Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
கருணாநிதி முதல்வராக பதவி வகித்த கால கட்டங்களில், இருமுறை ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் தன்மைப்பற்றி கருணாநிதி எழுதியவை:

'கடந்த, 1976ல், ஜனநாயகத்தை காத்திட குரல் கொடுத்து, ஆட்சியை விலையாக கொடுத்தோம். அடுத்து, 1991ல், இலங்கையில் அழியும் நம் தமிழ் ஜாதியைக் காத்திட முனைந்தோம் என்பதற்காக, ஆட்சியை விலையாக கொடுத்தோம்...' என்றார்.

இதையே, கருணாநிதி கவிதை வடிவில், 1976ல், இப்படி சொன்னார்...

அமைப்பு ரீதியான கழகம்

ஆடை அணிந்துள்ள உடலை போல

அதில் ஆவி நிகர்த்தது கொள்கை

பதவி என்பது அணிகலன்

அணிகலன் இன்றி வாழ முடியும்

கொள்கையில்லையேல் ஆவி இல்லை

ஆடையில்லையேல் மானம் போகும்!

என்றார்.

1991ல் பதவி மீண்டும் பறிபோன போது:

நிலையற்ற பதவி சுகமும்

பணி சுகமும் நீர் மேல் எழுத்து

அந்த எழுத்தே தம்

தலையெழுத்தெனத்

தடுமாறி வீழ்வோர் பதர் மனிதர்!

எனக்குறிப்பிட்டு, 'பதவியைக் காப்பாற்றுவதற்காக பணிந்தோ, பல்லிளித்தோ வாழப் போவதில்லை...' எனவும் எழுதினார்.

***********

மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடான, 'அகம் பொதிந்தவர்கள்!' நுாலிலிருந்து:

இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட, வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர், கவிராச பண்டிதர் ஜெகவீர பாண்டியன்.

ஆசிரியரான இவர், கவிதை எழுதுவதில் வல்லவர், பரிசுகளும் குவித்தவர். இவரை, கவிராச பண்டிதர் என, அழைப்பர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்த போது, சிவாஜி கணேசன் இவரைத் தேடி வந்து, 10 ஆயிரம் ரூபாயை ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.

அப்போது, 'வால்யூம், வால்யூமாக நான் எழுதி வெளியிட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை படித்திருக்கிறீர்களா?' எனக் கேட்டார், ஜெகவீர பாண்டியன்.

'இல்லை...' எனக் கூறினார், சிவாஜி கணேசன்.

சிவாஜி கொடுத்த பணத்தை அவரிடமே கொடுத்து, 'என் நுால்களை வாங்கிப் படியுங்கள்; அது போதும்...' என, கூறிவிட்டார், ஜெகவீர பாண்டியன்.

*********

நா.பார்த்தசாரதி, மதுரையில் இருந்தபோது, ஒருநாள் நண்பர்களுடன் வைகை ஆற்றில் இறங்கி, தோப்பை நோக்கி நடந்தார். அப்போது, எழுத்தாளர், கர்ணனும் இருந்தார். அவர் மட்டும் செருப்பு அணியவில்லை. நா.பார்த்தசாரதியும், மற்றவர்களும் செருப்பு அணிந்திருந்தனர்.

வெயில் பொசுக்கியதால் மண்ணில் நடக்க கஷ்டப்பட்டார், கர்ணன்.

இதை கவனித்து, தன் தோளில் இருந்த துண்டை எடுத்து, கர்ணனின் முன்னால் போட்டு, 'இதில், காலை வையுங்கள்...' என்றார், பார்த்தசாரதி.

கர்ணன் திகைக்க, 'பரவாயில்லை, காலை வையுங்கள்...' என்றார், பார்த்தசாரதி.

துண்டின் மீது கர்ணன் காலை வைத்து கொண்டார். பிறகு மீண்டும் துண்டை சற்று தள்ளிப் போட்டு கால் வைத்து, இப்படியே ஆறு முழுவதையும் நடந்தே கடந்தனர்.

'நா.பார்த்தசாரதிக்கு எப்படி நன்றி சொல்வேன்...' என, நினைவு கூந்திருந்தார், எழுத்தாளர் கர்ணன்.

நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us