Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
பா - கே

ஜோல்னாபையை ஒரு பக்கம் மாட்டிய படியும், கக்கத்தில், அன்றைய நாளிதழை இடுக்கிய படியும், மேல்மூச்சு வாங்க, அலுவலகத்தினுள் நுழைந்து, நாற்காலி ஒன்றில் அமர்ந்து, 'அப்பாடா... ஒரு வழியா வந்து சேர்ந்தேன்...' என்றார், 'திண்ணை' நாராயணன். அங்கிருந்த உதவியாளரை அழைத்து, 'கொஞ்சம் வெந்நீர் கொடுப்பா...' என்று கேட்டு வாங்கி, குடித்தார்.

தன்னை ஆசுவாசப்படுத்திய பின், நாளிதழை பிரித்து, படிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், 'ச்சே... பேப்பரை பிரித்தாலே, ஒரே சண்டையும், சச்சரவுமான செய்தியே இருக்கு.

'நிலாவையும், செவ்வாய்க்கிரகத்தையும் ஆளப்போகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். ஆனால், இன்னமும் ஒரு நாட்டுக்காரன், இன்னொரு நாட்டில் குண்டு போட்டு அழிப்பதும், ஆக்கிரமிப்பதுமாக இருக்கிறான். போர் இல்லாத உலகம் அமையவே அமையாதா...' என்று அலுத்துக் கொண்டார், நாராயணன்.

'நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவது புதிதா என்ன! நாடோடிகளாக திரிந்த மக்கள், ஒரு கட்டத்தில், ஒவ்வொரு பகுதியை தங்களுக்கு உரிமையாக்கி, வாழ துவங்கிய போதே, அடுத்தவருக்குரிய பகுதியை ஆக்கிரமிக்கும் குணமும் வந்துவிட்டது. அதன்பின், ராஜாக்கள் வந்து, படைகளை உருவாக்கி கொண்டனர்.

'ஆனாலும், அக்கால அரசர்கள், போர் புரிவதிலும், பல தர்மங்களை கடைப்பிடித்தனர். நம் அண்டை நாடுகள் போல் அடாவடிதனம் கிடையாது...' என்றார், மூத்த செய்தியாளர் ஒருவர்.

'வரலாறு பாடத்தில் பட்டம் வாங்கியவராச்சே... சரியாதான் சொல்றீங்க. அது சரி... போர் புரிவதற்கு ஏதோ தர்மங்கள் கடைப்பிடித்ததாக கூறினீரே... அது என்ன? என்றார், நாராயணன்.

சொல்ல ஆரம்பித்தார், செய்தியாளர்:

ஒரு நாட்டோட ராஜாவாக இருந்தா, அவர், இன்னொரு நாட்டு ராஜாவோடு சண்டை போடுவதற்கான சந்தர்ப்பம் வரத்தான் செய்யும்.

தன் நாட்டுக்கு தொந்தரவு ஏற்படும் போது, தற்காப்பு மற்றும் தேசத்தை காப்பாற்றுவதற்காக சண்டை போட வேண்டி வரும்.

அடுத்த நாட்டுல அதர்மம் அதிகமா இருந்தாலும், அங்கே தர்மத்தை நிலைநாட்டறதுக்காக சண்டைக்குப் போனவங்களும் உண்டு. அந்தக் காலத்துல, தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதற்காக, சண்டைக்கு போனவங்களும் உண்டு.

யுத்தம் ஆரம்பிக்கணும்ன்னா கூட, நேரடியா போரிலே இறங்கறதில்லை. படிப்படியா நாலு வழியைத் தாண்டணும். நாலாவது வழிதான், போர்.

முதல் மூணு வழியைக் கடைப்பிடிச்சு பார்க்கணும். அது மூணும் சரியா வரலேன்னா தான், நாலாவது வழியைக் கடைப்பிடிக்கணுமாம். அர்த்த சாஸ்திரமும், தர்ம சாஸ்திரமும் இதை, 'உபாய சதுஷ்டயம்' என்று கூறுகிறது. அந்த நாலு வழிகள், சாமம், தானம், பேதம் மற்றும் தண்டம்.

ஒரு ராஜா இன்னொரு ராஜாகிட்டே அன்போட பழகி, அவனை அடங்கி வரச் செய்ய முடியுமான்னு முதலில் பார்க்கணும். வேண்டியவர்களை அனுப்பி, அவனுக்கு நல்ல வார்த்தைகளை சொல்லச் செய்யணும். மனசுல அமைதியோட அதுக்கான முயற்சியில் ஈடுபடணும். அது தான், சாமம்.

ரெண்டாவது வழி, தானம்!

அதாவது, நாம தான் ராஜா, இன்னொரு ராஜாகிட்டே போர் செய்யப் போறோம்ன்னு வச்சிக்குங்களேன். நமக்குப் பிரியமான பொருளை அவனுக்குக் கொடுத்து, என்னுடைய ராஜ்ஜியத்தோட சேர்ந்துடறியான்னு கேட்கணும். அவன் படையெடுத்து வந்தா, இப்படி எதையாவது கொடுத்து, அவனை திரும்பிப் போக வைப்பது.

ராஜ்ஜியத்துலே ஒரு சின்ன பகுதியை சண்டை இல்லாமலே கொடுத்துடறது அல்லது தனதான்யங்களை கொடுக்கறது. இல்லேன்னா, ராஜகுமாரியை எதிராளி ராஜாவுக்கோ அல்லது ராஜகுமாரனுக்கோ திருமணம் பண்ணி கொடுத்து, அவன் கூட சண்டை இல்லாமல், சுமூக உறவை ஏற்படுத்திக்கறது. இதெல்லாம் தானோபாயம்.

சாமம் என்பது, அன்பால் மனசை மாத்தறது; தானம் என்பது பொருள் கொடுத்து மனசை மாத்தறது. அதனால, முன்னதை விட இது கொஞ்சம் மட்டம் தான்.

மூன்றாவதாக வரும், பேதம் இருக்கே, அது, இதையெல்லாம் விட கொஞ்சம் மட்டம்.

பேதத்தை ஒரு உபாயமா கையாளறது, பேதோபாயம். இந்த உபாயத்தை வாழ்க்கை விஷயங்கள்லே பின்பற்றக் கூடாது. பேதமும், தண்டமும் ராஜாங்கத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற உபாயங்கள்.

'டிவைட் அண்டு ரூல்'ன்னு சொல்றாங்கள்லே... பிரித்தாளுவது. அது தான் பேதோபாயம்.

எதிரியோட முகாம்ல பிளவை ஏற்படுத்தி, அவனுடைய பலத்தை, ஆதரவு குறையற மாதிரி செய்யறது. அவனுடைய பலத்தைக் குறைச்சு இப்ப எனக்கு அடங்கறீயா என்று கேட்டு, கப்பம் கட்ட வைக்கிறது.

இதில் கூட, ஒரு தார்மீக கட்டுப்பாடு வெச்சிருக்காங்க. அதாவது, எதிரிக்கு பலம் குறைஞ்ச நிலையிலேயும், அவனா பணிஞ்சு வர்றானான்னு பார்த்துட்டு, அதுக்கும் வரலேன்னா தான் யுத்தம்.

சாம, தான, பேத, தண்டத்துல, நாலாவதா வருதே தண்டம், அது தான் யுத்தம்.

கொஞ்சம் யோசிச்சு பார்த்தா இப்பவும் கூட, உள்நாட்டு விவகாரங்கள்ல இந்த நாலு வழியையும் பயன்படுத்துறோம்.

எப்படி என்றால், மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்றது, சாமம். அவங்களுக்கு சலுகைகள் காட்டறது, தானம்.

குற்றவாளிகள்லே ஒருத்தனையே, 'அப்ரூவரா' ஆக்கிவிட்டு, குற்றத்தை நிரூபணம் செய்யறது, பேதம்.

கடைசியா குற்றவாளிக்கு கொடுக்கற தண்டனை தான், தண்டம்.

- என்று கூறி முடித்தார், செய்தியாளர்.

'நாம் எத்தனையோ விஷயங்களுக்கு, உலகத்துக்கு வழிகாட்டி உள்ளோம். அதில், இதுவும் ஒன்றாக ஏற்றுக் கொண்டிருந்தால், இப்படி நாளுக்கொரு போரும், பொழுதுக்கொரு அகதிகள் கூட்டமும் பெருகாமல் இருக்குமே...' என்று நினைத்து கொண்டேன், நான்.



'அவசரமா மருத்துவமனைக்கு போகணும். அதுக்கு என்ன வழி...' என்றான், ஒரு ஆள்.

'வேகமா நடந்து போ. அடுத்தத் தெரு கடைசியிலே தான் மருத்துவமனை...' என்று கூறினர், அங்கிருந்தவர்கள்.

'அதைவிட சீக்கிரமா போகணும்...' என்றான்.

'அப்படின்னா சைக்கிள்லே போகலாம்...' என்றனர்.

'அதை விட வேகமா போகணும்...' என்றான்.

'அப்படின்னா, கார்லே போகலாம்...' என்றனர்.

'அதை விட வேகமா போகணும்...' என்றான்.

'அப்படின்னா, அதோ எதிரிலே நிக்குதே ஒரு நாய், அதை கல்லாலே அடி. துரத்த ஆரம்பிக்கும். சீக்கிரம் போய் சேர்ந்துடலாம்...' என்றனர்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us