Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 24 வயது ஆண். கல்லுாரியில் படித்து வருகிறேன். என் அப்பா, ரயில்வே துறையில் பணிபுரிகிறார். அம்மா, இல்லத்தரசி. எனக்கு ஒரு அக்கா. ரஷ்யாவில், மருத்துவம் படித்து வருகிறார்.

எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். இதில், பெண் நண்பிகளும் உண்டு. நண்பன் ஒருவன், பெண் நண்பி ஒருவளை காதலிக்கிறான். அவர்கள், சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்வர். அச்சமயம், நானும், மற்ற நண்பர்களும் அவர்களை சமாதானப்படுத்தி வைப்போம்.

மற்ற நண்பர்களை விட, நான் சொல்லும், 'அட்வைசை' உடனடியாக கேட்டுக் கொள்வாள், அந்த பெண் நண்பி.

இதுபோன்று அடிக்கடி நடைபெற, அப்பெண் நண்பிக்கும், எனக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது. நான் எது சொன்னாலும் கேட்டு, அதன்படி நடப்பாள்.

நாளடைவில், இருவரும் விரும்ப ஆரம்பித்தோம். நண்பனின் காதலியை, நான் கவர்ந்து கொண்டதாக, ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு விட்டது; நண்பனுக்கு துரோகம் செய்கிறோமே என்று நிம்மதி இழந்து தவிக்கிறேன்.

இதனால், படிப்பில் நாட்டம் குறைந்து வருகிறது. என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும், என் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என்று தோன்றுகிறது.

இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வருவதற்கு சரியான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

— இப்படிக்கு,

உங்கள் மகன்.



அன்பு மகனுக்கு —

தற்கால யுவன், யுவதிகளின் ஆபத்தான ஆயுதம், 'பிளிட்டரிங்!'

'பிளிட்டரிங்' என்றால், விளையாட்டு காதல் உரையாடல், காதல் சரசம், திடீர் காதல் பேச்சு, பாலியல் ரீதியான அரட்டை மற்றும் கடலை போடுதல் என, பல அர்த்தங்கள் உள்ளன.

நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் நட்பாய் இருக்கின்றனர் என, வைத்துக் கொள்வோம். அதில், ஒரு ஜோடி தீவிரமாய் காதலித்துக் கொண்டிருக்கிறது எனவும் வைத்துக் கொள்வோம். இவர்களின் காதல் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் தெரியும்.

இருந்தாலும், நான்கு ஆண்கள், நான்கு பெண்களிடமும், நான்கு பெண்கள், நான்கு ஆண்களிடமும், பாலியல் ரீதியான அரட்டை அடித்துக் கொண்டிருப்பர்.

எட்டு துாண்டில்கள், எட்டு மீன்கள். எந்த மீன், எந்த துாண்டிலிலும் சிக்கும். சிக்கிய மீனிடம் ஓரிரவு தாம்பத்தியம் நடக்கும் அல்லது முதல் பிளாட்பாரத்துக்கு வரவேண்டிய ரயில் நாலாவது பிளாட்பாரத்துக்கு மாற்றி விடப்படும்.

அடுத்து, நீ செய்ய வேண்டியவை-:

* உன் நண்பனின் காதலையும், உன் காதலையும் கட்சி மாறிய காதலியின் காதலையும் சீர்துாக்கி பார்த்து, தணிக்கை செய்.

நண்பனின் காதல் ஆழமானது என்றால், கிளை தாவிய காதலியை அவனிடமே ஒப்படை. கட்சி மாறிய காதலியை, நண்பன் திருமணம் செய்து கொண்டால், அவர்களது திருமணம் தோற்று போகும்.

கட்சி மாறியவள், உன் மீது ஆழமான காதலை வைத்திருக்கிறாள் என்பது உறுதியானால், நண்பனிடம் மனம் விட்டு பேசு. அவனுடைய ஒப்புதல் மற்றும் மன்னிப்புடன் உன் காதலை தொடர்.

* கட்சி மாறிய காதலி, அரசியல்வாதி போல கிளைக்கு கிளை தாவிக் கொண்டே இருப்பாள் என்பது உறுதியானால், அவளை கத்திரித்து விட்டு, நண்பனுடன் நட்பைத் தொடர்.

* இனி, எந்த காதல் ஜோடியின் ஊடலுக்கும், நரி நாட்டாண்மை செய்ய கிளம்பி விடாதே; அவர்களின் பிரச்னையை, அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.

* காதல், மாறு வேஷம் போட்ட காமமாய் இருந்து விடக் கூடாது. உடல், நிறம், பணம், படிப்பு, அதிகாரம், ஜாதி, மதம், இனம் தாண்டி பூக்கும் பூ, மெய்யான காதல். மெய்யான காதல் கிடைக்காவிட்டால் பரவாயில்லை, பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை மணந்து கொள்.

* எவ்வகை உறவிலும் நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்டு விடாதே.

நல்ல வேலைக்கு போய் வாழ்க்கையில் செட்டிலாகு மகனே!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us