''அம்மா!'' கதிரின் அலறலில், கை வேலையை போட்டுவிட்டு அம்மா சங்கரியும், அக்கா தாமரையும், ஓடி வந்தனர்.
''என்னடா?''
''இங்க பாரும்மா, அப்பா!''
கதிரின் முகத்துக்கருகே சக்தியின் முகமிருந்தது. கதிரின் முகமோ அருவருப்பில் சுருங்கியிருந்தது.
''உஷ்... வேலை முடிஞ்சு காலையில தான் வந்தார், அப்பா. எதுக்குடா கத்துற?''
''போக்கா, எனக்குப் பிடிக்காதுன்னு தெரியுமில்ல.''
''அதுக்கு இப்படியா அலறுவே. எழுந்ததே லேட்டு, வாயைப் பாரு.''
கோபமும், எரிச்சலுமாய் மகனை முறைத்தபடி, கணவன் மீது மெலிதான போர்வையை போர்த்தினாள், சங்கரி. 'ஏசி'யை அதிகமாக்கி விட்டு, கதவைச் சாத்தினாள்.
கதிர் எப்போதுமே இப்படித்தான். அப்பாவை வெறுக்கிறான் என்று கூறுவதற்கில்லை. ஆனால், அப்பாவின் முகத்தைக் கண்டால் ஆகாது. என்ன மாதிரியான முரண் இது. எப்போது இவன் தன்னை மாற்றிக் கொள்வான்? கணவன் - மனைவி இருவருக்குமே கதிரின் போக்கு மன வேதனையாக தான் இருக்கிறது.
'விடு சங்கரி, குழந்தை தானே? போகப் போகப் புரியும்...' என்பான், சக்தி.
இவளுக்குத் தான் ஆறாது. அப்படி இப்படியென்று இதோ இவன், 6ம் வகுப்பு; 8ம் வகுப்பு போய் விட்டாள், தாமரை.
தாமரையும் எடுத்துச் சொல்லி விட்டாள். ஆனாலும், பிடிவாதம். அப்பாவின் முகம் அவனுக்கு அருவருப்பைத் தரும்.
ஒரு பக்கம், முகம், அழகான, இயல்பான சருமத்தோடு இருக்கும். மறுபுறம் நெருப்பின் கோர தாண்டவம். புருவம், நெற்றியோர சிகை எல்லாம் எரிந்து, கழுத்துக்குக் கீழும் இறங்கி பின்புறத் தோளிலும் தீப்புண்ணின் தழும்புகள் பரவியிருந்தது.
மேலும், சருமத்தில் ஆழமாக ஏற்பட்ட காயத்தால் இடதுபுற உச்சியிலிருந்து கன்னம், கழுத்து வரை, நீளமான அறுவை சிகிச்சையின் பூரான் கால்களைப் போன்ற தையல்கள்.
சங்கரிக்கு இன்றும் அந்த நாளை நினைத்தாலும், அடி வயிறு கலங்கும். கையில், இரண்டு வயது தாமரையோடு ரத்தக் காயமும், தீக்காயமுமாய் கணவனைக் கண்டதுமே விக்கித்துப் போனாள்.
தீயணைப்பு வீரனான அவன் வேலையில் இதெல்லாம் சகஜம் தான். ஆனாலும், ரத்தக்களரியில் நேருக்கு நேர் பார்க்கும் போது, கண்ணை இருட்டியது. நினைவுக்கு வந்த தெய்வங்களையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.
மருத்துவமனையில் அவனோடு பணிபுரியும் இன்னும் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். மற்ற இருவரை விட, இவன் நிலைமை தான் மிகவும் கவலைக்கிடமாய் இருந்தது.
விஷயம் தெரிந்து, இரு வீட்டுப் பெரியவர்களுமே, அடித்துப் பிடித்து ஓடி வந்தனர். மூன்று நாள் கண் திறக்காமல் படுத்திருந்தவன், நான்காம் நாள் கண் விழித்து பேசவும் தான், சங்கரிக்கு உயிரே திரும்பி வந்தது.
காயங்கள் ஆற, நாட்கள் பிடித்தது. பின், அலுவலகத்துக்கு உள்ளேயே வேலையில் அமர்த்தினர். ஏழெட்டு மாதத்திற்கு பின்தான் வழக்கமான பணியிடத்துக்குப் போனான், சக்தி.
முகத்தைப் பாதி மறைத்த, 'ஹுடி டைப் ஷர்ட்' அல்லது 'ஹேட்' என்று மாறியது, அவன் உடை. பணியிடத்தில் மட்டுமே சீருடை.
அப்பாவின் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டாள், தாமரை. ஆனால், அருகில் நெருங்கவே மாட்டான், கதிர்.
துாக்கினால் ஊரையே ரெண்டாக்குவான். சக்தி ஏதாவது வாங்கி வந்து நீட்டினால், அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடி, சங்கரியின் பின்னால் நிற்பான். அவன் வளர வளர, இதுவும் வளர்ந்தது தான் வேதனை.
'ஏங்க... இவன் மட்டும் இப்படி?' என, பலமுறை சக்தியிடம் குமைவாள், சங்கரி.
'சரியாயிடும் சங்கரி. குழந்தை புரியாமல் நடக்கிறான்...' என்பான்.
தன்னை கண்டாலே அவன் கண்களில் வரும் உணர்வு, சக்தியைக் கொல்லாமல் கொல்லும். அருவருப்பும், அசூயையுமான பார்வை. இப்படியும் ஒரு குழந்தை பார்க்குமா... குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா?
ஆசிரியர் - பெற்றோர் சந்திப்புக்கும், தாயைத்தான் அழைப்பான், கதிர். தன் தந்தையாக, சக்தியை எங்குமே முன்னிறுத்தியதில்லை. இதே போல், மாற்றங்களே இல்லாமல், நாட்களும் ஓடியது.
புது கல்வியாண்டுத் துவக்கம். பள்ளியின் முதல் நாள். விடுமுறைக்குப் பின், மகிழ்ச்சியோடு பட்டுப்பூச்சியாய் பள்ளி வளாகமெங்கும் திரிந்தனர், குழந்தைகள். புது உடுப்பு, புதுப் புத்தகங்கள், புது நண்பர்கள். மாணவப் பருவமே புதுமையின் மறு வடிவம் தானே!
கதிரும், தாமரையும் கூட புறப்பட்டு விட்டனர். காலை, 'ஷிப்ட்'டுக்குப் போயிருந்தான், சக்தி.
நடக்கும் துாரம் தான், பள்ளிக்கூடம். ஆனாலும், இருவரும் சைக்கிளில் போய் விடுவர்.
வேலைகளை முடித்து ஓய்வாக அமர்ந்த, சங்கரியை, தீயணைப்பு வண்டியின் கணகண மணிச்சத்தம் உலுக்கியது.
'கடவுளே... எங்கே பத்திக்கிச்சோ தெரியலையே. எல்லாரையும் சேதமில்லாம காப்பாத்திடுப்பா சுப்பிரமணியா, பூவாத்தா...' பிரார்த்தனை உள்ளுக்குள்ளே மின்னல் கொடியாய் ஓடியது.
வெளியே வந்து பார்த்தாள். வீதியே வித்தியாசமாக இருப்பது தெரிந்தது. இந்நேரம், தெருவே இரையெடுத்த மலைப்பாம்பாய் அமைதியாய் படுத்திருக்கும். இன்றோ, ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு வந்த ஒரு சிறுவனிடம், ''டேய் தம்பீ, நில்லு என்னாச்சுப்பா...'' என, வழி மறித்தாள், சங்கரி.
''அங்கே ஸ்கூலுல பத்திக்கிச்சுக்கா,'' என்றான்.
''எந்த ஸ்கூல்டா?''
''சரஸ்வதி பள்ளிக்கூடம்.''
சங்கரி சிலையாய் நிற்க, அவன் போய் விட்டான்.
ஸ்ரீ சரஸ்வதி மந்திர் பள்ளியில் தான், அவளின் இரு செல்வங்களும் படிக்கின்றனர்.
எங்கும் புகை மண்டலம். குழந்தைகளும், பெற்றோரும் தள்ளுமுள்ளு என, அல்லோலகல்லோலப் பட்டது, பள்ளி வளாகம். பெரிய மைதானத்தினுள்ளே இரண்டு தீயணைப்பு வண்டிகள் நிற்க, வேகப் பாய்ச்சலுடன் தண்ணீர் பாய்ந்தது.
சில தீயணைப்பு வீரர்கள், அங்குமிங்குமாய் ஓடி, குழந்தைகளை மீட்கும் வேலையில் இருந்தனர். ஒருவர், நெருப்பினிடையே பாய்ந்து, யாரையோ இழுப்பது கலங்கலாய்த் தெரிந்தது.
பிள்ளைகளைத் தேடினாள், சங்கரி. புகையாலும், பயத்தாலும், கண்களை மறைத்தது கண்ணீர்.
''கதிரு, தாமரே...'' பல்வேறு கூச்சலின் நடுவே, அவள் குரல் அவளுக்கே கேட்காமல் தொண்டைக்குள்ளேயே அடங்கியது. கண்ணைத் துடைத்து, பிள்ளைகளைத் தேட, யாரோ முந்தானையை இழுக்க, திரும்பினாள்.
மேலிருந்து கீழ்வரை பார்வை தழுவி, ''தாமரே... கண்ணம்மா!'' கன்னம் பிடித்து முத்தமிட்டு, உச்சி முகர்ந்தாள்.
''எனக்கு ஒண்ணுமில்லேம்மா. தம்பியும் தப்பிச்சுட்டான்!''
''தம்பி எங்கடா...''
கை துாக்கிக் காட்டினாள், தாமரை.
ஒரு தீயணைப்பு வீரரின் அருகே நின்று, கண்ணிமைக்காமல் எங்கோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான், கதிர். அவன் பார்வை போன திசையில் எரியும் உத்திரத்தின் எரியாத பாகத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தவர் தோளில், ஒரு சிறுவன்.
அவர்களுக்கு நேர் எதிரே, சாய்வான படுக்கை போல ஒன்று உயர்த்தப்பட, அந்த வீரர் குதிக்கவும், உத்திரக்கட்டை எரிந்தபடியே சரிந்து கீழே விழவும், சரியாக இருந்தது.
கீழே விழுந்தவரின் கையிலிருந்த சிறுவனைத் துாக்கினார், செவிலி ஒருவர். அந்த வீரரோ மயங்கிக் கிடந்தார்.
அவரைத் துாக்கித் தோளில் போட்டுக் கொண்ட ஒருவர், வேப்பமரத்தடிக்கு ஓடினார். இன்னொருவர், மர பெஞ்சை எடுத்துப் போட்டார். அதன் மீது மயங்கியவரை படுக்க வைக்க, வேகமாய் அங்கே ஓடினான், கதிர்.
''அப்பா...''
கதிரின் குரல் காற்றைக் கிழித்தது.
தாமரையும், சங்கரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே ஓடினர்.
அங்கே படுத்திருந்தது, சக்தி தான். அவன் கன்னத்தை தாங்கி, ''அப்பா அப்பா...'' என்றான், கதிர்.
''உங்கப்பாவா தம்பி, பயப்படாத. மயக்கம் தான்,'' என்றார், ஒருவர்.
''தம்பி, அழக்கூடாது. டாக்டர், இப்போ வந்துடுவார்...'' என்றபடியே, சக்தியின் கன்னத்தை படபடவெனத் தட்டினார், இன்னொருவர்.
''அடிக்காதீங்க, அப்பாவுக்கு வலிக்கும்,'' என, அழுதான்.
மகனின் அழுகை ஆனந்தமாய் இருந்தாலும், அப்பாவுக்கான அழுகை!
''கதிரு!''
''அக்கா, அப்பாவை எந்திரிக்கச் சொல்லுக்கா. நீ சொன்னா கேட்பாரு,'' என்று சொல்லி, தாமரையின் இடுப்பைக் கட்டிக் கொண்டான்.
மருத்துவர் சிகிச்சையை ஆரம்பிக்க, இருவரையும் அணைத்துக் கொண்டாள், சங்கரி.
திமிறியபடி உருவிக் கொண்டு டாக்டரிடம் போய், ''எங்கப்பா... எங்கப்பா...'' அழுகையில் வார்த்தை பிசிறியது.
''எஸ்... மை பாய்! உங்கப்பா ஒரு ரியல் ஹீரோ,'' என்று சொல்லி, ஊசி போட்டார், டாக்டர்.
லேசாய் இருமினான், சக்தி. உடலும் அசைந்து, குலுங்கியது.
''உங்கப்பா மாதிரி, நீயும் தைரியமா இருக்கணும். இன்னிக்கு, உங்கப்பா எத்தனை பசங்களை காப்பாத்தினார் தெரியுமா... இதோ இந்த நெருப்புக் காயமும், உன்னை மாதிரி யாரையோ காப்பாற்றிய சமயம் ஏற்பட்டது தான்,'' என, கன்னத்தைத் தொட்டுக் காட்டினார், டாக்டர்.
சக்தியின் தோளில் தலை சாய்த்து, சிதைந்து போயிருந்த கன்னத்துச் சதையில் முத்தமிட்டான், கதிர்.
சக்தியின் கை, மகனைத் தழுவியது.
''சக்தி, டேக் கேர்... எல்லாம் முடிஞ்சதும், மருத்துவமனைக்கு வாங்க. 'செக்' பண்ணி, காயத்துக்கு மருந்து போடணும். பையன், உங்க மேல, 'ஹீரோ வொர்ஷிப்' வச்சிருக்கான். ரொம்பவே பாசக்காரப் பய. எங்கப்பா எங்கப்பான்னு அழுதுட்டான்,'' என்றபடியே, கதிரின் தலைக்கேசத்தை கலைத்து விட்டு நகர்ந்தார், டாக்டர்.
சக்தி கை நீட்ட, தாமரை அருகே வந்தாள்.
கண்ணீரைத் துடைத்தபடி, சங்கரியைப் பார்த்து கண் சிமிட்டினான், சக்தி.
தள்ளி நின்றிருந்த நண்பனைக் கையசைத்துக் கூப்பிட்டான், கதிர்.
மீண்டும் முத்தமிட்டு, ''இவரு எங்கப்பாடா...'' என்று, பூவாய்ச் சிரித்தான்.
'வீட்டுக்குப் போனதும், சுத்திப் போடணும்...' என, நினைத்தபடி, மனநிறைவோடு பார்த்தாள், சங்கரி.
புருஷன், மனம் விட்டு சிரிப்பதும், மகள், அவன் தோளில் தன் முகத்தை பதித்திருப்பதும், மகன், கண்ணீரோடு தகப்பனின் சிதைந்த கன்னத்தில் அழுந்த முத்தமிடுவதும், கவிதையாய் இருந்தது.
ஜே. செல்லம் ஜெரினா