Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/உலகில் பலவீனமான கரன்சிகள்!

உலகில் பலவீனமான கரன்சிகள்!

உலகில் பலவீனமான கரன்சிகள்!

உலகில் பலவீனமான கரன்சிகள்!

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் வர்த்தகத்தின் மூலம், உலகின் பிற பகுதிகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதை வைத்தே, ரூபாய் மதிப்பு, கருத்தில் கொள்ளப்படுகிறது. இருப்பினும், அனைத்து நாடுகளும், அவற்றின் கரன்சி மதிப்புகளை ஒரே சீராக பராமரிக்க முடியவில்லை.

பலவீனமான பொருளாதார சூழல், அரசியல் பிரச்னைகள் மற்றும் உலகளாவிய அழுத்தங்கள் போன்ற தாக்கங்களை எதிர்கொள்கின்றன, சில நாடுகள்.

சமீபத்தில், 'போர்ப்ஸ்' இதழ், உலகின் பலவீனமான கரன்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகளையும், அதன் பின்னணி காரணங்களையும், இங்கே பார்க்கலாம்...

மேற்கு ஆசிய நாடான ஈரானின் - ரியால், தற்போது உலகின் மிகவும் பலவீனமான கரன்சியாக, முதலிடத்தில் உள்ளது. 1978 - 79ல், இஸ்லாமியப் புரட்சியில் துவங்கி, ஈரானில் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் காரணமாக, ஈரானிய ரியாலின் மதிப்பு, பல ஆண்டுகளாக, கணிசமாகக் குறைந்து விட்டது

தென் கிழக்காசிய நாடான, வியட்நாமின் - டாங், நீண்ட காலமாக பலவீனமான கரன்சியாக உள்ளது. குறிப்பாக, வியட்நாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொருளாதாரத்தில் இருந்து, சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு மாறியதே, இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சியரா லியோனியன் - லியோன், உலகின் மூன்றாவது பலவீனமான கரன்சியாகும். சியரா லியோனியன் போர், அரசியல் பிரச்னை மற்றும் வறுமை போன்ற பல மோசமான சூழல்களை எதிர்கொண்டது. இந்த சவால்கள் காரணமாக, பல ஆண்டுகளாக லியோன் கரன்சி, அதன் மதிப்பை கணிசமாக இழந்துள்ளது

தென் கிழக்காசிய நாடான லாவோஸின் - கிப், உலகின் நான்காவது பலவீனமான கரன்சியாகும். லாவோஸ், மிகவும் சிறிய அளவிலான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. மேலும், வெளிநாட்டு உதவி மற்றும் முதலீட்டை, அதிகம் சார்ந்து உள்ளது. இந்த காரணங்களால், கிப் கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் - ருபியா, பலவீனமான கரன்சிகளின் பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளது. இயற்கை வளங்களை விற்பனை செய்வது இங்கு, அதிகம். ஆனால், விலை வீழ்ச்சி, அதன் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. சந்தை உயர்வு மற்றும் போதிய அன்னிய செலாவணி இல்லாமை ஆகியவை, ருபியா கரன்சியின் மதிப்பை குறைத்துள்ளது

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் - சோம், ஆறாவது இடத்தில் உள்ளது. உஸ்பெகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொருளாதாரத்தில் இருந்து, சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு மாறுகிறது. எனவே, அரசியல் பிரச்னைகள் மற்றும் திறமையின்மை காரணமாக, இந்த கரன்சி பலவீனமாக உள்ளது

மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் - பிராங்க், ஏழாவது இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக அரசியல் பிரச்னைகள், ஊழல் மற்றும் மெதுவான வளர்ச்சி காரணமாக, பிராங்க் கரன்சி பலவீனமாக உள்ளது. கினியாவில், கனிமங்கள் போன்ற மதிப்புமிக்க இயற்கை வளங்கள் நிறைய இருந்தாலும், அந்த நாட்டினால், மற்ற தொழில்களை மேம்படுத்த முடியவில்லை. இது, அதன் கரன்சியின் மதிப்பை குறைத்துள்ளது

தென் அமெரிக்காவில் உள்ள பராகுவேவின் - குரானி, எட்டாவது இடத்தில் உள்ளது. விலைவாசி உயர்வு, வறுமை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறது, பராகுவே. இது, குரானி கரன்சியை பலவீனப்படுத்தி உள்ளது. இங்கு, விவசாயம் மேம்பட்டாலும், பொருளாதாரம் என்பது, இன்னும் பெரிய அளவில் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது

தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் - - ரியால், ஒன்பதாவது இடத்தில் உள்ளது. நகரங்களிலும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும், மக்கள் பெரும்பாலும், ரியாலுக்குப் பதிலாக, அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துகின்றனர். மக்கள், ரியாலை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அரசு விரும்பினாலும், அதன் மதிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் - ஷில்லிங், 10வது இடத்தில் உள்ளது. ஷில்லிங், பல ஆண்டுகளாகவே பலவீனமாக உள்ளது குறிப்பாக, 1971 - 79களில், இடி அமீனின் ஆட்சியின் போது ஏற்பட்ட முக்கிய பிரச்னைகள் காரணமாக, ஊழலும், மோசமான தலைமையும், நாட்டைப் பின்னுக்குத் தள்ளின. இதன் விளைவாக, இன்று உலகின் பலவீனமான கரன்சிகளில் ஒன்றாக ஷில்லிங் உள்ளது.

எம். முகுந்த்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us