்லுங்கப்பா... நீங்க எதிர்ப்பார்த்ததை விட, பெரிய உயரத்துக்கு, நம், 'ஹார்டுவேர்ஸ் பிசினசை' கொண்டு போயிருக்கேனா? இப்போ ஒத்துக்கறீங்களா, ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாமல் இருக்கலாம். ஆனால், கறி சமைக்கிறது எப்படின்னு, 'டாப் டூ பாட்டம்' கத்துக்கிறது சமைக்கும்போது உதவும்.''
தலையசைத்து சிரித்தபடி, ''உன்னை எப்போதுமே குறைச்சு மதிப்பிட்டதில்லை, மை சன். வெறும் வியாபாரம், லாபம், நஷ்டம், கிராப், இது மட்டுமல்ல, 'பிசினஸ்!' இதைத் தாண்டிய சில பல விஷயங்களும் எல்லா தொழிலிலும் இருக்கு,'' என்று, அப்பா சொன்னதும், மென்மையாக தோளைக் குலுக்கி கொண்டான்.
அவனுடைய அந்த உடல்மொழியே, அவர் சொன்னதை, ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னது.
வெளிநாட்டு படிப்பும், விஸ்தீரணமான சிந்தனையுடன், சிவா, வந்து இறங்கியபோது, தன்னுடைய ஹார்டுவேர் தொழிலை ஏற்று செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை, தேனப்பன்.
'முறுக்கு கம்பிகள் பிசினசில், இந்தியாவிலே, 'நம்பர் ஒன்' ஆக்கி காட்டறேன்பா...' என்று அவன் எடுத்த முயற்சியின் பலனாக, 'ஆர்டர்'கள் குவிந்தன. பில்டர்சில், 60 சதவீதம் பேர் இவர்களோடு இணைய, அரசாங்க கட்டுமான, 'ஆர்டர்'களும் வந்து சேர, துரிதகதியில் உச்சத்தை தொட்டது, நிறுவனம்.
ஆனால், உழைப்பும், முயற்சியும் மட்டும் இதற்கு காரணமில்லை. பல காலமாய், ஹார்டுவேர் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த, ஆதிகேசவனுக்கு, அந்த சமயத்தில், பெரிய சறுக்கல். உடல் நலம் மற்றும் குடும்ப பிரச்னை என்று அவர் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போனது; தொழில் இறங்கு முகமானது.
ஒரு கட்டத்தில், தொழிலை கைமாற்றி விட்டு, தன்னை சுருக்கிக் கொண்டார். ஒரு வகையில், தேனப்பனின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அந்த ஒதுங்குதல் கூட காரணமாக அமைந்தது.
சாப்பாட்டு மேஜைக்கு நகர, தேனப்பனை தேடி வந்தனர், பழைய நண்பர்கள்.
'சந்தோஷமா இருக்கு, தேனப்பன் சார்... உங்க பையன், பொறுப்புக்கு வந்த பின், உங்களை கையிலயே பிடிக்க முடியலை. எத்தனையோ காலமா, 'நம்பர் ஒன்'னாக இருந்த, ஆதிகேசவன் சாரையே பின்னுக்கு தள்ளிட்டு முன்னணிக்கு வந்துட்டீங்க... வாழ்த்துகள்...' என்றனர்.
கை குலுக்கிய போது மனமார நன்றி சொன்னார்.
''ஆனாலும், ஆதிகேசவன் சாரை மறக்கவே முடியாது. நாம எல்லாம் இப்படி இன்றைக்கு நிற்கிறோம்ன்னா, அதுக்கு அவர் போட்ட பாதை தான் காரணம்,'' என்று கூறினார், வந்திருந்தவர்களில் ஒருவர்.
சிவாவின் முகம் மாறியது.
அவர் அங்கிருந்து நகர, முக மலர்ச்சியோடு வந்து கட்டித் தழுவினார், டீலர்.
''எப்படிண்ணே இருக்கீங்க... பார்த்து எவ்வளவு நாளாச்சு, அது ஒரு காலம்... 'அசோசியேஷன் மீட்டிங்'ல தொழில் போட்டியெல்லாம் எதுவும் இல்லாம, நீங்க, நான், ஆதிகேசவன் அண்ணன், எல்லாம் அவ்வளவு நட்பா இருப்போமே... அந்த நட்பெல்லாம் இப்போ உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் வராதுண்ணே.
''ஒரு இக்கட்டான சமயத்துல, ஆதிகேசவன் ஐயாகிட்ட ஒரு உதவி கேட்டு போன் பண்ணினேன். அடுத்த அரைமணி நேரத்தில், சரக்கு, கடை வாசல்ல நிற்குது. அந்த மாதிரியான மனுஷனை எல்லாம், 'பிசினசில்' பார்க்குறது கஷ்டம்.''
அவர் நகர, இன்னொருவர், அடுத்து ஒருவர் என்று, பேசிய அத்தனை பேரின் வார்த்தைகளிலும், நினைவுகளிலும் இருந்தார், ஆதிகேசவன்.
மெல்ல எரிச்சல் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது, சிவாவிற்கு.
வீடு திரும்பும்போது, ''நம் அளவு கூட அவர், 'ஆர்டர்' பார்க்கல சர்வீஸ்ல. நேர்மையா, 'பிசினஸ்' செய்தார்ங்கிறதை தவிர, பெரிசா எதுவும் செய்ததா தெரியல. ஆனால், யாரைப் பார்த்தாலும் அவரைப் பற்றியே பேசறாங்க. அது தான் எரிச்சலா இருக்கு...
''கிட்டத்தட்ட நாலு வருஷமா, அவர் எந்த, 'ஆக்டிவிட்டியில'யும் இல்ல. இப்போ அசைக்க முடியாத இடத்துல இருக்குற நம்மைப் பற்றி பேச யாருக்கும் மனசில்லை,'' என்று, கோபத்தை அப்பாவிடம் காட்டினான், சிவா.
மகனின் முதுகை தட்டியவாறு, ''இதை விட்டுட்டு, உன் கல்யாண வேலைகளில் கவனத்தை திருப்பு, சிவா. நாளைக்கு நாம போய், ஆதிகேசவன் சாருக்கு அழைப்பு வச்சுட்டு வந்துடலாம்,'' என்றார், தேனப்பன்.
முன்பு இருந்த கடை, குடோனெல்லாம் கைமாறி இருக்க, அங்கிருந்தவர்களிடம் விசாரித்து சென்றவர்களுக்கு, சின்னதாய் இருந்த ஹார்டுவேர் கடையில், ஆதிகேசவனைப் பார்த்ததும், அதிர்ச்சியாக இருந்தது.
உண்மையான வருத்தத்தோடு, ''என்ன சார் இதெல்லாம்? உங்களை, இப்படிப் பார்க்க கஷ்டமா இருக்கு,'' என்றவாரே, புன்னகையுடன் தழுவிக் கொண்டார்.
''தேனப்பன், இப்படித்தான் நான் இருப்பேன்னு கடவுள்கிட்ட சண்டை போட முடியுமா? எந்த நேரத்தில் நாம எப்படி இருக்கணும்ன்னு சொல்றாரோ, அப்படியே இருந்துட்டு போகணும். எந்த நிலையையும் ரசிக்கப் பழகிட்டால், எதுவுமே கஷ்டமா தெரியாது.
''மனைவிக்கு உடல்நிலை கோளாறு. பையனுக்கு விபத்துன்னு, பணம் கரைஞ்சது. தொழிலில் கவனம் செலுத்த முடியல. எத்தனை உயரமா இருந்தாலும், தொழில் எல்லாம் மணல் குவியல் தான். பலமான காற்றுக்கு கூட நிலைகுலைஞ்சு போயிடும்,'' என்று, ஆதிகேசவன் பேசிக் கொண்டிருந்தபோது, கடை வாசலில் ஆட்கள் வந்து நிற்க, பேச்சை நிறுத்தி, எழுந்து போனார்.
மூன்று வாடிக்கையாளர்கள்.
''சொல்லுங்க சார்... என்ன வேணும்?''
''வீடு கட்டறோம். கட்டுக் கம்பி தேவைப்படுது. எனக்கு அவ்வளவா நிலவரம் தெரியாது. நண்பர்கள்கிட்ட விசாரிச்சேன். உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க,'' என்றார்.
வந்திருந்தவர் வெள்ளந்தியான தோற்றத்தில் இருந்தார்.
''உள்ளே வந்து உட்காருங்க. மத்தவங்களை கவனிச்சு அனுப்பிடறேன்,'' என, மர ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர வைத்து, மற்ற இருவரையும் கவனிக்க ஆரம்பித்தார்.
அதில் ஒருவர், ஓவர் டேங்க், ப்ளாஸ்டிக் பைப், சேனட்டரி மெட்டீரியல் என்று, மொத்தமாக வாங்க வந்திருந்தார்.
கடைப் பையனை அழைத்து, அவரை, 'அட்டென்ட்' செய்யச் சொல்லி, இறுதியாக நின்றவரிடம் வந்தார்.
''சாருக்கு என்ன வேணும்?''
''இல்லீங்க, நீங்க பெரிய வியாபாரத்தை கவனிங்க,'' என்றவர், சட்டைப் பாக்கெட்டில் கை விட்டு, ஒரு ஆணி மாதிரியை எடுத்து நீட்டி, ''என்னோடது சின்னது தான்,'' என்றார்.
ஆதிகேசவன் முகத்தில், மலர்ச்சி இன்னும் அதிகமானது.
''வியாபாரத்துல சின்னது, பெரிசுன்னு என்ன சார் இருக்கு... ஒரு நல்ல வியாபாரிக்கு அடையாளம் எது தெரியுமா, இன்றைக்கு நமக்கு எவ்வளவு வியாபாரம் நடந்ததுங்கிறது இல்லை.
''இன்றைக்கு நம் கடைக்கு எத்தனை வாடிக்கையாளர்கள் சரக்கு வாங்கவோ, அதைப்பற்றி விசாரிக்கவோ வந்து போயிருக்காங்கறது தான். பொருள் இல்ல சார் கொள்முதல். உங்களை மாதிரி நாடி வரும் வாடிக்கையாளர் மட்டும் தான் கொள்முதல்,'' என்று, அவர் சொன்னதும், வந்திருந்தவர் முகத்தில் அப்படியொரு பெருமிதம்.
ஒரே மாதிரி ஆணி ரகத்தில், நுாறு கிராம் ஆணியை வாங்கிக் கொண்டு, விலை கேட்டு, காசு கொடுத்த பின், முகம் நிறைந்த புன்னகையுடன் வெளியேறினார்.
ஏற்கனவே தகவல் கேட்டு வந்திருந்தவரிடம், கேட்ட தகவல்களை பொறுமையாகச் சொல்லி, அவரையும் அனுப்பி வைத்தபின், அமர்ந்திருந்த தேனப்பன் மற்றும் சிவாவிடம் வந்தார்.
''மன்னிக்கணும் தேனப்பன், உங்களை காக்க வச்சுட்டேன். தம்பி, 'பிசினஸ்'ல நல்லா வந்துட்டு இருக்கார்ன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் இன்னும் வளரணும்,'' என, மனப்பூர்வமாக வாழ்த்தினார்.
குறுகுறுப்பாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்த சிவா, ''கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகள் ஆகிறது, நீங்க இந்தத் துறையிலிருந்து ஒதுங்கி. சொல்லப் போனால், இது கூட அவ்வளவு பெரிய கடை இல்லை.
''இந்தத் துறையில், நீங்க இருந்த உயரத்தோடு ஒப்பிட்டால், இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஆனால், இன்னும் இங்கே உங்களுடைய பெயர் நிலைச்சு இருக்கு. உங்கள் கடையைத் தேடி ஆட்கள் வர்றாங்க. அது எப்படின்னு தான் எனக்குப் புரியல அங்கிள்,'' என்றான்.
தேனப்பனை நிமிர்ந்து பார்த்து, மென்மையாக சிரித்தபடி, ''இதோ, இப்போ பார்த்தீங்களே அதுதான், அந்த யுக்தி. நுாறு கிராம் ஆணி வாங்க வந்தவரும், பல ஆயிரத்துக்கு,'பில்' போட்டவரும், எந்த லாபமும் இல்லாமல், தகவலுக்காக வந்தவரும், எனக்கு ஒன்று தான்.
''ஆணி வாங்கினவரே நாளைக்கு ஆயிரக்கணக்கில் பொருள் வாங்கும் தேவை ஏற்படும்போது இங்கே வரலாம்; ஆயிரக்கணக்கில் சாமான் வாங்கியவர், நாளைக்கு நுாறு கிராம் ஆணி வாங்கணும்னாலும், நம் கடைக்கே திரும்ப வரலாம். தகவலுக்கு வந்தவர், அந்த பொருட்களை வாங்கவேண்டிய சந்தர்ப்பத்தில், நம் கடைக்கே வரலாம்.
''இந்த மூன்று பேரையும் என்கிட்ட தக்க வைக்கிறதுல தான், என்னுடைய தொழில் சாமர்த்தியம். அதுக்கு நான் பெரிசா எதையும் செலவு செய்யல. என் கடை வாசல்ல நிற்கிற அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் தர்ற, சமமான மரியாதை, அவர்கள் மனதில், எனக்கு நிரந்தரமான இடத்தை தந்து விடும்.
''அவர்கள் சந்தேகத்துக்கு, முகம் சுளிக்காமல் பதில் சொன்னேன். வியாபாரம் சின்னதோ, பெரிதோ, இரண்டு நபர்களையும் சமமா நடத்தினேன். அவ்வளவு தான், என் பெயர் நிலைச்சு நிற்பதன் ரகசியம்,'' என்று சொல்லிச் சிரித்தார்.
இத்தனை நாளாய் மனதை அரித்த கேள்விக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில், எழுந்து வந்து, ஆதிகேசவனை அணைத்துக் கொண்டான், சிவா.
எஸ். பர்வின் பானு