Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : மார் 03, 2024


Google News
Latest Tamil News
பா - கே

அலுவலகம்...

'மணி... தலைவலி மண்டையை பிளக்கிறது. சூடா காபி குடித்து விட்டு, மொட்டை மாடியில் கொஞ்ச நேரம் இயற்கை காற்றில் உலவி விட்டு வருகிறேன். வாசகர்களிடமிருந்து வந்த, 'இ - மெயில்'களை எடுத்துக்கறியா...' என்றபடி, என் பதிலை எதிர்பார்க்காமல் சென்றார், உதவி ஆசிரியை ஒருவர்.

சிறிது நேரத்தில், 'அப்பப்பா... அம்மம்மா...' என பெருமூச்சு விட்டபடி, 'மூட்டு வலி உயிரை கொல்கிறது?' என்றபடி வந்தமர்ந்தார், 'திண்ணை' நாராயணன்.

'என்னாச்சு இவர்களுக்கெல்லாம்... யாருக்காவது ஏதாவது உடம்புல கோளாறு வந்து கொண்டே இருக்கிறதே... வயதாவதாலா அல்லது உடல் நலனில் கவனம் செலுத்தாததா?' என்று, கவலைப்பட்டேன்.

சிறிது காலத்துக்கு முன், பல நாடுகளுக்கு சென்று வந்த பிரபல மருத்துவர் ஒருவர் கூறியது நினைவுக்கு வர, அதை நாராயணனிடம் கூறி, சமாதானப்படுத்த முயன்றேன்.

அது என்னன்னா...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, மூன்று வழிகளை சொல்லுகின்றனர், விபரம் தெரிந்தவர்கள்.

ஒன்று - நல்ல உணவு

இரண்டு - தேவையான உடற்பயிற்சி

மூன்று - கவலை இல்லாத மனம்

இந்த மூன்றும் சரியாக இருந்தால், எந்த நோயும் நம்மை நெருங்காது என்கின்றனர். இதில், நான்காவதாக ஒன்றையும் அந்த பட்டியலில் சேர்க்கின்றனர்.

அது, மனித நேயம்!

மற்றவர்களை நேசியுங்கள். அடிக்கடி மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். அது, உங்கள் உடல் நலத்துக்கு நல்லது என்கின்றனர்.

அடுத்தவர்களை நேசிப்பதற்கும், நம் உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கும், என்ன சம்பந்தம்?

இதற்கு விளக்கம் கொடுக்கிறார், கலிபோர்னியா பல்கலை கழக, மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் கென்னத் பிரிடியர்:

பொதுவாக, நாம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அல்லது மற்றவர்களை நாம் நேசிக்கிற போது, நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அந்த சமயத்தில், நம் உடலில் நோயை எதிர்க்கும் செல்கள், முழு சக்தியோடு இயங்குகிறது. அவை அப்படி இயங்கும் போது, நோய் ஏதும் வருவதில்லை.

அதே சமயம், நாம் கவலையோடு இருக்கும் போதோ, தனிமையாக வாழும் போதோ, நோய் தடுப்பு செல்கள் உடம்பில் குறைவாகவே இருக்கும். அதன் காரணமாக, இப்படிப்பட்டவர்களுக்கு, நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பது, அந்த டாக்டரின் கருத்து.

இது தொடர்பாக, சான்பிரான்சிஸ்கோவில், ஒரு ஆராய்ச்சி செய்தனர்.

குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து கொண்டிருந்த முதியோர்களை அணுகி, அவர்களது உடலில் என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதை விபரமாக குறித்து வைத்துக் கொண்டனர்.

அந்த முதியோரை எல்லாம் ஒன்றாக திரட்டி, ஒரே இடத்தில் தங்க வைத்து, மூன்று குழுவாக பிரித்தனர். ஒவ்வொரு பிரிவுக்கும், மற்றவர்களுக்கு உதவி செய்கிற மாதிரியான பொறுப்புகளை கொடுத்தனர்.

உதாரணமாக, ஒரு குழுவினர், சிறை சாலைக்கு போய் அங்குள்ளவர்களுக்கு, அன்பான அறிவுரைகளை சொல்ல வேண்டும்.

இன்னொரு குழுவினருக்கு, சின்ன பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற வேலை.

மூன்றாவது குழுவினர், மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளிடம் ஆறுதலாக பேச வேண்டும்.

சிறிது நாட்களில், அந்த தாத்தாக்கள் எல்லாம் ரொம்ப சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

ஆறு மாதம் கடந்ததும் அவர்கள் எல்லாரும், உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் பாதி பேருக்கு நோயின் தன்மை வெகுவாக குறைந்திருந்தது.

அடுத்தவர்களுக்கு உதவுவது என்பது ஒரு வகையான, மனித நேயம். இதையே, அடுத்தவர்களுக்கு உதவுவது புண்ணியம் என்று சொல்லி வந்தனர், நம்மூர் பெரியவர்கள். இதை, இப்போது அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.

என்று, நான் கூறி முடிக்க, அதுவரை அமைதியாக இருந்த லென்ஸ் மாமா, 'பிறருக்கு உதவுவது ஒருபக்கம் இருக்கட்டும், மகிழ்ச்சியாக இருந்தாலே நீண்ட ஆயுள் அமையும்; நோய்களும் வராது என்று, நம்மூர் பிரபல இதயநோய் மருத்துவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பேசியதை கேட்டீர்களா? கையில வெண்ணெயை வெச்சுட்டு, நெய்க்கு அலையுறோம்...' என்றார்.

'ஓய்... லென்சு உமக்கும் சேர்த்து தான் இந்த அறிவுரை...' என்று நாராயணன், 'அட்டாக்' கொடுக்க, 'நற நற'வென பல்லைக் கடித்தவாறு வெளியேறினார், லென்ஸ் மாமா.



நீதியை நிலைநாட்ட, தன் மகனை தேர் காலில் இட்டு கொன்ற, மனுநீதிச் சோழன் கதை எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி, மத்திய பிரதேசத்துல ஒரு மனுநீதிச் சோழன் இருந்தார். அவர் பெயர், மகாராஜா வீரசிங்தேவ். அவரோட பிள்ளை பெயர், இளவரசன் ப்ரவீர்ராய்.

அந்த இளவரசன் ஒருநாள், காட்டுக்கு வேட்டையாட போன போது, ஒரு துறவியை கொன்னுட்டான். இதைக் கேள்விப்பட்ட உடனே, அவனை கைது செய்ய உத்தரவிட்டார், ராஜா.

'அந்த துறவியை கொன்றது நீதானே...' என்று, தன் மகனை பார்த்து கேட்டார், ராஜா.

'நான் கொலை செய்யல. என் வேட்டைக்கு இடைஞ்சலா இருந்த சாமியாரின் அசட்டுத் துணிச்சலுக்கு, தண்டனை கொடுத்தேன். அவ்வளவு தான்...' என்றான், இளவரசன்.

அங்கே நின்னுகிட்டிருந்த, அரசாங்க முக்கியஸ்தர்கள்லாம், 'மகாராஜா, இளவரசருக்கு கடுமையான தண்டனை எதையும் குடுத்துடாதீங்க. ஏன்னா, உங்க சிம்மாசனத்துக்கு வாரிசா வரப்போறவர் அவர்...' என்றனர்.

'குடி மக்களின் மாணிக்கமா விளங்கிய ஒரு துறவியை, இவன் கொன்றது மட்டுமல்லாமல், அதை நியாயப்படுத்தியும் பேசறான். இவன் எப்படி இந்த சிம்மாசனத்துக்கு வாரிசாக முடியும். அதுமட்டுமில்ல, மக்கள் பேர்ல சம நோக்கும், நீதி வழங்குற உறுதியும், பிள்ளை பாசம்ங்கிற பெருமூச்சு பட்டு கருகிப் போயிடக் கூடாது...' என்றார்.

அடுத்த வினாடி, தந்தையின் வாளுக்கு இரையானான், மகன்.

மகாராஜா மற்றவர்களை பார்த்து கம்பீரமாக, 'இளவரசன் இறந்ததால், சிம்மாசனத்துக்கு வாரிசு இல்லாம போயிட்டுதுன்னு நினைக்க வேண்டாம். இந்த நாட்டுல இருக்குற ஒவ்வொரு இளைஞனும் இளவரசன் தான். அவங்க ஒவ்வொருத்தருக்கும், இந்த சிம்மாசனத்துல உட்காரக் கூடிய தகுதி உண்டு...' என்றார்.

இந்த அளவுக்கு நீதியும், நேர்மையும் அங்கே இருந்ததுனால, அந்த ராஜாவுக்கு எதிரா எந்த பகைவனும் எதுவும் செய்ய முடியலை.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us