PUBLISHED ON : பிப் 11, 2024

கோவைக்குத் திரும்பி வந்ததிலிருந்தே, பழைய தோழர், தோழிகளான எழுத்தாளர்கள் எவரையேனும், சந்திக்க நேரலாம் என, எதிர்பார்த்தே இருந்தாள், சங்கவி. அவ்வாறே துணிக்கடை ஒன்றில் பேராசிரியை மகேஸ்வரியை சந்திக்க நேர்ந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு என்பதால், இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி.
சம்பிரதாயமான குடும்பக் குசல விசாரிப்புகளுக்குப் பின், ''நீ கவிதை எழுதறதை விட்டிருக்கக் கூடாது. நம் நட்பு வட்டாரத்தில் பலரும் இப்ப, படைப்பாளிகளாக வளந்துட்டாங்க. தமிழ்நெஞ்சன், சாஹித்ய அகாடமி வாங்கிட்டாரு. கதிர்மதி, பிலிம் டைரக்டர். தேன்நிலவனும், ரெண்டு படத்துல பாட்டு எழுதிட்டான்.
''என்னோடது, அஞ்சு புக் வெளியாயிடுச்சு. அவ்வளவு ஏன், நமக்குப் பின்னாடி எழுத வந்தவங்களில் பலர், அஞ்சாறு வருஷத்துலயே நட்சத்திர எழுத்தாளரா ஆகிட்டாங்க. நீயும் தொடர்ந்து எழுதிட்டிருந்தா, இந்த பட்டியலில் உம் பேரும் இருந்திருக்கும்,'' என்றார், மகேஸ்வரி.
விரக்தியாகச் சிரித்தாள், சங்கவி.
மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு, ''உங்க வீட்டுக்கு வர்றேன். அப்ப, 'டீட்டெய்லா' பேசலாம்,'' என விடைபெற்றார்.
நலம் விரும்பியான அவரைச் சந்தித்ததும், தம் தோழர்களில் சிலர் இப்போது உயர் நிலையை அடைந்திருப்பதை அறிந்ததும், சங்கவிக்கு மிக்க மகிழ்ச்சி. அதேசமயம், தான் இழந்ததை எண்ணி, மிகுந்த வருத்தமடைந்தாள்.
கல்லுாரிக் காலத்திலேயே கவிதைகள் எழுதும் பழக்கம், சங்கவிக்கு இருந்தது. கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று பரிசுகளும் பெற்றிருக்கிறாள்.
இவர்களின் கல்லுாரியில், தமிழ்ப் பேராசிரியையாக இருந்தவர் தான், மகேஸ்வரி. மாணாக்கர்களிடம் நட்புணர்வோடும், அன்போடும் பழகக் கூடியவர்.
காதல் கவிதை எழுதுவது, கல்லுாரி இலக்கிய விழாக்களில் பங்கேற்பது என்றிருந்தவர்களுக்கு, சீரிய இலக்கியங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் படைப்புத் திறன் மேம்படவும் செய்தார்.
மாதாந்திர இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று, கவியரங்கங்களில் பங்கேற்க வைத்ததுடன், அங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் எழுத்தாளர்களுடன் பழக்கம் ஏற்படுத்தினார்.
பேராசிரியையின் வழி காட்டலால் மாணாக்கர்கள் பலரும், இளம் கவிஞர்களாகவும், கதாசிரியர்களாகவும் உருவாகி, வளர்ந்தனர். சங்கவி உள்ளிட்ட அவர்களின் படைப்புகள் இலக்கியச் சிற்றிதழ்களிலும், ஜனரஞ்சக வார இதழ்களிலும் வெளியாயின.
சங்கமித்ரை என்ற புனைப்பெயரில், கோவை இலக்கிய வட்டாரத்தில் ஓரளவு அறியப்படுகிறவளாக ஆனாள், சங்கவி. ஜனரஞ்சக இதழ்களில் இவளது கவிதைகள் வெளியாகும்போது அண்டை அயலார்களும், உறவினர்களும் மகிழ்ச்சி தெரிவிப்பர். சக படைப்பாளிகள், முகநுால் நட்புகள் ஆகியோரின் பாராட்டுகளால், உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
கல்லுாரிக் காலம் முடிந்து, வேலைக்குப் போன பின்னும் அது தொடர்ந்தது. அலுவலகத்திலும் இதனால் அவளுக்கு தனி மதிப்பு இருந்தது. அதேசமயம், வீட்டில் அம்மாவும், அண்ணனும் அதிருப்தி தெரிவித்தனர்.
'இந்த மாதிரி கதை,- கவிதை எழுதறது, மேடையில முழங்கறதை எல்லாம் நிறுத்திக்க. நடைமுறை வாழ்க்கைக்கு அதெல்லாம் ஒத்து வராது...' என கண்டித்தான், அண்ணன்.
'மொதல்ல, இவ கவிதை எழுதறது, எழுத்தாளருக கூட்டத்துக்குப் போறது, புஸ்தகம் படிக்கிறது எல்லாத்தையும் நிறுத்தணும். கண்ட கண்ட புஸ்தகங்களைப் படிச்சுட்டு, மண்டை புழுத்துக் கெடக்கறா.
'இப்பவே அக்கம் பக்கம், சொந்த பந்தங்ககிட்ட கெட்ட பேரு. நம்மகிட்டயே எப்புடியெல்லாம் எதுத்துப் பேசிட்டிருக்கறா... நாளைக்குப் போற எடத்துலயும் இதே மாறி பேசிட்டிருந்தா வில்லங்கமாயிரும்...' அடிக்கடி இடித்துரைத்தாள், அம்மா.
திருமண பேச்சு வந்ததும், இவளது கவிதைக் கிறுக்கு பற்றி, வரன் தரப்புக்கு சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனை விதித்தனர்.
சில வரன்களுக்குப் பிறகு திருமணம் நிச்சயமானதும், 'கவிதை எழுதறது, புஸ்தகம் படிக்கறது, கிறுக்கர் கூட்டத்துக்குப் போறது எல்லாத்தையும் இன்னையோட மூட்டை கட்டி வெச்சிரு. மாப்பளைகிட்டயோ, அவுங்க தரப்புலயோ யாருகிட்டயும் இதைப் பத்தி மூச்சு விட்டுடாதே.
'அறிவாளியா இருந்து பிரயோஜனமில்ல. புத்திசாலித்தனமா நடந்து, நல்ல பிள்ளைன்னு பேரெடுத்துப் பொழைக்கணும். அங்கேயும் முற்போக்கு, பெண்ணுரிமை, ஆணாதிக்கம்ன்னு வீர வசனம் பேசி, விவகாரம் பண்ணிட்டு வந்தீன்னா, எங்களால சமாளிக்க முடியாது. சொல்லிட்டேன்...' என, இறுதித் தீர்ப்பாக சொல்லி விட்டாள், அம்மா.
வேறு வழியின்றி அவள், அதை அனுசரிக்க வேண்டியதாயிற்று.
கணவர் குலசேகரின் வீடு, கோவையில் தான் என்றாலும், அப்போது பெங்களூருவில் பணிபுரிந்து கொண்டிருந்தான். திருமணம் ஆனதும், பெங்களூரு சென்று விட்டனர். கணவரது பெற்றோர் மட்டும், கோவையில் இருந்தனர்.
இந்த இடைக்காலத்தில் பழைய இலக்கியத் தோழர், தோழிகள் எவரோடும் தொடர்பில் இல்லாமல் தவிர்த்தாள். அவளது எழுத்துக் கனவுகள், லட்சியங்கள் யாவும் பொய்யாய், பழங்கதையாய் ஆகிவிட்டன.
சராசரிக் குடும்பப் பெண்ணாக, கணவனுக்கு அடங்கி நடக்கும் மனைவி, 10 வயது மகனின் பாசமிகு தாய் என்ற நற்பெயருடன், மற்றவர்களின் அபிமானத்துக்கும் உரியவளாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.
இப்படியான நிலையில், குலசேகரின் தந்தை இறந்து விட, தாயாரை பெங்களூருக்கு அழைத்தபோது, அவர் வர மறுத்து விட்டார். நீண்ட காலமாக குலசேகருக்கும் சொந்த ஊருக்கே சென்று விடும் விருப்பம் இருந்ததால், சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும், கோவைக்கே வந்து விட்டனர்.
தன் வீட்டுக்கு பேராசிரியை மகேஸ்வரி வருவதாக சொன்னது, சம்பிரதாயத்துக்காக இருக்கலாம் என்று தான் நினைத்தாள், சங்கவி. ஆனால், ஞாயிறன்று, இலக்கியத் திடல் கோவை வாணன், கவிஞர் நிலாபாரதி ஆகியோரும், பேராசிரியையுடன் காரில் வந்து இறங்கினர்.
தன் பேராசிரியை, தனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் என சொல்லி, அவர்களை கணவர், மாமியாருக்கு அறிமுகப்படுத்தினாள்.
பேராசிரியை மற்றும் இரண்டு எழுத்தாளர்கள் சங்கவியை பார்க்க வந்திருப்பது வியப்பளித்தாலும், அவர்களை வரவேற்று, உபசரித்தார், மாமியார். ஆனால், அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை, குலசேகர். அவர்களின் வருகையை அவன் விரும்பவில்லை என்பது தெரிந்தது.
''கல்யாணத்துக்கு வந்திருப்பீங்களோ என்னவோ, பார்த்த ஞாபகம் இல்ல. ரொம்ப வருஷம் ஆயிடுச்சுல்ல,'' என்றார், மாமியார்.
''ஆமாங்கம்மா. நான் மட்டும் வந்திருந்தேன். இவங்க வரல,'' என்றார், பேராசிரியை.
தன் ஆய்வு மற்றும் கவிதை நுால்கள், தமிழ்நெஞ்சனின் சாஹித்ய அகாடமி நாவல், தேன்நிலவனின் கலை - இலக்கியக் காலாண்டிதழ் ஆகியவற்றை சங்கவிக்கு அன்பளித்தார், பேராசிரியை.
அவளிடமிருந்து அவற்றை வாங்கிப் புரட்டிப் பார்த்து, ''இதையெல்லாம் படிக்கணும்ன்னா பொறுமை வேணும்,'' என, டீப்பாய் மீது போட்டான், குலசேகர்.
அவனது அந்த அநாகரிகச் செயலால் விருந்தாளிகளின் முகம் சுண்டியது; சங்கடமாக நெளிந்தாள், சங்கவி.
கண்ணாடியை எடுத்து மாட்டி, அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்த்து, ''பொறுமை மட்டும் பத்தாதுடா... இதெல்லாம் படிக்கணும்ன்னா நல்ல ரசனையும், அறிவும் வேணும்,'' என்றார், மாமியார்.
அதைக் கேட்டதும் விருந்தினர்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
''அது சரிம்மா, அப்படியே இருந்தாலும், இந்த புத்தகங்களை படிக்கணும்ன்னா, இவளுக்கும் அது வேணுமே,'' என்றான், குலசேகர்.
தன்னை உயர்வாக காட்டிக் கொள்வதற்காக, மற்றவர்கள் முன், அவளை மட்டம் தட்டி பேசுவது வழக்கமானது தான். அவள் அதில் காயம்பட்டாலும், வெளிக்காட்டாமல் பொறுத்துக் கொள்வாள். எனினும், இவர்கள் முன் அப்படி செய்ததும், மிகவும் வருந்தினாள், சங்கவி.
''சங்கவியை அவங்க வீட்டுல தடுக்காம இருந்திருந்தா, அவ இந்நேரம் இது மாதிரி பத்து புத்தகங்களை எழுதி வெளியிட்டிருப்பா. அது தெரியுமா உங்களுக்கு?'' என்றார், பேராசிரியை.
குலசேகரின் முகத்தில் அதிர்ச்சி. மனைவியையும், பேராசிரியையும் மாறி மாறிப் பார்த்து, ''என்ன சொல்றீங்க?'' என்றான்.
சங்கவியின் எழுத்துப் பணி முடக்கப்பட்ட கதைச் சுருக்கத்தை தெரிவித்தார், பேராசிரியை. குலசேகரின் முகம் உறைந்திருந்தது.
''அடடா... எனக்கு இந்த விஷயம் தெரியாமப் போச்சே. தெரிஞ்சிருந்தா, நான் அப்பவே, சங்கவி தொடர்ந்து எழுதறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணியிருப்பேனே,'' என்றார், மாமியார்.
அது இவளுக்கு ஆறுதலையும், விருந்தினர்களுக்கு ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.
''ரொம்ப சந்தோஷம்மா. போனது போகட்டும், இனிமேலாச்சும் சங்கவியை எழுத அனுமதிச்சா போதும்,'' என்றார், பேராசிரியை.
''வழக்கம்போல, அடுத்த ஞாயிறு நம் கூட்டம். நீங்க அவசியம் கலந்துக்கணும்,'' என்று, சங்கவியிடம் அழைப்பு விடுத்தார், கோவை வாணன்.
அவர்கள் சென்ற பின், இவளது எழுத்துப் பணிகள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், மாமியார்.
ஞாயிறு காலை, 9:30 மணி.
''நான் இலக்கியத் திடல் கூட்டத்துக்குப் போயிட்டு வரட்டுங்களா?'' என, கணவனிடம் அனுமதி கோரினாள், சங்கவி.
''போறதுன்னாப் போய்க்க. ஆனா, திரும்ப இங்க வராத.''
அவள் வாயடைத்து நின்றாள்.
''ஏன்டா அப்படிச் சொல்ற?'' என்றார், மாமியார்.
''நான் சொல்றது இருக்கட்டும். அவுங்கம்மாவே இதெல்லாம் வேண்டாம்ன்னு தடுத்திருக்காங்க. பொம்பளை பொண்ணு,- கலை, இலக்கியம், சமூக சேவை, அரசியல், இயக்கம், போராட்டம்ன்னு போறது குடும்பத்துக்கு நல்லதில்ல. அதே மாதிரி, அவுங்களுக்கு அளவுக்கு மீறி அறிவு இருந்தா ஆபத்து.''
''இதுதான் அறிவில்லாத பொது புத்தி. ஆணாதிக்கம்.''
தான் சொல்ல நினைப்பதை, மாமியார் சொன்னதும், சங்கவிக்கு ஆச்சரியமாக இருந்தது.
''அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதுக்குன்னு கேட்ட காலத்துலருந்து, இன்னைக்கு வரைக்கும், உன்னை மாதிரி ஆம்பளைக மாறாமத்தான் இருக்கறீங்க. பொண்டாட்டிக என்னைக்கும் வடிச்சுக் கொட்டற வேலைக்காரியா மட்டும் இருக்கணுமா?
''அவுங்களுக்குன்னு அறிவு, தனி திறமை, இலக்கு, லட்சியம் எதுவும் இருக்கக் கூடாதா? அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரைக்கும் பொம்பளைங்க சாதிச்சதெல்லாம், உங்க கண்ணுக்குத் தெரியாதா?'' என்றார், மாமியார்.
''பொம்பளைகன்னா, வீட்டுக்கு அடக்க ஒடுக்கமா இருக்கணும்,'' என்றான், குலசேகர்.
''உங்கப்பாவும் இப்படிப் பேசித்தான், என் கனவை, லட்சியத்தை நாசமாக்கினாரு,'' என்றார்.
குலசேகரின் அம்மாவுக்கு, பரதநாட்டியம் என்றால் உயிர். அரங்கேற்றமும் முடிந்திருந்தது. அக்கலையில் சாதித்து, புகழ் பெற வேண்டும் என்பது, அவரது லட்சியம்.
ஆனால், அவரது குடும்பத்தார், 16 வயதிலேயே கட்டாயப்படுத்தி, திருமணம் செய்து வைத்து விட்டனர். திருமணத்துக்குப் பின், நடனத்தை தொடர கணவரிடம் அனுமதி கேட்டபோது, 'பரத நாட்டியம் ஆடி, தாசித் தொழில் பண்ணப் போறியா?' என்று கூறி மறுத்தார்.
மறுத்ததைவிட இப்படி அவமதித்ததை இவரால் தாளவே முடியவில்லை. கோபமும், வெறுப்பும் கொண்டு, சலங்கை, நடன ஆடை, அணிகலன்கள், நடன நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள் ஆகிய அனைத்தையும், குப்பையில் போட்டு எரித்து விட்டார்.
முன்பு நடந்த அந்த சம்பவத்தை மாமியார் கூறவும், நெகிழ்ந்து வருந்தினாள், சங்கவி.
''உங்கப்பா பண்ணுன தப்பை நீயும் பண்ணாதடா. அவராவது அந்தக் காலத்து மனுஷன். நீ இந்தக் காலத்துப் பையன். உனக்கு இதுக்கு மேல விளக்க வேண்டியதில்லை,'' என்றார்.
''சரி, வீட்டுக்கு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு, மத்த நேரத்துல எழுதவோ, படிக்கவோ, கூட்டத்துக்கோ போகட்டும். ஆனா, அதனால குடும்பத்துக்குக் கெட்ட பேரோ, தொந்தரவுகளோ வரக் கூடாது. அப்பறம், எங்கிட்ட அதுக்கு பணம் கேட்கவும் கூடாது,'' என, வேண்டா வெறுப்பாக கூறி, அறைக்கு சென்று விட்டான், குலசேகர்.
மாமியாரை அணைத்து, ''தேங்க்ஸ் அத்தை,'' என்றாள், சங்கவி.
உற்சாகத்தோடு சட்டென தயாராகி, ஸ்கூட்டியை, 'ஸ்டார்ட்' செய்தாள், சங்கவி.
''கொஞ்சம் இரு, நானும் துணைக்கு வர்றேன்,'' என்றபடியே வந்து, பில்லியனில் ஏறிக் கொண்டார், மாமியார்.
அமிர்தவர்ஷினி