Dinamalar-Logo
Dinamalar Logo


சேவை!

சேவை!

சேவை!

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
மார்க்கெட் வீதியைக் கடக்கும் போதே, அவரைப் பார்த்து விட்டாள், ரேணு. இப்போது வந்தார் என்றால், பொழுது சாயும் வரைக்கும், இந்த இடத்தை விட்டு நகராமல், புலம்பி தீர்த்து விடுவார்.

பேரம் பேசிக் கொண்டிருந்த காய்கறிகளை கை விட்டு, குறுக்குச் சந்தில் புகுந்து, நடையை எட்டிப் போட்டாள், ரேணு.

அவளது வேகத்தைப் பார்த்து, பின்னால் ஏதாவது விரட்டிக் கொண்டு வருகிறதா என்ற ரீதியில், பார்த்தனர், கடந்து போனவர்கள்.

நின்று நிதானித்து யோசிக்க நேரமில்லை. மூச்சிரைக்க வீட்டினுள் நுழைந்தாள்.

''ரேணு, எதுவும் பிரச்னையா?'' என்ற, சதாசிவத்தின் கண்கள், அவளை தாண்டி வெளியே தேடியது.

''பிரச்னை எனக்கில்லை, உங்களைத் தேடி வருது,'' என்றாள்.

''அதான் வந்துருச்சே, 34 வருஷத்துக்கு முந்தியே,'' என்றவர், அவளை ஒரு கேலிப் பார்வை பார்த்தார்.

இந்தக் கணக்கை பிற்பாடு தீர்த்துக் கொள்ளலாம் என்று அவசரமாக ஒத்திப் போட்டுவிட்டு, குரலை தாழ்த்தி, ''பரமேஸ்வரன் வந்துட்டு இருக்கார். நீங்க எங்கேயாவது போய் மறைவா உட்கார்ந்துக்கங்க,'' என்றாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்து, ''தலைமறைவா பதுங்கிக்க, நான் அவர்கிட்ட கடனா பட்டுருக்கேன். கொஞ்ச நேரம் சும்மா இரு. நெற்குன்றத்திலிருந்து என்னைப் பார்க்கவே, இவ்வளவு துாரம் வர்றார்,'' என்ற போதே, கேட்டைத் திறந்து உள்ளே வந்தார், பரமேஸ்வரன்.

இதற்கு மேலும் பேச்சை வளர்க்க முடியாது என்று, சம்பிரதாயத்துக்கு அவரை வரவேற்று, ஒப்புக்குச் சிரித்து, உள்ளே சென்றாள்.

முன்பெல்லாம் மூன்று, நான்கு மாதத்துக்கு ஒருமுறை வந்து போனவர், இப்போது, மாதம் ஒருமுறை தவறாமல் வந்து விடுகிறார்.

''அம்மாடி ரேணுகா, ஒரு தட்டு இருந்தா கொடேன். அரிநெல்லி பறிச்சுட்டு வந்திருக்கேன். கத்தரிக்காய் கூட இருக்கு. எல்லாத்தையும் உள்ளே எடுத்து வைம்மா,'' என, ஹாலிலிருந்து குரல் கொடுத்தார்.

சும்மா தான் உட்கார்ந்திருந்தாள். கூப்பிட்ட குரலுக்கு உடனே எழுந்து போக வேண்டுமா என்ற எரிச்சலில், 10 நிமிடம் தாமதமாகத்தான் வந்தாள். அவர் புலம்பலை கேட்பதற்கு, இது, ஏதோ லஞ்சம் போல தோன்றியது.

வேஷ்டி முனையில் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன், மோர் டம்ளரைத் தந்ததும், வாங்கிக் கொண்டார்.

''நிஜமா வீட்டில் இருக்கவே பிடிக்கல, சதா. பார்த்து பார்த்துத்தானே மருமகளைக் கொண்டு வர்றோம். அவங்க வந்ததும் வீட்டையே புரட்டி போட்டுடறாங்க. நாம இன்னும், 100 வருஷமா வாழ்ந்துடப் போறோம்? அந்த அறிவு கூட இல்லை பாருங்க,'' என, அங்கலாய்த்து கொண்டிருந்தார்.

உலகம், எத்தனையோ மனிதர்களைப் பார்த்து விட்டது. அதில், என் வீட்டு மனிதர் ஒரு புது ரகம். கொஞ்சம் அதீத அப்பிராணி. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், அதுதான் நிஜம்.

பெரிதாய் மனிதர்களை வெறுக்க, காரணம் தேட மாட்டார். அதை வசதியாக்கிக் கொண்டு, பரமேஸ்வரன் மாதிரியான ஆட்கள் வந்து, அத்தனையையும் அவர் தலையில் கொட்டி விட்டுப் போவதே வழக்கமாக இருந்தது.

இதே, பரமேஸ்வரன், நங்கநல்லுாரில் ஒரே, 'ப்ளாட்'டில் இருந்த சமயம், வழியில் பார்த்தால், சிரிப்பதற்கு கூட, 'டிஜிட்டல் பேமென்ட்' கேட்பார். இப்போது தேடி வருகிறார் என்றால், இளக்காரம் தான்.

காலம், சூழலையும், வாழ்க்கையையும் திருப்பி போடுகிறது என்பது, ஆயிரம் மடங்கு நிஜம். முதுமை அவருக்கு நிறைய கவலைகளை கொடுத்திருக்கிறது. அது அத்தனையையும் இங்கு வந்து கொட்டிவிட்டுப் போகிறார் என்பது தான், ரேணுவின் கோபம்.

''அவளுக்கு உடம்புக்கு முடியல. வந்த மருமகளும் சரியில்லை. இதையெல்லாம், பிள்ளை ஒரு வார்த்தை கேட்கிறானா, அதுவும் இல்லை. நான் எப்படி, எப்படியெல்லாம் வாழ்ந்தேன்னு உனக்குத் தெரியாதா? இப்போ செல்லாக்காசு மாதிரி நம்மை நடத்தறது வலிக்குது, சதா...'' என, தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார், பரமேஸ்வரன்.

தலையில் அடித்துக் கொண்டு, ரேணு உள்ளே நகர, இதற்கே காத்திருந்தவர் போல, பரமேஸ்வரனின் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்லத் துவங்கினார், சதாசிவம்.

நான்கு நாட்களுக்கு பின், கோவிலுக்கு சென்றிருந்தபோது, வீட்டிலிருந்து போன் வரவே, அவசரமாய் எடுத்தாள்.

''ரேணு, சாமி பார்த்தாச்சா. எல்லாம் முடிஞ்சுதுன்னா, சீக்கிரம் வீட்டுக்கு வாயேன். ஊரிலிருந்து கல்யாணி அக்கா வந்திருக்காங்க. ஏதோ பிரச்னை போல...'' என்றார், சதாசிவம்.

ஏதோ பிரச்னை, தனக்கே வந்தது போல், இவர் ஏன் பதறுகிறார் என பற்றிக் கொண்டு வந்தது.

''ஆமாம், உங்களைத் தேடி வர்றவங்கள்ல, யாராச்சும் பிரச்னை இல்லாம வந்திருக்காங்களா? இதையெல்லாம் கேட்டு கேட்டு, நமக்கு என்னைக்கு பிரச்னைகள் வரப்போகுதோன்னு நான் அடி வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கேன்.

''எல்லாரும் சொல்ற மாதிரி இப்படி அப்பிராணியாவே இருந்தால் எப்படி, கொஞ்சமாவது சுதாரிப்பா இருக்க வேண்டாமா?''

மறுமுனை அமைதியாக இருக்க, வருத்தமானாள்.

ஆனால், 'என் மனதின் வலியை எப்போது தான் வெளிப்படுத்த? இந்த இடத்தை தொடுவதற்கு ரொம்பவே உழைத்திருக்கிறோம். வயசு காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தாலும், வயதான காலத்தில் நிறைவாகவும், நிம்மதியாகவும் இருப்பது பெரிய பாக்கியம்.

'பிள்ளைகள் இரண்டும் போட்டி போட்டு தாங்குகின்றனர். அவர்கள் கையை எதிர்பார்க்காமல், கடவுளும் எங்களை நிறைவாக வாழ வைத்திருக்கிறார். 'குறையொன்றுமில்லை...' என்று சொல்லும்படி வாழ்வதே பெரிய வரம். அதற்கு எதாவது குந்தகமும் வந்து விடுமோ...' என்ற கவலை, அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

கல்யாணி அக்கா, தன் கஷ்டங்களை கொட்ட வந்திருந்தாலும், நெருங்கிய உறவு. கோவிலில் இருந்து திரும்பும்போதே, தின்பண்டமும், பழங்களும் வாங்கிக் கொண்டாள்.

உள்ளே அடியெடுத்து வைக்கும்போதே, கல்யாணி அக்காவின் விசும்பல் தான் அவளை வரவேற்றது. விளக்கு வைக்கும் நேரம்.

'அக்கடா' என்று, மனது ததும்ப, முகத்தை இயல்பாக்கிக் கொண்டு, உள்ளே நுழைந்தாள்.

''சதா, என்னால தாங்கவே முடியல. அந்த கடவுள் என்னை மட்டும் எதுக்கு இவ்வளவு சோதிக்கிறார்ன்னு தெரியல. உடம்பும், மனசும், எத்தனை காயத்தைத்தான் தாங்கும்?''

'என்ன இது...' என்பது போல, அவரைப் பார்த்தேன். முகத்தில் எந்த வெறுப்பும் இல்லாமல், கல்யாணி அக்கா பேசுவதைக் கேட்டபடி, அமர்ந்திருந்தார்.

காபி கொடுக்கும்போது, ஒரு கவலையைச் சொன்னார்; சாதம் போடும்போது, ஒரு துயரத்தைச் சொன்னார்; மோர் ஊற்றும்போது, மூக்கை உறிஞ்சிக் கொண்டு ஏதோ ஒரு உபாதையை பற்றிப் பேசினார். எப்போதுடா அடுத்த நாள் வரும், இவர் கிளம்பிப் போவார் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.

இருந்த ஒரே நாளில், ஓராயிரம் எதிர்மறை அதிர்வுகள். இதற்கெல்லாம் முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று, காத்திருந்தேன்.

இரண்டு நாட்கள் முகம் கொடுத்து பேசாமல் இருந்தாள், ரேணு.

பொறுக்க முடியாமல், ''ரேணு, என்னாச்சு... என்ன கோபம், சரியா முகம் கொடுத்து பேச மாட்டேங்கறே?'' என, மென்மையாக கேட்டார், சதாசிவம்.

''நான் பேசி என்னாகப் போகுது, அதை கேட்க உங்களுக்கு ஏது நேரம்?''

''இப்படியெல்லாம் விளையாடுற வயசா நமக்கு. பேரன், பேத்திகளை பார்த்துட்டோம். இத்தனை வருஷத்துல, நம் வாழ்க்கையில எந்தக் குறையும் இல்லை. பொறுப்பான பிள்ளைகள், பாசமான மருமகள்கள். போதுமான வசதி, இந்த வயதிலும் ஆரோக்கியம். பிறகு, ஏன் இவ்வளவு வருத்தமா இருக்கே?''

''அதேதான், இப்போ சொல்ற எல்லாமே இருக்கு. எங்கே அது இல்லாம போயிடுமோங்கிற கவலை தான். யோசிச்சுப் பாருங்க, இங்கே உங்களைத் தேடிட்டு வர்ற சொந்தக்காரங்க, நண்பர்கள்ன்னு யாராவது, எந்த ஒரு நல்ல செய்தியாவது எடுத்துட்டு வர்றாங்களா... எல்லாம் துயரமும், கஷ்டமும், சோகமும் தான்.

''நீங்களே சொல்லுங்க, இவங்க எல்லாரையும் எவ்வளவு நாளா நமக்குத் தெரியும். வாழ்க்கையில் எத்தனையோ நல்லது, கெட்டதுகளை கடந்து வந்தவங்க தான். அப்போ எல்லாம் தேடிட்டு வராதவங்க, இப்போ கஷ்டத்தை மட்டும் அள்ளிக் கொட்ட வர்றாங்க.

''எனக்கு கவலையா இருக்கு. இப்படி அடுத்தவங்க குப்பையை கொட்டி கொட்டி, நம் வாழ்க்கையிலயும் எதுவும் கெடுதல் வந்திடுமோங்கிற பயம்.

''ஏன், காலம்பூரா உங்களை அம்மாஞ்சி, பிள்ளைப்பூச்சின்னு கேலி செய்த இவங்ககிட்ட எல்லாம், நீங்க அதேதான்னு நிரூபிச்சுட்டு இருக்கீங்க. நாளைக்கே, ஏதோ சின்ன வருத்தத்தோட இவங்களை எல்லாம் தேடிட்டுப் போய் பாருங்க. யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க,'' என, மனதில் நினைத்ததை கொட்டிவிட்டாள்.

ஒரு நிமிடம் அவளையே பார்த்தவர், ''அப்படியில்லை, ரேணு... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், பார்க்கிற எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்க முடியும். பிறந்தநாளுக்கும், கல்யாண நாளுக்கும் வலைதளங்களில் போஸ்டர் போட்டு சந்தோஷத்தை வெளிக்காட்டிக்க முடியும்.

''ஆனால், தோல்வியும், கவலையும் பிரத்யேகமானது. கவலையும், கண்ணீரையும் இன்னொருத்தர்கிட்ட அவ்வளவு சீக்கிரமா ஒப்புவிக்க முடியாது. ஏன்னா, கண்ணீர் மனுஷனோட பலகீனம்ன்னு, காலம், காலமா சொல்லி பழகியிருக்கோம் இல்லையா... அதனால, தன்னுடைய பலகீனத்தை காட்டிக்க, நம் மனசு சம்மதிக்காது.

''அடுத்தவங்க, தன்னுடைய தோல்விகளை பேச, நம்மை தேர்ந்தெடுக்கறாங்கன்னா, அவங்க பார்வையில நாம எவ்வளவு நம்பிக்கை ஆனவங்களா தெரியறோம். அவங்க தன்னையே நம்மகிட்ட விட்டுத் தர்ற அளவுக்கு நம்பிக்கை வச்சு வரும்போது, அவங்களுக்காக, 10 நிமிஷம் காது தர்றதுல என்ன தப்பு, ரேணு?'' என்றார்.

ஆச்சர்யமாக, நிமிர்ந்து பார்த்தாள், ரேணு.

அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் சாந்தம் இப்போதும் இருந்தது.

''கடவுள், நமக்கு நிம்மதியையும், நிறைவையும் கொடுத்திருக்கார், ரேணு. அதற்காக, அது கிடைக்காம இருக்கிறவங்களை விட, நாம சிறந்தவங்கங்கிற அர்த்தமில்லை. உன் தோளில் பாரமில்லை, அடுத்தவங்க பாரத்தை குறைக்க, உன் தோளைக் கொடுக்கிறது தான்.

''இதுவும் ஒரு சேவை தான், ரேணு. சேவை செய்யுறவங்களுக்கு, இறைவன் கெடுதி செய்வானா என்ன?'' அமைதியின் உருவாக கேட்டவரின் தோளில், தெளிந்த மனதோடு சாய்ந்தாள், ரேணு.

எஸ். பர்வின் பானு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us