Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம்: ரகு வம்சம்!

ஞானானந்தம்: ரகு வம்சம்!

ஞானானந்தம்: ரகு வம்சம்!

ஞானானந்தம்: ரகு வம்சம்!

PUBLISHED ON : ஜூன் 15, 2025


Google News
Latest Tamil News
திலீப அரசருக்கு குழந்தை பேறில்லை. அவரும், அவர் மனைவி சுதக்ஷிணாவும், வசிஷ்டர் ஆசிரமத்துக்கு சென்றனர். சூரிய வம்ச அரசருக்கு ஆசான், வசிஷ்டர்.

'மதிப்பிற்குரிய மகரிஷியே! எனக்கு பின் அரியாசனத்தில் அமர, வாரிசு இல்லாதது, பெரும் கவலையை அளிக்கிறது...' எனக் கூறி வருந்தினார், அரசர்.

'அரசே! உங்களுக்கு சந்ததி இல்லாததற்கு காரணம் உண்டு. இந்திரனுக்கு உதவி செய்ய அவ்வுலகம் சென்று திரும்புகையில், கேட்கும் வரமளிக்கும் காமதேனுவிடம் மரியாதை செலுத்தாமல், அதை வலம் வராமல் வந்தாய்.

'அச்செயலை அவமதிப்பாக எண்ணிய காமதேனு, 'உனக்குச் சந்ததி இல்லாமல் போகட்டும்...' என, சாபமிட்டது. உயர்ந்தவரை மதிக்காதவர், மகிழ்ச்சியாக வாழ முடியாது...' என்றார், வசிஷ்டர்.

'குருதேவரே! அது தவறுதலாக நடந்ததேயன்றி, வேண்டுமென்றே செய்ததல்ல. நான் அந்த சாபத்திலிருந்து மீள்வதெப்படி?' எனக் கேட்டார், அரசர்.

'திலீபரே! பசு நந்தினி, தன் கன்றுடன் ஆசிரமத்துக்கு வந்துள்ளது. அதை பராமரித்து சேவை செய்யுங்கள். உங்கள் சாபம் நீங்கிவிடும்...' எனக் கூறினார், வசிஷ்டர்.

தம்பதியர் இருவரும் ஆசிரமத்திலேயே தங்கி, நந்தினியை தொழுது வந்தனர். திடீரென்று ஒருநாள், சிங்கம் ஒன்று பசுவின் மீது பாய்ந்து, கொல்ல வந்தது.

வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து, சிங்கத்தின் மீது எறிய நினைத்தார், திலீபர்; ஆனால், அவரால் கைகளை அசைக்க முடியவில்லை.

ஆச்சரியமாக அந்த சிங்கம், மனித குரலில் பேச துவங்கியது...

'அரசே! நான், சிவபெருமான் பக்தனானதால், உன்னால் என்னை கொல்ல முடியாது. நான் பசியுடன் இருக்கிறேன். என் பசியைப் போக்க பசுவை கொல்ல விடு...' என்றது, சிங்கம்.

'நான், இந்நாட்டு அரசன். நாட்டில் வாழும் உயிர்களை காப்பது என் கடமை. பசுவை விட்டு விட்டு என்னை கொன்று, உன் பசியைப் போக்கிக் கொள்...' என்றார், திலீபர்.

'அரசே! நான், சிவபெருமானின் சேவகன். சிங்க உருவில் உன்னை சோதிக்க அனுப்பப்பட்டேன். உன் இளகிய மனதையும், சேவை மனப்பான்மையையும் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு ஆண் பிள்ளை பிறப்பான்...' என, வாழ்த்தியது.

அதன்படி, அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு, ரகு என்ற பெயர் சூட்டப்பட்டது. சூரிய வம்சம், அதன் பின் அவர் பெயரால் ரகு வம்சம் என, அழைக்கப்பட்டது.

மகாவிஷ்ணு, ராமராக அவதரித்தது, இந்த வம்சத்தில் தான்.

பிற உயிர்களையும் தம் உயிர் போல நேசிப்பது தான், தெய்வீக குணமாகும். அந்த குணம், நம் வம்சத்தையே செழிக்க செய்யும்!

அருண் ராமதாசன்

அறிவோம் ஆன்மிகம்!

தினமும் கடலில், ஸ்நானம் செய்யக் கூடாது. பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிரகண நாட்களில் மட்டும் தான், கடலில் ஸ்நானம் செய்யலாம். ஆனால், ராமேஸ்வரத்திலும், கன்னியாகுமரியிலும் எப்போதும் சமுத்திர ஸ்நானம் செய்யலாம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us