Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : டிச 31, 2023


Google News
Latest Tamil News
நடிகரும், பத்திரிகையாளருமான மறைந்த சோ, நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

'சார், நான்கு நாளைக்கு முன், எங்க ஏரியாவில் வெள்ள சேதங்களை பார்வையிட, மந்திரி வருகிறார் என்றதுமே, தெருவை சுத்தப்படுத்தி, பிளீச்சிங் பவுடர் தெளித்து, 'பளீச்' என்றாக்கியது, நகராட்சி நிர்வாகம்.

'மந்திரி வந்து போன பின், எந்த ஒரு சுகாதார அதிகாரியும், நகராட்சி பணியாளரும் எங்க ஏரியா பக்கம் வரவே இல்லை. அதுபோல், மீண்டும் கிருமிநாசினி தெளிக்கவும் இல்லை. அப்போ நாங்க எல்லாம் மனிதர்கள் இல்லையா...' என்று, ரொம்ப கோபமாக கேள்வி எழுப்பினார், ஒரு நேயர்.

'ஏன், இவ்வளவு, 'டென்ஷன்' ஆகறீங்க... கிருமிநாசினியை, கிருமி வருவதற்கு முன் தானே தெளிப்பர். கிருமி தான் வந்துட்டு போயிடுச்சே. பிறகு எதற்கு மீண்டும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்?' என, சிரித்தபடியே சோ கூறியதும், அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.

இது நடந்து பல ஆண்டுகளுக்கு பின்னும் நிலைமை இதே தான். எந்த மாற்றமுமில்லை.

    

லோகமான்ய பாலகங்காதர திலருக்கு, 15 வயதிலேயே திருமணம் நடந்தது. மனைவி பெயர், தபிபாய். ரொம்ப பெரிய குடும்பத்து பெண், நல்ல குணம்.

அந்த காலத்திலும் திருடர்கள் பயம் அதிகம். இருப்பினும், அவர்களிடம் ஒரு தார்மீக உணர்வும் இருந்தது. அதாவது, எதைக் களவாடினாலும் சரி, அரிசியை மட்டும் களவாடுவதில்லை என்ற கொள்கையுடன் இருந்தனர்.

அதனாலேயே, நகை, நட்டுகளை பெட்டியில் வைக்காமல், அரிசி பானையில் போட்டு வைப்பர், அந்த காலத்துப் பெண்கள்.

திலகரின் மனைவி தபிபாயும், அதே மாதிரி தன் ஆபரணங்களை, ஒரு அரிசி பானைக்குள் போட்டு மூடி வைத்திருந்தார்.

ஒருநாள், வீடு வீடாக பிச்சை கேட்டு வந்தாள், ஒரு பிச்சைக்கார பெண்.

திலகர் வீட்டுக்கு வந்து, 'தர்மம் போடுங்க தாயே...' என, கெஞ்சினாள்.

உடனே, கை நிறைய அரிசியை அள்ளி வந்து போட்டார், தபிபாய்.

பாத்திரத்தில் அரிசியை போட்டதும் தான், அது, 'பளிச்'ன்னு கண்ணில் பட்டுது. அதாவது, அவரின் வைர மூக்குத்தி ஒன்று அரிசியுடன் சேர்ந்து, பிச்சைக்கார பெண் பாத்திரத்துக்கு போய் விட்டது.

அவருக்கோ, 'மூக்குத்தி போயிட்டுதே, பிச்சை பாத்திரத்துலேர்ந்து அதை எப்படி எடுக்கறது...' மனசுக்குள் குழப்பம்; வாய் திறந்து கேட்கவும் கூச்சம்.

திண்ணையில் உட்கார்ந்திருந்த திலகர், இவ்வளவையும் பார்த்தபடி தான் இருந்தார்.

மனைவியின் மனசுக்குள் நடக்கும் மவுனப் போராட்டத்தை புரிந்து கொண்டவர், 'தபிபாய், இது தெய்வ சம்மதம். அவளுக்கு சேர வேண்டிய மூக்குத்தி, அவள்கிட்ட போயிட்டுது. பிச்சை பாத்திரத்துல விழுந்த மூக்குத்தியை எடுக்க வேண்டாம்...' என, சொல்லிவிட்டார்.

- நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us