Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/பூஜ்ய குற்றம்!

பூஜ்ய குற்றம்!

பூஜ்ய குற்றம்!

பூஜ்ய குற்றம்!

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Google News
Latest Tamil News
மொபைல் போனில் தெரிந்த எண் புதியது, அறிமுகமில்லாதது. திகைத்தார், சுப்ரமணியன். ஏழெட்டு முறை 'ரிங்டோன்' ஒலித்து விட்டது. 'எடுக்கலாமா, பேசலாமா?'

ஆனால், உலகெங்கும் பரவியிருக்கும் பூஜ்ய குற்றம் பற்றி, பத்திரிகைகள், 'வாட்ஸ்-ஆப்' மற்றும் நண்பர்கள், பிளஸ் 2 படிக்கும் பேரன் சரவணன் என, எல்லாரிடமிருந்துமே அவர் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருந்தார்.

'அனாமதேய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்காதே, பேசாதே...' எல்லாருமே பொதுவாக சொன்ன ஒரு அறிவுரை.

மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர், சுப்ரமணியன். அந்த இரக்கத்தால் ஏற்கனவே பல வழிகளில் அவர் நிறைய இழந்திருந்தாலும், 70 வயதுக்கு மேற்பட்ட இந்த காலகட்டத்திலும் அவர், தன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை.

'ஏம்ப்பா, கூப்பிடுபவருக்கு என்ன அவசரமோ, என்ன விஷயமோ, இப்படி கண்டுக்காம விட்டா, அவர் வருத்தப்பட மாட்டாரா?' என, பேரனிடம் இதற்கு முந்தைய அனுபவங்களின் போது கேட்டதுண்டு.

'தாத்தா, ஏன் அலட்டிக்கறீங்க? அப்படி ரொம்பவும் முக்கியமான செய்தின்னா, மறுபடியும் போன் பண்ணத்தான் செய்வாங்க. அவங்க நம்பரை நீங்க, 'ஸேவ்' பண்ணிக்காததால, எடுக்காம இருக்கீங்கன்னு, அவங்களும் புரிஞ்சுப்பாங்க.

'அதனால், நிச்சயம் மறுபடியும் உங்ககிட்ட பேசத் தான் செய்வாங்க. அப்படி அடுத்தடுத்து முயற்சி பண்ணினாங்கன்னா, நீங்க எடுத்து பேசுங்க. ஆனா, பேசறவங்க உங்களுக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாதவங்க என்பது, ஆரம்பத்திலேயே தெரிஞ்சிட்டுதுன்னா, உடனே, இணைப்பை துண்டிச்சுடுங்க. அவ்ளோதான்...' என, கூறியிருந்தான், சரவணன்.

'இந்த காலத்துச் சின்னப் பசங்க, ரொம்பவும் விவரமாத்தான் இருக்காங்க! சரி, இப்ப என்ன பண்றது? ஐடியா கேட்கலாம்ன்னாலும், ஏதோ, 'ஸ்பெஷல் க்ளாஸ்'னு போயிட்டான், பேரன்.

'நண்பர் யாருக்காவது போன் பேசி விசாரிக்கலாமா? சரி, பேரன் சொன்னது போல இன்னொரு முறை அதே நம்பரிலிருந்து அழைப்பு வருகிறதா என பார்க்கலாம்...' என, காத்திருந்தார்.

அதேபோல மீண்டும் அழைப்பு. சுப்ரமணியனுக்கு ஆர்வம் அதிகரித்தது.

'சும்மா பேசினால் என்ன ஆகிடப் போகுது? கூப்பிடறவன் ஏதாவது எக்குத்தப்பா பேசினான்னா, 'கட்' பண்ணிட்டுப் போறோம், அவ்ளோதானே?' மிகுந்த தயக்கத்துடன் மொபைலில் குதித்துக் கொண்டிருந்த பச்சை வட்டத்தை, ஆள்காட்டி விரலால் மேலே உயர்த்தினார்.

''சார்,'' எதிர்முனையிலிருந்து ஒரு இளைஞனின் குரல்.

''மன்னிச்சுக்கோங்க சார், உங்களை எனக்கு தெரியாது, எனக்கும் உங்களை தெரியாது. ஆனா, பாருங்க, என் நண்பனுக்கு, யு.பி.ஐ.,ல அனுப்ப வேண்டிய, 1,000 ரூபாயை தவறுதலா, நம்பர் மாத்தி உங்களுக்கு அனுப்பிச்சுட்டேன். சார், அந்தப் பணத்தை எனக்கு திருப்பி அனுப்பி வையுங்க, சார். ப்ளீஸ் சார். இதோ, இதே நம்பருக்கு.''

சுப்ரமணியனுக்கு ரொம்பவும் பாவமாக போய் விட்டது.

'அடடா, தவறுவது சகஜம் தானே. தப்பா அனுப்பிச்சுட்டான் போலிருக்கு, திருப்பி அனுப்பிச்சுடலாமே...' என யோசித்தார்.

எதிர்முனையில் அவன், ''சார், சார்,'' என, கத்தியபடி இருந்தான்.

உடனே, ''சார், எனக்கு இந்த, 'டெக்னாலஜி'யெல்லாம் சரியா தெரியாது. உங்க நம்பரை எழுதி வெச்சுக்கறேன். அப்புறமா இதே நம்பருக்கு யு.பி.ஐ.,ல உங்க பணத்தைத் திருப்பி அனுப்பிச்சுடறேன், சரியா?'' என, ஆறுதலாக சொன்னார்.

''உடனே, இப்பவே அனுப்புங்க, சார். நண்பனுக்கு உதவறதுக்காக அந்த பணத்தை நான் கடனாக வாங்கியிருக்கேன்,'' என, அழுகுரலில் சொன்னான்.

'பாவம் அவன்...' என, மிகவும் பரிதாபப்பட்டார், சுப்ரமணியன். அவனுடைய எண்ணை ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டார். ஏற்கனவே ஓரிருமுறை பேப்பர் போடுபவருக்கும், கேபிள் 'டிவி'காரருக்கும் இந்த வழியில் பணம் அனுப்பிய அனுபவம் இருந்தது. ஆகவே, யு.பி.ஐ., செயலிக்கு உயிர் கொடுத்தார்.

அப்போது, வீட்டினுள் வந்தான், சரவணன்.

''தாத்தா, இன்னைக்கு வகுப்பு இல்லே, நாளைக்கு தான்,'' என, தான் சீக்கிரமே திரும்பி விட்டதற்கு காரணம் சொன்னவன், ''என்ன தாத்தா மொபைலை நோண்டிகிட்டிருக்கீங்க? 'வாட்ஸ் - ஆப்'பா?'' என, சிரித்தபடி கேட்டான்.

''இல்லடா, சரவணா, எனக்கு ஒரு போன் வந்தது,'' என, ஆரம்பித்து, யு.பி.ஐ., விவகாரத்தை சொன்னார்.

''அனுப்பிட்டீங்களா?'' என, பதறியபடி கேட்டான், சரவணன்.

''இதோ அதுக்குதான் அந்த, 'ஆப்'பை, 'ஆன்' பண்ணிகிட்டிருக்கேன்.''

''தாத்தா, நில்லுங்க. முதல்ல உங்க கணக்குல, அவன் அனுப்பியதா சொன்ன பணம் வந்திருக்கான்னு, 'செக்' பண்ணிக்கோங்க, அப்புறமா இரக்கப்படலாம்,'' என, எச்சரித்தான், சரவணன்.

''ஓ, ஆமாம் இல்லே? அதை எப்படி, 'செக்' பண்றது? வழக்கமா நான் மாசத்துக்கு ஒருதரம் வங்கிக்குப் போய், 'பாஸ்புக் என்ட்ரி' போட்டுப்பேன்,'' என, வெகுளியாக கேட்டார், சுப்ரமணியன்.

''அப்படியெல்லாம் அலையாதீங்க. உங்க மொபைல்லேயே, அந்த வங்கியின், 'ஆப்' இருக்கே. அதை திறந்து பார்த்துடலாம்.''

சுப்ரமணியத்துக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. தன் மொபைலில் அந்த வசதியை உருவாக்கித் தந்ததும், பேரன் தான். ஆனால், அவர் தான் அந்த தொழில் நுணுக்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்ற பயந்து, வங்கிக்குப் போய் வருவார்.

தான் ஏதாவது எசகு பிசகாகத் தட்டப்போய், அது ஏடாகூடமாகி விடக்கூடாதே என்ற பயமும், ஒரு காரணம்.

கை தவறுதலாக சும்மா தடவினாலேயே என்னென்னவெல்லாமோ இதிலே வருவதாக கூறுவார்.

அவருடைய போனை வாங்கிக் கொண்டான், சரவணன்.

''ஏன் சரவணா, பேசறவன் நமக்கு முன்னே பின்னே தெரியாதவன்னா, நம்ம நம்பர் அவனுக்கு எப்படிப்பா தெரியும்?'' என, தன் சந்தேகத்தைக் கேட்டார், சுப்ரமணியன்.

''அதுக்கு எத்தனையோ வழி இருக்கு, தாத்தா. உங்க போன் இணைப்பு அலுவலகத்திலிருந்தோ, ஏன் வங்கி கிளையிலிருந்தோ கூட அப்படி, 'லீக்' ஆக வாய்ப்பு இருக்குன்னு சொல்வாங்க. சைபர் கில்லாடிகள் அப்படி ஒரு நட்பை உருவாக்கிகிட்டு, அவங்க கிட்டேயிருந்து வாங்குவாங்களாம்.''

''அதெப்படி நமக்குத் தெரியாம நம்ம நம்பரை யாருக்கோ கொடுக்கறது?''

''அப்படித்தான் போகுதுன்னும் உறுதியா சொல்ல முடியாது. ஏதேனும் பொருளை, போன் மூலமா வீட்டுக்குத் வரவழைக்கறீங்க, நம்ம வீட்டுக்கு, கேன் வாட்டர் போடறவங்க, கேஸ் சிலிண்டர் கொண்டு வர்றவங்க, ஓட்டலேர்ந்து உணவுப் பொருள் கொண்டு வந்து தர்றவங்க, மருந்து சப்ளை பண்றவங்கன்னு எத்தனையோ பேருக்கு உங்க நம்பர் தெரியும்.

''அதனால, இப்படியெல்லாம் சந்தேகப்படறதை விட்டுட்டு, நீங்க ஜாக்கிரதையா இருக்க வேண்டியது தான் முக்கியம்,'' என்றான், சரவணன்.

ஓரிரு நிமிடங்களுக்குப் பின், ''தாத்தா, எவ்ளோ பணம் சொன்னீங்க? ஆயிரமா? இன்னைக்கு அனுப்பினேன்னு சொன்னாரா... அப்படி ஒண்ணும் வரலியே,'' என, அவருடைய வங்கிக் கணக்கை, செயலி மூலம் பரிசீலித்து சொன்னான், சரவணன்.

''ரொம்பப் பரிதாபமா பேசினாம்ப்பா அவன். ஒருவேளை கொஞ்சம் தாமதமா கணக்கிலே வருமோ?'' சுப்ரமணியத்தின் இரக்கத்துக்கு எல்லையே இல்லை.

''இங்க சொடக்கினா, அதே நிமிஷத்துல, அங்க பதிவாகிற சூப்பர்ஸானிக் காலம், தாத்தா, இது. எவனோ ஒருத்தன் சும்மானாச்சும் டபாய்க்கறான், புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க. மறுபடி அவனே போன் பண்ணினான்னா, என்கிட்ட கொடுங்க, நான் அவனை கவனிச்சுக்கறேன்,'' என, சற்று கோபமாகவே சொன்னான், சரவணன்.

மலங்க மலங்க விழித்தார், சுப்ரமணியன்.

''அந்த பையன் எனக்கு தான் அனுப்பிச்சானா அல்லது வேற யாருக்காவது அனுப்பிச்சுட்டு, எனக்கு போன் பண்றானா?''

''அதெல்லாம் ஒண்ணுமில்லே. உங்கள மாதிரி வெள்ளந்தி மனுஷங்களின், இரக்க சுபாவத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கற கும்பல், பெருகிப் போச்சு. உங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் இரக்கப்படுங்க, மிச்ச இரக்கத்தையெல்லாம் மூட்டைகட்டி பரண் மேல போட்டிடுங்க.''

அவர்கள் எதிர்பார்த்தாற் போலவே மறுபடியும் அதே எண்ணிலிருந்து அழைப்பு!

''சார், நீங்க ரொம்ப அனுதாபத்தோட பேசினீங்க. ஆனா, இன்னும் அனுப்பலியே, சார்.''

மொபைலை கையால் அமுக்கி, தாத்தாவிடம் ரகசியமாக சில விஷயம் சொன்னான், சரவணன்.

''அப்படியாப்பா செய்யச் சொல்றே?'' என, அப்பாவியாகக் கேட்டார். அவரை எரித்து விடுவது போலப் பார்த்தவன், ''சொன்னபடி செய்யுங்க தாத்தா, அவனை மடக்கிடலாம்,'' என்றான்.

''தம்பி, நீங்க என்னைவிட சின்னவரா இருப்பீங்கன்னு, நினைக்கறேன். உங்க பரிதவிப்பு புரியுது. ஆனா, பாருங்க, என்னோட வங்கி கணக்குல பணமே இல்லே. அதுவும் மினிமம் பேலன்ஸ் கணக்குக்காகத்தான் வெச்சிருக்கேன்.''

எதிர்முனையில் இருந்தவன் பதறினான்.

''நான் உங்ககிட்ட என்னோட பணத்தைப் பறிகொடுத்திட்டுப் பேசறேன், நீங்க என்னடான்னா மினிமம் பேலன்ஸ், அது இதுன்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே.''

''தம்பி, நான் என்னப்பா உங்ககிட்டேருந்து வழிப்பறியா பண்ணினேன்? நீயா எனக்கு அனுப்பிச்சுட்டு, இப்ப திரும்பக் கொடுன்னு கேட்கறே. என்கிட்ட இருக்கற, யு.பி.ஐ., 'ஆப்' சரியா வேலை செய்யலேன்னு நினைக்கறேன். சரி, வேற ஏதாவது வழியில உனக்கு அனுப்ப முடியுமான்னு பார்க்கறேன்,'' என்றார், சுப்ரமணியன்.

''சார், உடனே, இப்பவே அனுப்புங்க, சார். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமா போகும்,'' என, எதிர்முனை குரல் ரொம்பவும் பரபரத்தது.

''நான் தான் சொன்னேனே, என்கிட்ட பணமே இல்லே. ஆனாலும், நீ நஷ்டப்பட்டதை நினைச்சா ரொம்பவும் பாவமா இருக்கு. ஒண்ணு பண்ணு, உன்னோட முகவரி சொல்லு. நான் எழுதிக்கறேன். அந்த முகவரிக்கு எப்படியாவது பணம் அனுப்பிச்சிடறேன், சரியா?'' என்றார்.

திடீரென்று எதிர்முனை அமைதியாகி விட்டது.

''என்ன சரவணா, அவன் கிட்டேயிருந்து பேச்சு மூச்சே காணோம்?'' எனக் கேட்டார், சுப்ரமணியன்.

''புரிஞ்சுகிட்டான், தாத்தா. இப்ப அவன் அடுத்து என்ன செய்வான் தெரியுமா? அவனோட போன்லேர்ந்து, 'சிம் கார்டை' எடுத்து துாக்கி எறிஞ்சுட்டு, வேற, 'கார்டு' போட்டுப்பான்.''

''எதுக்குப்பா?''

''புது ஏமாளி யாராவது கிடைக்க மாட்டாங்களான்னு பார்க்கத்தான்.''

'ஆனாலும் பாவம் அவன்...' என, புலம்பியபடியே இருந்தார், சுப்ரமணியன்.

பிரபு சங்கர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us