Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/13 வயது பால எழுத்தாளர், சிவகவி கலசன்!

13 வயது பால எழுத்தாளர், சிவகவி கலசன்!

13 வயது பால எழுத்தாளர், சிவகவி கலசன்!

13 வயது பால எழுத்தாளர், சிவகவி கலசன்!

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
சமீபத்தில், சென்னையில் நடந்த, 47வது புத்தகக் காட்சியை சுற்றி வரும்போது, அந்தக் காட்சி கண்ணில் பட்டது.

புத்தகம் விற்கும் அரங்கு ஒன்றின் வாசலில், வெள்ளை வேட்டி, சட்டை, இடுப்பில் துண்டு, மார்பில் ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய விபூதி பட்டை. மயக்கும் புன்சிரிப்புடன், பால் மணம் மாறாத முகத்துடன் சிறுவன் ஒருவன், கைகளில் சில புத்தகங்களை வைத்து, சிவபுரம் புத்தக அரங்கில், விற்பனை செய்து கொண்டிருந்தான்.

விசாரித்த போது தான், அந்தப் புத்தகங்கள் அனைத்தும், அச்சிறுவனே எழுதியது என்று தெரிந்தது.

சென்னை வளசரவாக்கத்தில் செயல்பட்டு வரும், சிவபுரம் அறக்கட்டளையின், குருவாக இருப்பவர், சிவபுரம் ஐயா தம்பிரான் தோழர், கபிலனார்.

இவர், மன்றத்தின் உறுப்பினர் குடும்பத்து பிள்ளைகளுக்கு, மெய்யறிவு பாடம் நடத்தி வருகிறார். 3 வயதுக்கு மேற்பட்டோர், மெய்யறிவைக் கற்றுக் கொள்ளலாம்.

இவரிடம் பாடம் படித்த, சபரீஷ் - பிரதீபா தம்பதியின் மகன், கலசன். 10 வயதாகும் போது, சிவ பாத பூஜை செய்யும்போது, அவனுக்குள் சிவபெருமான் திருவருள் வெளிப்பட்டது. அன்று முதல், கவிதை எழுத ஆரம்பித்துள்ளான். கவிதைகள் மிக நன்றாக இருக்கவே, அவனை, அனைவரும் ஊக்குவித்தனர்.

அன்று முதல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்மிகம், சமூகம், நட்பு, அன்பு, உண்மை, ஒழுக்கம் என்பதை வலியுறுத்தி, சிறு சிறு கவிதைகள் எழுத ஆரம்பித்தான்.

அந்தக் கவிதைகளை தொகுத்து, 'கலசம் வருகிறது' என்ற தலைப்பில், புத்தகம் வெளியிட்டனர். அந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து, 'நெஞ்சே ஒரு தாளாக, அடியேனை ஆண்ட இன்பொருளே' மற்றும் 'வானத்தை வாழ்த்திவிட்டு உறங்கினேன்' போன்ற தலைப்பில், கவிதை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

அந்தக் கவிதை புத்தகங்களைத்தான், புத்தகக் காட்சியில் விற்பனை செய்து கொண்டிருந்தான்.

'கலசம் வருகிறது' என்ற புத்தகத்தில், 'மனதைக் கொடுத்தால் பகைக்கிறார்கள், காசைக் கொடுத்தால் நடிக்கிறார்கள், இதில் தெய்வத்தைக் கூட மறக்கிறார்கள்...' என்ற வரிகளைப் படித்ததும், 'இவ்வளவு ஆழமான வரிகளின் அர்த்தம். இந்த வயதில், உணர்ந்து தான் எழுதியிருக்கிறீரா?' என்று, அவனிடம் கேட்டேன்.

அவனது தெளிவான, தீர்க்கமான பதிலின் மூலம், அவனே அனைத்தும் எழுதியது என்பது உறுதியானது.

'உங்கள் வயதில் உள்ள குழந்தைகளைப் போல, உடையோ, உருவமோ இல்லையே என்ற வருத்தம் உண்டா...' என கேட்டேன்.

'வருத்தமா, அறவே கிடையாது. மகிழ்ச்சி தான் மனம் நிறைய இருக்கிறது. நான், என் குழந்தை பருவத்திற்குரிய எந்த சந்தோஷத்தையும் இழக்கவில்லை, குறைக்கவில்லை. அதே நேரம், பத்தோடு பதினொன்றாக இருக்கவும் விரும்பவில்லை.

'வாழ்க்கை என்பது, அறத்துடன் வாழ்தலே என்ற, எங்கள் குருவின் கொள்கையில் வாழ்கிறேன்; வளர்கிறேன். ஆசி கூறி, வாழ்த்துங்கள். என் புத்தகங்களை வாங்கி, உங்கள் குழந்தைகளுக்கு பரிசாக கொடுங்கள். ஈசனையும், தமிழையும் எக்காலமும் மறக்காமல் இருக்க கற்றுக்கொடுங்கள்...' என்றான்.

இந்த சிறுவனிடம் பேச: 9025309680.

எல். முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us