Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
ரஷ்யாவின் முன்னாள் அதிபர், நிகிடா குருஷேவ் ஒருசமயம், கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அச்சமயத்தில், முன்னாள் அதிபர் ஸ்டாலின் ஆட்சியின் போது, இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைவு கூர்ந்தார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த உறுப்பினர் ஒருவர், கேள்வி ஒன்றை, துண்டுச் சீட்டில் எழுதி குருஷேவுக்கு அனுப்பி வைத்தார்.

அதில், 'ஸ்டாலின் ஆட்சியின் போது, நீங்களும் பொதுக்குழு உறுப்பினராகத்தான் இருந்தீர்கள். அவருடைய தவறுகளை அப்போது சுட்டிக்காட்டாமல், இப்போது எடுத்துரைக்கிறீர்களே, இது நியாயமா?' என, எழுதப்பட்டிருந்தது.

இந்த கேள்வியை படித்து பார்த்த, குருஷேவ் கோபப்படாமல், நிதானமாக, 'இந்தக் கேள்வியை எழுதி அனுப்பியவரை எழுந்து நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...' என்றார்.

சில நிமிடங்களாகியும் அந்தக் கேள்வியை எழுதி அனுப்பியவர் எழுந்து நிற்கவில்லை.

பின்னர், 'இதே காரணத்திற்காகத்தான் நானும், அப்போது ஸ்டாலினிடம் எதையும் சுட்டிக் காட்டவில்லை...' என்றார், குருஷேவ்.



ஜி.டி.நாயுடு மாபெரும் அறிவியல் மேதை என்பது தெரியும். ஆனால், அவர் சொந்தமாக ஒரு பஸ் கம்பெனியை நடத்தியவர் என்பது பலருக்குத் தெரியாது.

கோயமுத்துார் நகரத்தில், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர், மோட்டார் வாகன வியாபாரம் செய்து வந்தார். அவரிடம் சென்று வேலை கேட்டார், நாயுடு.

நாயுடுவின் உழைப்பையும், திறமையையும் நன்கு அறிந்திருந்த, ஸ்டேன்ஸ், 'நீயே சொந்தமாக ஒரு பேருந்தை ஓட்டு. நான், 4,000 ரூபாய் தருகிறேன். மீதிப்பணம், 4,000 கொண்டு வா...' என்றார்.

உடனே நாயுடுவும், 4,000 ரூபாயைத் திரட்டி சென்று கொடுத்தார். 1920ல், ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி அதை பொள்ளாச்சிக்கும், பழனிக்கும் இடையில் அவரே ஓட்டினார்.

கோவையில் அப்போது ஒன்றிரண்டு பேருந்துகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. இதை அறிந்த நாயுடு, அனைவரையும் ஒன்று திரட்டி, ஒரு கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் பங்கு கொண்ட அனைத்து முதலாளிகளையும் ஒன்றிணைத்து, 'யுனைடெட் மோட்டார் சர்வீஸ்' என்ற நிறுவனத்தை உண்டாக்கினார். இப்படி உருவாக்கப்பட்ட நிறுவனம், நாயுடுவின் சிறப்பான தலைமையில் நன்றாக இயங்கி, பெரும் லாபத்தை சம்பாதித்தது. அனைத்து முதலாளிகளுக்கும் உரிய பணம் கிடைக்க வழிவகை செய்தார், நாயுடு.

********

மாதா கோவிலுக்கு சென்றிருந்தார், கலிலியோ. அப்போது கோவிலுக்குள் இருந்தபடியே கூரையைப் பார்த்தார். ஒரு அழகிய தொங்கும் விளக்கு, காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அந்த அசைவில் ஏதோ ஒரு அறிவியல் உண்மை புலப்படுவதாக, அவருக்கு தோன்றியது. உடனே அதைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினார்.

ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு மாறி மாறி அசைந்து கொண்டே இருந்த அந்த விளக்கின் துாரம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. வேகமாக அசைந்த போது, ஒரு நொடி நேரத்தில் எத்தனை முறை அசைந்ததோ, அத்தனை முறையே வேகம் குறைவான போதும் அசைந்தது.

அசையும் வேகம் தான் மாறுபட்டதே ஒழிய, ஒரு வினாடி நேரத்தில் அசையும் எண்ணிக்கை மாறுபடவில்லை. அக்காலத்தில் கடிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை.

தன் நாடித்துடிப்பை கொண்டு இதைக் கணக்கிட்டார், கலிலியோ. இதிலிருந்து ஊசல் தத்துவம் என்றொரு அறிவியல் உண்மையை நிரூபித்தார்.

ஒரு பொருள் வேகமாக அசைந்தாலும், குறைவாக அசைந்தாலும், அதன் கால அளவு மாறாமல் இருக்கும் என்பதே, கலிலியோ நிரூபித்த அறிவியல் உண்மை. இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் பெண்டுலம் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

- நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us