Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஜன 06, 2024


Google News
Latest Tamil News
முயற்சிக்கு முதுமை தடையில்லை!

தோழியின் தந்தை, புகைப்பட கலைஞர். விசேஷ வீடுகள் மற்றும் பொதுக்கூட்டம் என, பல இடங்களுக்கும் சென்று, புகைப்படம் எடுப்பார்.

தற்போது, வயது முதிர்வின் காரணமாக, ஸ்டூடியோவை, மூடும் முயற்சியில் இருந்தார்.

ஒருநாள், அவரை அழைக்க வந்தவரிடம், வயது முதிர்வால், ஸ்டூடியோவை மூடப் போவதாக கூறி இருக்கிறார், தோழியின் தந்தை.

'தொழிலை கை விடாதீர்கள். உங்களால் தொழில் செய்ய முடியவில்லை என்றால், புகைப்பட தொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்களை, வீட்டு விசேஷம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் உள்ள நுணுக்கங்களை கற்று தாருங்கள்.

'இது, அவர்களுக்கு, கள பயிற்சியாக அமைவதோடு, உங்களுக்கும் வருமானம் கிடைக்கும்...' என, ஆலோசனை கூறி இருக்கிறார்.

அதை, ஆமோதித்த தோழியின் தந்தை, புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள் மற்றும் கணினிகள் வாங்கி, தன் ஸ்டூடியோவை, பயிற்சி மையமாக மாற்றி, விளம்பரம் தந்தார். இதனால், கடையை மொய்க்கத் துவங்கியது, இளைஞர்கள் கூட்டம்.

பயிற்சி மையத்தில், போட்டோ ஷூட் மற்றும் எடிட்டிங், வீடியோ ரெக்கார்டிங் என, அந்தந்த தொழில் குறித்து, இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க, சிறிய தொகையும் பெற்றுக் கொண்டார்.

பயிற்சி பெற்ற இளைஞர்கள், தற்போது, தங்கள் ஊரில் தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்து, நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்.

முயற்சிக்கு முதுமை தடை இல்லை. எதையும் சற்று மாற்றி யோசித்தால், தொழிலில் தொடர்ந்து ஈடுபடலாம் என்பதற்கு, இதுவே நல்லதொரு உதாரணம்.

ம.காவியா, கோவை.

மனைவியை மயக்கும் மந்திர சாவி!

நண்பனின் தாத்தாவிடம், நான் மனம் விட்டு பேசுவது வழக்கம். சமீபத்தில், எனக்கும், மனைவிக்கும் பிரச்னை ஏற்பட, தாத்தாவிடம் ஆலோசனை கேட்டேன்.

'மகிழ்ச்சி தினம் கொண்டாடு...' என்றார்.

'புரியலையே தாத்தா?' என்றேன்.

'மனைவியிடம், உனக்கு பிடித்த விஷயங்களை மட்டும், தினமும் டைரியில் குறித்து வா. பின், ஒரு ஞாயிற்றுக்கிழமை அதையெல்லாம் குறிப்பிட்டு, உன் மனைவியை பாராட்டு. மகிழ்ச்சி தன்னால் பிறக்கும்...' என்றார்.

ஒவ்வொன்றையும் சிரத்தையாக குறிப்பெடுத்தேன். தெரு நாய்கள், பிச்சைக்காரர்கள் மீது அவள் காட்டும் பரிவு; அவளின் சமையல் திறமை, குறிப்பாக, பிரியாணி செய்யும் விதம்... குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு வூட்டும் அன்பு.

மனைவியின் நாகரிகமான தோற்றம் மற்றும் தோட்டத்தை பராமரிக்கும் நேர்த்தி என, என்னை கவர்ந்த பல விஷயங்களை குறித்துக் கொண்டேன்.

தாத்தா சொன்னது போல, மனைவியை அழைத்து, 'இதெல்லாம், உன்னிடம், எனக்கு மிகவும் பிடிக்கிறது. நீ கிடைத்தது, என் வாழ்க்கைக்கு வரம்...' என்றபோது, அவள் காட்டிய அன்புக்கு, அளவே இல்லை.

மனைவியை, ஒரு காதலியாக நேசிக்கும் போது, பிரச்னை இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அன்று முழுவதும் மகிழ்ச்சி திருநாளாக இருந்தது. அதன்பின், அதே பழக்கத்தை தொடர்ந்து செய்ய, இப்போது நான் எதை சொன்னாலும், தட்டாமல் கேட்கிறாள், மனைவி.

உங்கள் வீட்டிலும் செயல்படுத்தி பாருங்களேன்.

- பி. பாண்டியன், காரைக்குடி.

கைத்தொழிலால் முன்னேறும் பெண்கள்!

வீட்டு பணிப் பெண்ணிடம், 'பொங்கலுக்கு, சுண்ணாம்பு அடிக்கணும். அதற்கு முன், ஒயரிங் வேலை கொஞ்சம் இருக்கு. உனக்கு, யாராவது பெயின்டரையோ, எலக்ட்ரீஷியனையோ தெரியுமா?' என்றேன்.

'வெளியூரில் இருக்காங்க. போன் பண்ணி, தகவல் சொன்னா வருவாங்க...' என்றாள்.

'உனக்கு எப்படி அவர்களை தெரியும்?' என்றேன்.

'கிராமத்தில், என்னுடன் படித்த தோழிகள் பலர், 10ம் வகுப்பைக்கூட தாண்டவில்லை, நான் உட்பட. அனைவருக்கும் சீக்கிரமே திருமணமாகி விட்டது. தோழியரின் கணவன்மார்கள், கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன் மற்றும் பெயின்டர் என, சாதாரண தொழில் செய்து வருகின்றனர்.

'நான், சமையல்காரர் ஒருவரை திருமணம் செய்து, சென்னையில் செட்டிலாகி விட்டேன். ஆண்டுக்கு ஒருமுறை ஊரில் நடக்கும், கோவில் திருவிழாவில் ஒன்றுக்கூடி குடும்ப விவரங்களை பேசுவோம். வேலைவாய்ப்பு தகவல்களை போன் மூலம் பகிர்ந்து கொள்வோம்...' என்றாள்.

அவள் கூறிய ஆட்களையே வரவழைத்து, வீட்டின் மாடியில் காலியாக இருந்த அறையில் தங்க வைத்தேன். நேரங்காலம் பார்க்காமல், அவரவர் வேலையை நேர்த்தியாக செய்து முடித்தனர்.

எந்த ஒரு பொருளையும் விரயம் செய்யவில்லை; கூடுதல் செலவும் வைக்கவில்லை. கேட்ட கூலியை தந்து, பொங்கலுக்கு புத்தாடையும் எடுத்துக் கொடுத்து, அனுப்பி வைத்தேன்.

நன்கு வசதிப்படைத்த செல்வந்தர்கள் பலர், தங்களுடன் படித்த பழைய மாணவர்களை நட்சத்திர விடுதியில் சந்தித்து, விருந்துண்டு விடைபெறும் காலத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பெண், தன் தோழியரின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதை எண்ணி, மெய் சிலிர்த்தேன்.

- பாலா சரவணன், சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us