Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : ஜன 28, 2024


Google News
Latest Tamil News
பா - கே

பல்கலைக் கழகம் ஒன்றில், சமூகவியல் துறை பேராசிரியராக பணிபுரிபவர், அவர். அவ்வப்போது, ஆசிரியரை சந்தித்து, துறை சம்பந்தமான, 'நியூஸ்' இருந்தால், தருவது வழக்கம்.

வழக்கம் போல், அன்று அலுவலகம் வந்தவர், என்னை சந்தித்து, 'மணி, மாணவர் ஒருவர், பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புக்காக, பழங்குடியினர் பற்றி, ஆய்வு கட்டுரை ஒன்றை, சமீபத்தில் சமர்பித்திருந்தார்.

'அதில் இருந்த விஷயங்கள், 'இன்ட்ரஸ்ட்'டிங்காக இருக்கவே, உன்னிடம் பகிர்ந்துக்க, உடனே கிளம்பி வந்துட்டேன்...' என்று, பலமான பீடிகையுடன் கூறினார்.

பேராசிரியர் கூறியதிலிருந்து, ஏதோ விஷயம் இருப்பதை அறிந்து, அவர் கூறுவதை கேட்க ஆயத்தமானேன்.

அது:

பழங்குடியினரான, லம்பாடி இனத்தில், ஒரு வழக்கம் உள்ளது. திருமணமாக போகும் மணப்பெண்ணை, எருதின் மீது உட்கார வைத்து, ஊர்வலம் விடுவர்.

திருமணத்திற்கு முன், பெண் ஏதாவது தவறு செய்திருந்தால், அந்த எருது நடக்காதாம். அந்த காலத்தில், பெண்ணின் கற்பைச் சோதிக்க, இப்படி நடந்துள்ளது.

மாடு, சிவனின் வாகனம். சிவபெருமானே பெண்ணின் புனிதத்திற்கு சாட்சி சொல்வதாக நம்பிக்கை.

கொல்லி மலைவாசிகளான, சித்தேரி மலை மக்களிடம், நுாதன வழக்கம் உண்டு.

பத்து வயது சிறுவனுக்கு, 15 - 20 வயதுள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். இதிலும், தாலி கட்டி, மாலை மாற்றிக் கொள்வதுண்டு.

திருமணத்திற்கு, கிராமத்தில் உள்ள எல்லாரும் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குறிப்பிட்ட அளவு நெல் கொடுத்து விடுவர். அவரவர், நெல் குத்தி, சோறு சமைத்து, சோற்றை மாப்பிள்ளை வீட்டில் சேர்க்க வேண்டும். அதைக் கொண்டே பொது விருந்து நடக்கும்.

கல்யாணத்தில், சோறும், பருப்பு சாம்பாரும் முக்கிய இடம்பெறும். பருப்பு சாம்பாரை, பருப்பு ஆனம் என, குறிப்பிடுவர்.

கணவன் இறந்து போனால், மனைவியின் தாலியை கழற்றுவதில்லை. மாறாக, அவள் விரும்பிய வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், தாலியை கழற்றி கொடுத்து விட்டு போய் விடலாம்.

தொட்டிய கம்பளத்து நாயக்கர்களிடம் ஒரு நுாதன பழக்கம். இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, கட்டாயம் ஒரு வாரம் வேட்டைக்கு சென்று வருவர். அவ்வாறு போகவில்லை என்றால், பச்சாயி சாமி கோபித்து கொள்ளும் என்று நம்புகின்றனர்.

கார்த்திகை மாதமோ, பொங்கல் தினத்துக்கு அடுத்து வரும் கரிநாளிலோ, வீட்டுக்கு ஒருவர் வந்து சாமி கும்பிட்டு, வேட்டைக்கு புறப்படுவது வழக்கம்.

பெருந்துறையிலிருந்து காட்டு பகுதிகளாக பார்த்து, ஒரு வாரத்துக்கு வேட்டையாடுவர். அந்தப் பகுதியிலுள்ள மக்கள் இவர்களுக்கு உதவுவர்.

ஏற்காடு மலைவாசி மக்களிடையே, பெரிய மலையாளி, சின்ன மலையாளி, கொல்லி மலைக்காரன், நடு மலையாளி, கல்ராயன் மலைக்காரர் என, பல இனங்கள் உண்டு.

இவர்களிடையே, மாப்பிள்ளை, பெண்ணுக்கு, திருமண பரிசு தருவர். திருமண செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.

திருமணத்தில் ரொம்ப முக்கியமானது, சாராயம் தான். திருமணத்துக்கு முன்பே, இத்தனை பாட்டில் சாராயம் தர வேண்டும் என பேசிக் கொள்வர். அதில் குறைந்தால், கலாட்டாவே நடக்கும்.

புருஷன் செத்துப் போனால், பொண்ணு, வேறு கல்யாணம் பண்ணிக்கலாம். புருஷன் இருக்கும் போது கூட, இவங்க இனத்துல இன்னொருத்தனோட சேர்ந்துக்கலாம். ஆனால், முதல் புருஷன் கட்டின தாலியை தான் அவள் போட்டுக்கிட்டு இருக்கணும். தாலியை மட்டும் மாத்திக்கக் கூடாது. வேற ஒருத்தனோட இவ போய் சேர்ந்துட்டான்னா, முதல் புருஷனுக்கு, இவ்வளவு செலவு தொகைன்னு கொடுத்துடணும்.

என்று, பேராசிரியர் கூறி முடிக்கவும், 'மாணவரது ஆராய்ச்சி கட்டுரையை முழுவதுமாக படிக்க, ஆவலாக உள்ளது. அல்லது பழங்குடியினர் பற்றிய புத்தகம் ஏதாவது இருந்தால் வாங்கி வாருங்கள். முழுவதுமாக படித்து அறிய விரும்புகிறேன்...' என்றேன்.

'சரி...' என்பதற்கு அடையாளமாக தலையாட்டி, விடைபெற்றார், பேராசிரியர்.

--



ஒரு மனிதனின் மனப்போக்கையும், குணாதிசயத்தையும், அவனது நடவடிக்கைகளின் மூலமும், பேச்சின் மூலமும் கண்டுபிடித்து விட முடியும். மனோதத்துவ நிபுணர்கள் இதை எளிதில் கண்டுபிடித்து விடுவர்.

உதாரணமாக, சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம், வளைகோடு எனும் இந்த ஐந்து உருவங்களில், எந்த உருவம் ஒருவருக்கு பிடிக்குமோ, அதை வைத்தும், ஓரளவு மனப்போக்கை சொல்ல முடியும்.

சதுரம் பிடித்திருந்தால், அவர்களிடம், எந்த ஒரு செயலையும் செய்யும் முன், தெளிவான திட்டமிடல் இருக்கும். எந்த ஒரு செயலையும் தனியாளாக செய்து முடிக்கவே விரும்புவர். மேலும், தங்கள் திறமையை பிறர் பங்கு போட்டுக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

செவ்வகம் பிடித்திருந்தால், எந்த ஒரு செயலும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்று விரும்புவர். அதுபோல், சரியான நேரத்தில் ஒவ்வொரு பணிகளும் நடைபெற வேண்டும் என்பது, அவர்களது எண்ணமாக இருக்கும். சிறந்த நிர்வாகியாக செயல்படும் திறமை கொண்டவர்களாக இருப்பர். மேலும், குழுவாக இணைந்து பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுவர்.

முக்கோணம் பிடித்திருந்தால், முயற்சி செய்யும் குணம் காணப்படும். காரியத்தை எப்படி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதனால், சில நேரங்களில் விதிமுறைகள், நேரான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் ஆர்வம் இருக்கும். இதனால், சில நேரங்களில் வம்பில் மாட்டி அவதிப்பட நேரிடும்.

வட்டம் பிடித்திருப்பவர்களிடம் தஞ்சம் புகுந்தால் போதும், காரியங்களை உடனடியாக செய்து கொடுத்து விடுவர் என்ற நம்பிக்கையை, மற்றவர்களுக்கு அளிப்பதில் கில்லாடி. அதே நேரத்தில், இவர்களிடம் எந்த ரகசியமும் தங்காது. தங்களுக்கு தெரிந்ததை, உடனே மற்றவர்களிடம் சொல்லா விட்டால், தலை வெடித்து விடும்.

வளைகோடு பிடித்திருந்தால், கற்பனை சக்தியும், புத்திசாலித்தனமும் மிக்கவர்கள். எதையும் வித்தியாசமாக, மாற்றுக் கண்ணோட்டத்தில் செய்யக் கூடியவர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு தெரிய வேண்டும், மாறுபட்டு நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பர்.

ஆக, ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்தி விடுவான். அதன் மூலம் அவனது மனப்போக்கை கண்டுபிடித்து விட முடியும்.

நீங்கள் எந்த வகையினர் என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்!

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.    





      Our Apps Available On




      Dinamalar

      Follow us