Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம்: நம்பினால் நடக்கும்!

ஞானானந்தம்: நம்பினால் நடக்கும்!

ஞானானந்தம்: நம்பினால் நடக்கும்!

ஞானானந்தம்: நம்பினால் நடக்கும்!

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
பக்கத்து கிராமத்தில் இருக்கும் துறவியிடம் படிக்கச் சேர்ந்தான், ஏழைச் சிறுவன். ஆபத்தான விலங்குகள் இருக்கும் அடர்ந்த காட்டுப் பாதையில் தினமும் போய் வர வேண்டும். அவனைக் கூட்டிப் போகவோ, துணைக்கு வரவோ யாருமில்லை.

'நீ கவலைப் படாதே... ஏதாவது ஆபத்து என்றால், பகவான் கிருஷ்ணனைக் கூப்பிடு, அவன் துணைக்கு வருவான்...' என, சிறுவனுக்கு சொல்லி அனுப்பினாள், அம்மா. அவனும், உற்சாகமாக படிக்க கிளம்பினான்.

ஒரு வாரம் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருநாள் காட்டுப் பாதையில், துாரத்தில் நரி வருவது தெரிந்தது. பயந்து போன சிறுவன், 'கிருஷ்ணா...' என அழைத்தான். ஒரு சிறுவனைப் போல உருவெடுத்து வந்த, கிருஷ்ணன், இந்த சிறுவனைப் பத்திரமாக கைப்பிடித்து அழைத்துச் சென்றான். நரி விலகி ஓடியது.

அன்று முதல் எப்போது ஆபத்து என்றாலும் சிறுவன், 'கிருஷ்ணா...' என்பான். அடுத்த நொடியில் பகவான் வந்து, அவன் கரம் பற்றி அழைத்துச் செல்வார். இப்படியே அவன் பயணம் தொடர்ந்தது. இதை யாரிடமும் சொன்னதில்லை, சிறுவன்.

துறவிக்கு பிறந்தநாள் வந்தது. அவரிடம் படிக்கும் மாணவர்கள் எல்லாரும், 'குருவுக்கு ஏதாவது பரிசு தர வேண்டும்...' என பேசிக் கொண்டனர். துறவிக்குத் தர, ஏழைச் சிறுவனிடம் ஒன்றுமில்லை. எப்போதும் உதவிக்கு வரும் பகவானிடம் கேட்டான்.

ஒரு மண் குடுவை நிறைய பால் கொடுத்த பகவான், 'இதைத் துறவியிடம் கொடு...' என்றார். அவனும் கொண்டு போனான்.

பணக்கார மாணவர்கள் பலரும் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகளை ஆர்வமாக வாங்கிக் கொண்ட துறவி, 'கொண்டு போய் வேலைக்காரனிடம் கொடு...' என, சிறுவனிடம் கூற, அவனும் கொடுத்தான்.

பாலை காய்ச்ச பாத்திரத்தில் ஊற்றினான், வேலைக்காரன். குடுவை காலியாகவில்லை. மீண்டும் பால் நிரம்பிவிட்டது. அட்சய பாத்திரம் போல, எவ்வளவு முறை ஊற்றினாலும், திரும்பத் திரும்ப குடுவை நிரம்பியது.

ஆச்சர்யம் அடைந்து, துறவியிடம் சொன்னான், வேலைக்காரன். இந்த அதிசயத்தை பார்த்து வியந்த துறவி, சிறுவனைக் கூப்பிட்டு, 'இது எப்படிக் கிடைத்தது?' என்றார்.

'பகவான் கிருஷ்ணர் கொடுத்தார்...' என்ற சிறுவன், தனக்கு பகவான் இதுவரை எப்படியெல்லாம் உதவினார் என்பதையும் விவரித்தான்.

அதைக் கேட்டு சிரித்து, 'பொய் சொல்லாதே! கடவுளை யாரும் பார்த்தது கிடையாது. அப்படி கடவுள் வருவதற்கு வாய்ப்பே இல்லை...' என்றார், துறவி.

'நீங்கள் என்னுடன் வாருங்கள். பகவானைக் காட்டுகிறேன்...' என, துறவியை அழைத்து காட்டுக்குள் போனான், சிறுவன்.

வழக்கம் போல, 'கிருஷ்ணா...' என கூப்பிட, பகவான் வரவில்லை. பலமுறை அழைத்தும் வராததால், அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தார், துறவி; சிறுவனுக்கு அழுகை வந்தது.

'ஏன் கிருஷ்ணா வரவில்லை?' என, கெஞ்சும் குரலில் கேட்டான்.

'என்னை நம்பாத அந்த மனிதருக்கு நான் ஏன் காட்சி தர வேண்டும்?' என, அசரீரியாக பதில் சொன்னார், பகவான்.

நம்பிக்கை இருந்தால் மட்டுமே, பகவான் அற்புதங்களை நிகழ்த்துவார் என்பதை விளக்கும் கதை இது.

அருண் ராமதாசன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us