PUBLISHED ON : ஜூன் 22, 2025

முன்கதைச் சுருக்கம்: நீர்வளூர் கிராமத்தில், ஜாதி கலவரம் தீவிரமடைந்ததில், நான்கு பேர் இறந்து போயினர். கிராமமே பதட்டத்தில் இருப்பதை தெரிவித்து, உடனடியாக அங்கு வரும்படி, புகழேந்திக்கு போன் செய்தார், எஸ்.பி., ஈஸ்வரி.
உடனடியாக, நீர்வளூர் கிராமத்துக்கு சென்ற புகழேந்தி, நிலைமையை உணர்ந்து வருந்தினான். அப்போது, புகழேந்திக்கு போன் செய்து, எச்சரிக்கை செய்தும், கவன குறைவாக இருந்ததால், நிலைமை மோசமாகி விட்டதாக, அவனை குற்றம் சாட்டினார், அத்தொகுதி அமைச்சர்.
உடனடி நடவடிக்கை எடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தான், புகழேந்தி. ஓரளவு நிலைமை சீரானதும், மருத்துவமனைக்கு பிரபாகருடன் சென்று, கயல்விழியை சந்தித்தான், புகழேந்தி.
மருத்துவமனையில், அம்மா குறித்து கயல்விழி கேட்க, என்ன பதில் சொல்வது என, புகழேந்தியும், பிரபாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''ரெண்டு பேரும் ஏன் அப்படி பார்த்துக் கொள்கிறீர்கள்? அம்மா இல்லையா? அப்பாவைக் கொன்ற மாதிரி கொன்று விட்டனரா?''
புகழேந்திக்கு எப்படி சொல்வது என தெரியவில்லை. அவனது தயக்கத்தையும், முக பாவத்தையும் வைத்து, புரிந்து கொண்டாள், கயல்விழி.
''அப்பாவைத் தான் அநியாயமாக கொன்று விட்டனர். அம்மாவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று தான், சென்னையிலிருந்து கிளம்பி வந்தேன். இப்போது அம்மாவும் இல்லை. என்னை அனாதையாக்கி விட்டனர்,'' எனக் கூறி கண்கலங்கினாள், கயல்விழி.
''நீ அனாதை இல்லை, கயல். நான் உயிரோடு இருக்கும் வரை, நீ அனாதை இல்லை. இன்னொரு முறை அப்படி சொல்லாதே. எவ்வளவு தைரியமான பெண், நீ. எப்பேர்ப்பட்ட அப்பாவுக்கு பெண்ணாக பிறந்துள்ளாய். நீ போய் இப்படி உடைந்து அழலாமா?'' என்றான், புகழேந்தி.
''எப்படி, என்ன செய்தனர்?'' என்றாள்.
''கொன்று கிணற்றில் வீசியிருந்தனர்.''
''ஐ... யோ...!'' என்றவளுக்கு அழுகை பொத்து கொண்டு வந்தது.
''என்ன செய்வது, கயல்? ஜாதி வெறி நம் தேசத்தை இப்படி பிடித்து ஆட்டுகிறது. உன் தம்பி சற்று பொறுப்போடு நடந்திருந்தால், அம்மா உயிரோடு இருந்திருப்பார். நடந்து விட்டதை மறந்து, இனி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம், கயல்,'' என்றான், புகழேந்தி.
''புகழ் சொல்வது தான் சரி, கயல். உங்களுக்கு நான் சொல்லத் தேவையே இல்லை. எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும், எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும், வீழ்ந்து விடாமல் தைரியத்தை தக்க வைத்துக் கொள்வதும் தான் வாழ்க்கை. இல்லையா, கயல்,'' என்றான், பிரபாகர்.
''அதுதானே வாழ்க்கையில் மாபெரும் சவால். இதை விட்டு விட்டீர்களே, பிரபாகர் சார்.''
''தட்ஸ் இட்,'' என, தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன், ''நீங்கள் விண்ணையும் தொடக் கூடிய சக்தி படைத்தவர், கயல். உங்கள் அப்பா போட்ட பதியன் அப்படி.
''பாரதி கூறியதையெல்லாம் உங்களுக்குள் விதைத்து விட்டல்லவா போயிருக்கிறார். வீழ்வீர்கள் என்றா உங்களை நினைக்க முடியும்?
''நீ பேசி முடித்து விட்டு வா. நான் கீழே கேன்டீனில் டீ குடித்து விட்டு காத்திருக்கிறேன். வரட்டுமா, கயல். மீண்டும் சந்திப்போம்,'' எனக் கூறி, புகழேந்தியிடமும், கயல்விழியிடமும் விடைபெற்று, அறையை விட்டு வெளியில் வந்த, பிரபாகர், முற்றிலும் வித்தியாசமான மனநிலையில் இருந்தான்.
மொபைல்போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான், இணையாசிரியர், சாலமன். 'கருப்புப் பூனை' என்ற பெயரில், அரசியல் அந்தரங்கங்களை எழுதுபவர். மிகுந்த தைரியசாலி, சாமர்த்தியசாலி.
விஷயங்களை சேகரிக்க, அவரிடம் ஒரு தனிப்படை உண்டு. அத்தனைப் பேரும் படித்த இளைஞர்கள். உள்நாட்டு அரசியல் மட்டுமின்றி, வெளிநாட்டு அரசியலிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அவர்களின் செய்திகள் அனுமானங்களோ, பத்திரிகையின் விற்பனைக்காக, மக்களை ஏமாற்றும் பரபரப்புகளோ அல்ல. ஆகவே, இந்த கருப்புப் பூனையின் விஷயங்களைப் படிக்கவே லட்சக்கணக்கானோர், பத்திரிகை வாங்குகின்றனர்.
ஆனாலும், கருப்புப் பூனையின் பெயரில் எழுதுபவர் யார்; ஒருவரா, பலரா; எப்படி செய்திகளை சேகரிக்கின்றனர்; யார் மூலம் கண்டுபிடிக்கின்றனர்; எங்கு கேமராவை வைத்து புகைப்படங்களை எடுக்கின்றனர்; வீடியோக்கள் எவ்வாறு, 'ஷூட்' பண்ணப்படுகின்றன என்ற எதுவும் யாருக்கும் தெரியாது.
பலரும் முயற்சி செய்து பார்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. ஊசிமுனை அளவு கூட ரகசியங்கள் வெளியில் கசிந்ததே இல்லை. அந்த அளவுக்கு சாலமனும், அவர் குழுவும் சாமர்த்தியசாலிகள்.
அவசியமின்றி சாலமன் அழைக்க மாட்டார். அழைக்கிறார் என்றால், முக்கியமான விஷயமாக இருக்கும். ஆகவே தான், 'வாட்ஸ்--ஆப்' அழைப்பில் வந்திருக்கிறார்.
''சொல்லுங்க, சாலமன்.''
''ரொம்ப முக்கியமான வீடியோ சார்.''
''முக்கியமானதாக இல்லைன்னா, நீங்க கூப்பிட்டிருக்க மாட்டீங்களே! என்ன மேட்டர் சொல்லுங்க.''
''விஷயம், உங்க நண்பர் சம்பந்தப்பட்டது, சார்.''
''யார்... புகழேந்தியா?''
''எஸ், சார்.''
''என்ன விஷயம்?''
''வீடியோ அனுப்பியிருக்கேன். நீங்க பார்த்துட்டு பேசுங்க, சார்.''
சட்டென்று விலகி ஆளரவமற்ற தனி இடத்துக்கு போய், வீடியோவைப் பார்க்க துவங்கினான், பிரபாகர்.
முதலில், புகழேந்தியின் மாமனார் பங்களா காட்டப்பட்டது. பின்னர் அமைச்சரின் பெயர் பலகையை காட்டியது. 10 பேர் கொண்ட ஒரு கும்பல், அமைச்சரின் வீட்டிலிருந்து வெளியிலிருந்த புல் தரைக்கு வந்தது.
ஒவ்வொரு முகங்களுக்கும், 'குளோசப்' போயிற்று. அத்தனை பேர் முகங்களும் மலர்ந்து கிடந்தன. ஒவ்வொருவர் கையிலும் பளபளவென்று மின்னிய புத்தம் புது சூட்கேஸ். ஒருவன் அந்த சூட்கேஸை துாக்கிப் பார்த்து, 'ரொம்ப நல்லாருக்குப்பா...' என்றான்.
வீடியோவைப் போலவே, ஆடியோவும் மிகவும் தெளிவாக கேட்டது.
'டேய். வெளிநாட்டு சூட்கேஸ்டா...' என்றான், இன்னொருவன்.
'உள்ள இருக்கிறது வெளிநாடா, உள்நாடா?' என்றான், மற்றொருவன்.
'ஆமாம்டா... இவுருக்கு டாலர் நோட்டு குடுப்பாங்க பாரு...' எனக் கிண்டலடித்தான், வேறொருவன்.
'குடுக்கிற பாட்டில், வெளிநாடு. சூட்கேஸுக்குள்ள இருக்கிறது, உள்நாடு...'
'எவ்வளவு இருக்கும்ப்பா?'
தலைவன் போல இருப்பவன் சொன்னதை கேட்டதும், மலைத்துப் போயினர், மற்றவர்கள்.
'அடேங்கப்பா! என்ன இருந்தாலும் நம்ம அமைச்சரு, அமைச்சரு தான்டா. அவரு மனசு யாருக்கும் வராது...'
'சரிண்ணே, இதுக்கு ஏன் நம்பளைக் கூப்டாரு. அவுரா முடிச்சிருக்கலாமில்ல?'
'அவுங்க ஆளுங்களை வச்சு முடிக்க, அவரு பிரியப்படல...'
'அதான், ஏன்னு கேக்குறேன்...'
'சொந்த மாப்பிள்ளை. பெரிய பதவியில் வேற இருக்காரு...'
'சொந்த மாப்பிள்ளைக்கு எதிராவா, நம்ம அமைச்சரு கொடி பிடிக்கிறாரு? ஏண்ணே, மாப்பிள்ளை எந்தப் பதவியில இருக்காரு?''
'கலெக்டரு...'
'கலெக்டருங்க மந்திரிங்களுக்கு கட்டுப்பட்டவங்க, தானே...'
'ஆனா, இந்தாளு கட்டுப்பட மாட்டேன்றாரே...'
'ஏண்ணே?'
'ரொம்பப் படிச்சவருடா. நேர்மை, நீதி, நியாயம்ன்னு வாழுறவரு. தான் வாழுறதோடு மட்டுமில்லாம மேடையெல்லாம் ஏறிப் பேசுறவரு...'
'அப்படிப் பேசுற வாய அடைக்க முடியாதா?'
'அடையுற வாய் இல்லடா அது. அடக்குற வாய்...'
'இதெல்லாம் தெரிஞ்சு ஏன் கலெக்டர் ஆக்குனாரு?'
'நம்ம அமைச்சர் ஆக்கலடா. தலைவரு ஆக்கிட்டாரு.'
'சி.எம்.,மா?'
'ஆமாம்டா...'
'சரி, பதவி தலைவரு குடுத்தாரு. இவுரு ஏன் தன் பொண்ணைக் குடுத்தாரு?'
'இவரு வேணாம் வேணாம்ன்னு தான் முட்டிக்கிட்டாராம். ஆனா, அந்த பொண்ணு கேக்கலியாம். அந்த ஆளோட அழகுலயும், அறிவுலயும் மயங்கிடுச்சாம். ஆள் சும்மா, ரோஜா படத்துல வந்த அரவிந்த்சாமி மாதிரி இருப்பாராம்...'
'சரி, இப்பத்தான் மாப்பிள்ளை ஆயிட்டாரில்ல. ஏன் இந்தப் பகைமை? எதுக்காக நம்பள இந்த வேலை செய்ய சொல்றாரு?'
'பதவியை விட்டுத் துாக்கத்தான்...'
'துாக்குனா அடங்கிடுவாரா?'
'அடங்கணும், இல்லாட்டி முடிச்சிடுவாரு...'
'அட என்னப்பா நீங்க. போனமா, செய்ய சொன்ன காரியத்தை முடிச்சமா, கம்பிய நீட்டனமான்னு இல்லாம, எதுக்கு நின்னு வீண் வம்பு பேசுறீங்க? பெரிய இடத்து விஷயமெல்லாம் நமக்கெதுக்கு? யார் கண்லயும் படாமல் காரியத்தை முடிச்சு, நம்ம நம்ம ஊர் போய் சேருவோம்...'
'அதுவும் சரிதான். வாங்கடா, கிளம்பலாம்...' என, வண்டியில் ஏறிக் கொண்டனர்.
இரண்டு, 'இன்னோவா' கார்களும், ஒன்றன் பின் ஒன்றாக அமைச்சரின் வீட்டை விட்டு வெளியேறின.
வீடியோ பார்த்து முடித்த, பிரபாகர் ஒரு வினாடி அமைதியாக இருந்தான்.
பாவம், புகழேந்தி, ஒன்று மாற்றி ஒன்று துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
புகழேந்தி இந்த பிரச்னையை சாமர்த்தியமாக எதிர்கொள்ள வேண்டும்.
மீண்டும் மொபைல் போன் அழைத்தது, சாலமன் தான்.
''சார் பார்த்து வீட்டீர்களா?''
''பார்த்து விட்டேன். எப்படி எடுத்தாங்க. நேர்ல கேமரா வச்சு, சட்டை காலர்ல மைக் செருகி, 'ஷூட்' பண்ணின மாதிரி தெளிவா இருக்கே. இது எப்படி சாத்தியமாச்சு, சாலமன்?''
''இதுக்காகத்தான் சார், அடிக்கடி வெளிநாடு போறேன்.''
''அது சரி, சாலமன். வெளிநாட்டுல இதற்கான கருவிகள் வாங்கிறீங்க, சரி. ஆனால், எப்படி, யார் கண்ணில் படாம, 'ஷூட்' பண்ணினீங்க?''
''நாங்க ஜேம்ஸ் பாண்ட், சார்.''
வாய் விட்டுச் சிரித்தான், பிரபாகர்.
''மேட்டரை, 'பப்ளிஷ்' பண்ணிடலாமா, சார்.''
''அடிக்கடி பத்திரிகைக்காரன்னு நிரூபிக்கிறீங்க. இது, புகழேந்தி விஷயம். கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.''
''ஓ.கே., சார்.''
பேசி முடித்து, மொபைல் போனை அணைத்தான், பிரபாகர். புகழேந்தி வரவும், இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
வீட்டை அடைந்ததும், ''நான் சென்னைக்கு கிளம்பலாம் என்றிருக்கிறேன், புகழ்,'' என்றான், பிரபாகர்.
''இரு பிரபா. நானும் சென்னை போயாகணும். சேர்ந்தே போயிடலாம்.''
''திடீர்ன்னு என்ன ஆச்சு?''
''வரச்சொல்லி உத்தரவு.''
''யார் உத்தரவு? உற்சவரா, மூலவரா?''
''உற்சவர் தான், மூலவரையும் சந்திக்கணுமாம்.''
''ஒருவேளை டில்லிக்காரங்க, 'ரிப்போர்ட்' குடுத்திருப்பாங்களோ?''
''இருக்கலாம்.''
''என்ன செய்யப் போகிறாய், புகழ்?''
''நேர் கொண்டு தானே ஆக வேண்டும். விருப்பப்பட்டது நடக்கும் போது, எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ, அதுபோல் விருப்பப்படாதது நடந்தாலும், ஏற்று தானே ஆக வேண்டும்.''
''இது தான், புகழ். கிளம்பலாம்.''
''எங்கே கிளம்புறீங்க?'' அதிகார தோரணையில் கேட்டபடி வந்தாள், சுபாங்கி.
''சென்னைக்கு போகிறோம்,'' என்றான், புகழேந்தி.
''திடீர்ன்னு எதுக்கு இப்ப, சென்னை போறீங்க?''
''சீப் செக்ரெட்ரி கூப்பிட்டிருக்கார். முதல்வரையும் பார்க்கணுமாம்.''
''நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறீங்க. எங்கப்பா சொன்ன மாதிரி, ஒரு சாரார் பக்கம் சேர்ந்துக்கிட்டு, இன்னொரு பிரிவினரை கொடுமை பண்ணுனா, அதுக்கேத்த தண்டனை கிடைக்கத் தானே செய்யும்.''
''ஓ, உங்கப்பா சொல்லிட்டாங்களா, மேடம்,'' என்றான், பிரபாகர்.
''ஆமா, இவரைக் கழுவி கழுவி ஊத்தினாரு.''
'அவரை யார் கழுவி ஊத்துறது?' என, நினைத்துக் கொண்டான், பிரபாகர்.
''சரி, எப்ப திரும்ப வருவீங்க?''
''நான் வரமாட்டேன். புகழ் மட்டும் தான் வருவான்.''
''அவரு எப்போ வருவாராம்?''
''அனேகமாக இன்னைக்கு ராத்திரி, இல்லாட்டி நாளைக்கு காலை.''
''அப்படியே வீட்டுக்கு போய் அப்பாவை பார்த்திட்டு வாங்க?''
''இல்லை, எனக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்காது,'' என்றான், புகழேந்தி.
''தெரியுமே. இந்த மாதிரி பதில் தான் வரும்ன்னு தெரியும். எங்கப்பாவைப் பார்க்க நேரமிருக்காது. ஆனா, அந்த குருவிக்காரப் பொண்ணைப் போய் பார்க்க மட்டும் நேரமிருக்கும்.''
''சுபா...'' என, ஏதோ பேச வாயெடுத்த, புகழேந்தியை இடைமறித்தான், பிரபாகர்.
- தொடரும்இந்துமதி