Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/ரஜினி அத்தை!

ரஜினி அத்தை!

ரஜினி அத்தை!

ரஜினி அத்தை!

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
சூப்பர் மார்க்கெட்டின் அலமாரியிலிருந்து, 'சீஸ், மயோனீஸ், பட்டர்' என, 'ம், வேற என்ன...' ஒவ்வொன்றாய் யோசித்து யோசித்து, நிதானமாகத் தேடி எடுத்துக் கொண்டிருந்தாள், ரஜினி.

மதிய நேரம், கடையில் வாடிக்கையாளர்கள் மிக குறைவாகவே இருந்தனர். கடைச் சிப்பந்திகளிலும் பலர், மதிய உணவுக்குச் சென்றிருந்ததால், ஒன்றிரண்டு பேர் தான் இருந்தனர்.

'ஐயோ... யாராவது உதவி செய்யுங்க. ப்ளீஸ்...' என்ற பதற்றமான குரல் கேட்டு, அந்த திசை நோக்கி ஓடினாள்.

இரண்டு வரிசைகள் தாண்டி, இளம் கர்ப்பிணி பெண், தரையில் மல்லாக்கப் படுத்து, வயிற்றின் மேல் தன் கைகளை வைத்தபடி தவித்துக் கொண்டிருந்தாள். கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.

அவளருகே சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யும், இரண்டு இளம் பெண்கள் கையைப் பிசைந்து கொண்டு, செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.

''என்னம்மா, என்ன செய்யுது?'' என்று கேட்டபடி, அந்த கர்ப்பிணியின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்தாள், ரஜினி.

தன்னருகே வந்தமர்ந்த ரஜினியை நோக்கினாள், அந்தப் பெண்.

க்ரீம் நிற பார்டரில், 'டார்க்' பிரவுன் நிறத்தில், குந்தன் கற்கள் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்ட பனாரஸ் பட்டுப் புடவையும், க்ரீம் நிறத்தில் ரவிக்கையும் அணிந்து, அதற்கு தகுந்த அணிமணிகளுடன் அலங்காரமாக இருந்தவளைப் பார்த்ததும், ஒரு நிமிடம் திகைத்தாள்.

''என்னன்னு தெரியலக்கா... திடீர்ன்னு வயித்துல, 'சுருக் சுருக்'குன்னு வலி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு,'' என்றாள், அந்த கர்ப்பிணி.

அவளுடைய கைகள் இரண்டிலும் நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தபடியால், இது முதல் குழந்தையாக இருக்கும் என்று புரிந்து கொண்டாள், ரஜினி.

''முதல் குழந்தையாம்மா?'' ரஜினி கேட்க, ஆமாம் என்று தலையாட்டினாள்.

''ஒண்ணுமில்ல, பயப்படாத. பக்கத்தில் இருக்கிற, 'நர்சிங் ஹோம்' போயிடலாம்,'' என்றபடியே அவளை துாக்கி அமர வைத்தாள்.

''ட்யூ டேட் எப்பம்மா?''

''இன்னும் ரெண்டு மாசம் இருக்கு, அக்கா. ஆ அம்மா...'' என்று, வலியால் துடித்தாள்.

''ஒண்ணுல்ல ஒண்ணுல்ல...'' என்றவள், ''ஒரு கையை பிடிம்மா, வெளியில போய் ஆட்டோ பிடிச்சுடலாம்,'' என்று, அருகில் நின்ற கடைச் சிப்பந்தியிடம் உதவி கோரினாள், ரஜினி.

அவளும் உதவிக்கு வர, கர்ப்பிணி பெண்ணை மெதுவாக அழைத்துக் கொண்டு, சூப்பர் மார்க்கெட்டின் வெளியே வந்தனர்.

வெளியே வெயில் சுட்டெரித்ததால், மக்கள் நடமாட்டமின்றி சாலை வெறிச்சோடி இருந்தது.

ரஜினி எதிர்பார்த்தபடி, ஆட்டோ எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்து சென்ற ஒன்றிரண்டு காலியான ஆட்டோக்களும், அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை.

அந்தப் பெண் வலியால் மயக்கமடைய, ஒரு நிமிடம் யோசித்தாள், ரஜினி. தன் பெரிய கைப்பையினுள் அந்த கர்ப்பிணியின் சிறிய கைப்பையைத் திணித்து, தன் தோளில் மாட்டிக் கொண்டு, கர்ப்பிணியை அலேக்காகத் துாக்கி, நடக்கத் துவங்கினாள்.

''அஞ்சு நிமிஷம் தான். பக்கத்து தெருவுல, 'நர்சிங் ஹோம்' இருக்கு. உன்னை பத்திரமா கூட்டிட்டு போயிடறேன். எல்லாம் சரியாகிடும்,'' என்று சொல்லி, வேக வேகமாக நடந்தாள், ரஜினி.

மயக்கத்தில், வலியில் முனகியபடி இருந்தாள்.

'நர்சிங் ஹோம்' வாசலை அடைந்ததும், ''ப்ளீஸ்... 'வீல் சேர்' கொண்டு வாங்க, எமர்ஜென்சி...'' என்று, வாசலிலிருந்து கூவினாள்.

அவளுடைய குரலிலிருந்த பதற்றம், மருத்துவமனை ஊழியர்களையும் தொற்றிக் கொள்ள, 'வீல் சேரில்' கர்ப்பிணியை அமர வைத்து, அழைத்துச் சென்றனர்.

வரவேற்பிலிருந்த பெண், ரஜினியிடம் விபரம் கேட்டாள்.

''அந்தப் பொண்ணு பேர் எதுவும் எனக்கு தெரியாது. சூப்பர் மார்கெட்ல நான் பொருள் வாங்கறச்சே, இந்த பொண்ணு வயித்து வலின்னு துடிச்சிட்டிருந்தா.

''ஆட்டோ புடிச்சு மெல்லமா இங்க கூட்டிட்டு வரலாம்ன்னு நெனச்சா, ஒரு ஆட்டோவும் வரல. அதுக்குள்ள அந்த பொண்ணு மயங்கிருச்சு. அதான் அப்படியே துாக்கிட்டு இங்க ஓடி வந்துட்டேன்,'' என்று நடந்ததை சுருக்கமாகக் கூறினாள்.

''அட்மிஷன் போடணும்ன்னா பணம் கட்டணுமே,'' என்றாள், வரவேற்பு பெண்.

''அதுக்கென்னம்மா, நான் பணம் கட்டுறேன்,'' என்று, தயக்கமின்றி கூறினாள், ரஜினி.

''சரி, உங்க பேர் சொல்லுங்க.''

''ரஜினி.''

பெயரைக் கேட்டதும், ஒரு நொடி திகைத்து, பின் இயல்பானாள், வரவேற்பு பெண்.

சரியான நேரத்தில் உரிய சிகிச்சை கிடைத்தது.

அரை மணி நேரம் சென்றதும், அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

''நீங்க வந்து, அந்த பெண்ணை பாக்கலாம்,'' என்று கூறினாள், நர்ஸ்.

சென்று அந்தப் பெண்ணை பார்த்தாள், ரஜினி.

இன்னும் அரை மயக்கத்திலிருந்த அந்தப் பெண், மெதுவாக ரஜினியைப் பார்த்து புன்னகைத்தாள்.

''வாழ்த்துகள். நல்லபடியா பிரசவம் ஆயிடுச்சு. ஆம்பளப் புள்ள பொறந்திருக்கு,'' என்று சொல்லி சிரித்தாள், ரஜினி.

''ரொம்ப தேங்க்ஸ் அக்கா. நீங்க மட்டும் இல்லேன்னா, எனக்கு என்ன ஆகியிருக்குமோ!''

''இதுல என்னம்மா இருக்கு. சின்ன உதவி தானேம்மா. சரி, உன் வீட்டுக்கு தகவல் சொல்லணும். உன் வீட்டு நம்பர் சொல்லு,'' என்று கேட்டாள், ரஜினி.

தன் கணவரின் மொபைல் எண்ணைக் கூற, அதை தன் மொபைல் போனில் அழுத்தியபடி,''உன் வீட்டுக்காரர் பேர் என்ன, அப்படியே உன் பேரும் சொல்லு,'' என்று, கேட்டாள்.

''அவரு கார்த்திகேயன். என் பேர் மலர்விழி அக்கா,'' என்றாள்.

மலர்விழியின் கணவனை அழைத்து விபரம் கூறினாள், ரஜினி.

''அப்படியா, ரொம்ப தேங்க்ஸ். எந்த ஹாஸ்பிட்டல், நான் உடனே வரேங்க,'' என்று பதில் கிடைத்ததும், அழைப்பை துண்டித்து, மலர்விழியின் அருகில் வந்தாள்.

''முதல் பிரசவத்துக்கு, உன் பிறந்த வீட்டுக்கு போகலியாம்மா?''

''எனக்கு, அம்மா - அப்பா இல்லக்கா. நான் ஆசிரமத்தில் வளர்ந்தவ. மாமியார், கிராமத்தில் இருக்காங்க. இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் தான், 'ட்யூ டேட்'டுன்னு சொன்னாங்க. அதனால, அடுத்த மாசம் வர்றதா மாமியார் சொல்லி இருக்காங்க அக்கா,'' என்றாள், மலர்விழி.

''உன் ஹேன்ட் பேக்கை இங்கே வைக்கிறேன். எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோம்மா,'' என்றாள்.

''என்னக்கா இப்படி சொல்றீங்க. நீங்க இதை தொட்டிருக்க கூட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்க்கா,'' என்றாள் மலர்விழி.

''சரி சரி... பச்ச உடம்பு, ரொம்ப பேசக் கூடாது...'' என்று கூறி, அவள் முகத்தை துடைத்து விட்டாள். பின்னர், பிறந்த குழந்தையை கையில் ஏந்தி, கொஞ்சத் துவங்கினாள்.

குழந்தையை பரிசோதிக்க, மருத்துவர் வர, அவரிடம் குழந்தையைக் கொடுத்தாள், ரஜினி.

''எனக்கு ரொம்ப பசிக்குது. நான் ஏதாவது சாப்பிடலாமா?'' என்று, மெல்லிய குரலில் கேட்டாள், மலர்விழி.

''சாப்பிடும்மா. கஞ்சி இல்லன்னா, பிரட் மாதிரி ஏதாவது சிம்பிளா சாப்பிடலாம். நம் ஹாஸ்பிடல் கேன்டீன்லயே கஞ்சி கிடைக்கும். வாங்கி கொடுங்க. பை த வே, குழந்தை நல்லா இருக்கு,'' என்று, சொல்லிச் சென்றார், மருத்துவர்.

குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு, மலர்விழிக்கு கஞ்சி வாங்கி வர சென்றாள், ரஜினி.

அந்த நேரத்தில், மலர்விழியின் கணவன் அரக்கப் பறக்க ஓடி வந்து, குழந்தையைக் கையிலெடுத்து ஆசை தீரக் கொஞ்சினான். பின், மனைவியிடம் திரும்பினான்.

''மலரு, 'ட்யூ டேட்'க்கு இன்னும், ரெண்டு மாசம் இருக்குன்னு சொன்ன. அதுக்குள்ள எப்படி இப்படி?'' என்று கேட்டு, அவளின் தலையை வாஞ்சையுடன் தடவினான்.

''தெரியலைங்க, நானும் ரொம்ப பயந்துட்டேன். ஆனா, ஒரு அக்கா...'' என்று ஆரம்பித்து, எல்லாவற்றையும் கூறினாள், மலர்விழி.

''அவங்க மட்டும் இல்லேன்னா, என்ன ஆகியிருக்கும்ன்னே தெரியல. என்னால, எதையும் நெனச்சு பார்க்க கூட முடியல,'' என்றாள்.

''என்ன மலரு சொல்ற, உன்னை, 'சூப்பர் மார்கெட்'டிலிருந்து, ஹாஸ்பிடல் வரைக்கும் துாக்கிகிட்டே வந்தாங்களா. கிரேட் பா...'' என்றான், வியப்பாக.

''ஆமாங்க. என்னை இங்க சேர்த்து, பணம் கட்டி, இப்ப வரைக்கும் என் கூடவே இருக்காங்க. இப்ப கூட, எனக்காக கஞ்சி வாங்க தான், 'கேன்டீனுக்கு' போயிருக்காங்க,'' என்றாள், மலர்விழி.

அப்போது, ரஜினி அந்த அறையினுள் நுழைய, மலர்விழியின் கணவனான கார்த்திக்கும், ரஜினியும் ஒருவரை ஒருவர் பார்த்து, அதிர்ந்தனர்.

''இவங்கதாங்க நான் சொன்ன அக்கா,'' என்றாள், மலர்விழி,

''உன் வீட்டுக்காரர் வந்துட்டார்ல, இனி நான் இங்கே இருக்கிறது வேஸ்ட். நான் வரேங்க,'' என்று சொல்லி, குழந்தையின் அருகில் சென்றாள்.

''நல்லா இருக்கணும் ராஜா. நல்ல வீராதி வீரனா, ஆம்பள சிங்கமா எல்லாரும் கையெடுத்து கும்பிடுற மாதிரி பெரியாளா வாடா ராஜா,'' என்று, வாய் நிறைய வாழ்த்திவிட்டு, அங்கிருந்து வெளியேற எத்தனித்தாள், ரஜினி.

''அக்கா இருங்க. ஏங்க, அவங்க தான் மொத்த செலவும் செய்திருக்காங்க. அதெல்லாம் அவங்க வாங்கிக்க மாட்டாங்கன்னாலும், நீங்க அதை தர வேணாமா. 'அட்லீஸ்ட்' அவங்களுக்கு நன்றியாவது சொல்லுங்க,'' என்று படபடத்தாள், மலர்விழி.

''இருக்கட்டும்மா,'' என்றபடியே நகர்ந்தாள், ரஜினி.

''அண்ணே... இன்னும் என் மேல கோபம் போகலயா?'' என்று கண்ணீருடன், ரஜினியின் முன் மண்டியிட்டான், கார்த்திக்.

ரஜினி கல் போல நிற்க, அவள் காலில் விழுந்து அழுதான், கார்த்திக். அவனுடைய கண்ணீர் ரஜினியின் காலை நனைக்க, துடித்துப் போனாள்.

''ஐயோ தம்பி, என்ன இதெல்லாம். நான் எதுக்கு உன் மேல கோபப்படப் போறேன், எழுந்திரு. ராஜா மாதிரி புள்ள பொறந்திருக்கு. அதை கையில் எடுத்து கொஞ்சறதை விட்டுட்டு, இது என்ன என் முன்ன இப்படி மண்டியிட்டுக்கிட்டு இருக்க,'' என்று கை துாக்கி எழுப்பி, அவன் கண்ணீரைத் துடைத்து விட்டாள், ரஜினி.

''என் மேல கோபம் இல்லைன்னு சொல்லுண்ணே.''

''இல்லவே இல்ல, போதுமா.''

ரஜினியும், கார்த்திக்கும் பேசுவதைக் கேட்டு குழம்பினாள், மலர்விழி.

''பாரு, மருமக குழம்புது. நீ அவளுக்கு விபரம் சொல்லு. அதுக்கு முன்ன இந்த கஞ்சியை கொடு. பாவம் பச்ச உடம்பு, பசியில தவிக்க விடக் கூடாது,'' என்றபடியே கஞ்சி பாத்திரத்தை, கார்த்திக்கிடம் கொடுத்தாள், ரஜினி.

கஞ்சியை மனைவிக்கு ஊட்டிக் கொண்டே, ''நான், உன்னிடம் சொல்லி இருக்கேன்ல மலரு. எனக்கு சரவணன்னு ஒரு அண்ணன் இருக்கான்னு. உன்னை காப்பாத்தின இந்த அக்கா தான், என் கூடப் பொறந்த அண்ணன். பேரு சரவணன்.

''அண்ணன், திருநங்கையா மாறினதும், அப்பா இவனை வீட்டை விட்டு போக சொல்லிட்டாரு. இவனும் வீட்டை விட்டு போய்ட்டான். சின்ன வயசிலிருந்து, ரஜினின்னா இவனுக்கு உயிரு. அதனால, தன் பேரை ரஜினின்னு மாற்றி வெச்சுக்கிட்டான்.

''எப்பவாவது அம்மாவை பார்க்க வீட்டுக்கு வருவான். அப்பல்லாம் நான், இவனை அவமானப்படுத்தி அனுப்பிடுவேன். அப்பா சாவுக்கு பார்க்க வந்திருந்தான். அப்பா முகத்தை கூட, அவனை பார்க்க விடாம, அடிச்சு விரட்டிட்டேன். அதனால தான், அம்மா என்கிட்ட பேசறதை நிறுத்திட்டாங்க.

''ஆரம்பத்தில் நான் செய்தது தப்புன்னு எனக்கு புரியவே இல்லை. ஆனா, வளர வளர, நாலு பேர் கூட பழகிப் பழகி, சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எனக்குள்ளேயும் மாற்றத்தை கொண்டு வந்துடுச்சு. நான் செய்தது எவ்ளோ பெரிய தப்புன்னு எனக்கு புரிஞ்சது.

''எப்படியாவது அண்ணனை தேடி கண்டுபுடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடணும்ன்னு நெனச்சுட்டிருந்தேன். அண்ணனே என்னை தேடி வந்துடுச்சு. இனிமே, அவனை நம் கூடவே தான் வெச்சுக்குவேன். எங்கேயும் போக விடவே மாட்டேன்,'' என்று, கார்த்திக் சொல்லிக் கொண்டிருப்பது எதுவும், ரஜினியின் காதில் விழவேயில்லை.

''உங்கப்பாவுக்கு நான் அண்ணன்னா, நீ அவனுக்கு மட்டுமில்ல எனக்கும், மகன் தான். உங்கப்பாவுக்கு நான் அக்கான்னா, நீ எனக்கு மருமகன். என்னடா சொல்ற, நீ எனக்கு மகனா, மருமகனா...

''என்னவா இருந்தாலும், நான் உனக்கு செல்ல அத்தை தான்; ரஜினி அத்தை. சொல்லு ரஜினி அத்தை...'' என்று, குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள், ரஜினி.

அன்னபூரணி தண்டபாணி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us