Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேழமலைக்கோட்டை! (16)

வேழமலைக்கோட்டை! (16)

வேழமலைக்கோட்டை! (16)

வேழமலைக்கோட்டை! (16)

PUBLISHED ON : ஜூன் 15, 2024


Google News
Latest Tamil News
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் எல்லையில் எதிரிகள் நடமாடுவதாக தகவல் வந்ததால் அதை முறியடிக்க சென்ற படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதை சரி செய்யும் விதமாக அண்டை நாட்டு மன்னரிடம் உதவி கேட்க சென்றான் துாதுவன். பணியை முடிக்காமல் அவசரமாக திரும்பியவனிடம் விசாரணை நடந்தது. இனி -



'எதிரிகள், என்னை சோதனையிட முயலும் முன், தப்பி விட்டேன்...'

மிக இயல்பாக சொன்னான் துாதுவன்.

அவனை சந்தேகத்துடன் பார்த்தனர் அமைச்சரும், தளபதியும்.

'ஓலை எங்கே...'

'என் உடலுடன் சேர்த்து கட்டி வைத்திருக்கிறேன்...'

சுவர் பக்கம் திரும்பி, ஆடையை விலக்கி, அந்த ஓலைக் குழலை எடுத்து கொடுத்தான் துாதுவன்.

அதை வேகமாக வாங்கிய அமைச்சர் உற்றுப் பார்த்து மகிழ்ந்தார்; ஓலையில் அவர் இட்டிருந்த முத்திரை அப்படியே இருந்தது. உடைக்கப்படாததை உறுதி செய்து கொண்டார்.

அமைச்சரிடம் இருந்த ஓலைக் குழலை வாங்கிப் பார்த்து, திருப்தியுடன் தலையசைத்தார் தளபதி.

'துாதுவனே... நீ திறம்பட, சிறப்புடன் செயல்பட்டுள்ளாய்...'

பாராட்டினார் அமைச்சர்.

'எதிரிகள் பற்றி வேறு ஏதாவது, செய்தி உள்ளதா...'

'தளபதி... காடு முழுதும், எதிரிகளின் கண்காணிப்பில் உள்ளது. அங்கு, சிறிய அசைவு தெரிந்தாலும் கண்டுபிடித்து விடுகின்றனர்...'

'அப்படியா...'

'ஆம்... அவர்கள் கண்காணிப்பை மீறி, அந்த காட்டை கடந்து செல்வது கடினம்...'

தளபதியின் முகத்தில் அயர்ச்சி தெரிந்தது.

குழப்பத்துடன் ராஜகுருவை பார்த்தார் அமைச்சர்; அவர் முகத்திலும், சோர்வு தெரிந்தது.

'இது, மிகவும் கவலைக்குரிய செய்தி. கிட்டத்தட்ட நம் நாடு முற்றுகையிடப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது...' என்றார் ராஜகுரு.

'கடும் இக்கட்டான நிலை தான். அடுத்து என்ன செய்வது...'

ராஜகுருவை பார்த்தார் அமைச்சர்.

'சிறைப்பிடித்து சென்ற இளவரசரை எங்கு வைத்திருப்பர்...'

'நிச்சயம் இளவரசரை காட்டில் வைத்திருக்க வாய்ப்பில்லை; அவர்களுடைய நாட்டுக்கு அழைத்து சென்றிருப்பர்...'

'இளவரசருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் மீட்க வேண்டும்...'

'வேறு வழியில்லை; போர் புரியத் தான் வேண்டும்...'

உறுதியாக கூறினார் ராஜகுரு.

சிறிது யோசனைக்கு பின், ராஜகுரு கூறியதை ஒப்புக் கொண்டார் தளபதி.

'காட்டில் முகாமிட்டிருக்கும் எதிரிகளை முதலில் விரட்ட வேண்டும். அவர்களை வழிநடத்தும் தலைவனை சிறை பிடித்து விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்...'

'விரைந்து போர் புரிய வேண்டும். காலம் கடத்தினால், எதிரிகள் இன்னும் பலம் பெற்று விடுவர்; கூடுதலாக ஆயுதம் மற்றும் உணவு பொருட்களை சேமிப்பர்...' என்றார் அமைச்சர்.

'எதிரிகள் போர் அறிவிப்பு செய்யாமல், நம் கோட்டையை மறைமுகமாக முற்றுகையிட்டு இருப்பது போல, நாமும் எந்த அறிவிப்பும் இன்றி படையுடன் சென்று, அவர்களை தாக்குவது தான், சரியான வழிமுறையாக இருக்கும்...' என்றார் ராஜகுரு.

'எதிரிகளின் தாக்குதலில் தந்திரம் மிகுந்துள்ளது...' என்றார் தளபதி.

'அவர்கள் இதுவரை, நம் மீது தாக்குதல் எதுவும் தொடுக்கவில்லை. நம் வீரர்கள் காட்டுக்குள் செல்லும் போது மட்டுமே சிறைபிடித்து விடுகின்றனர்...'

குறுக்கிட்டு பதிலளித்தார் அமைச்சர்.

'மோப்ப நாய்களை விஷ அம்பு எய்து கொல்வது, வீரர்கள் மீது, குளவிகளை ஏவி கொட்ட வைப்பது, இம்மாதிரியான வித்தியாசமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தியுள்ளனரே...'

'தாக்குதல் முறையே வினோதமாக தான் இருக்கிறது...'

'அதை முறியடிக்கும் தந்திரங்களை நன்கு அறிந்த பின்தான் களமிறங்க வேண்டும்...'

'எதிரிகளிடம் தப்பி வந்தது இரண்டு பேர் தான். அவர்களை தேடி சென்ற குழு வீரன் ஒருவன். பின், இப்போது ஓலை எடுத்து சென்ற இந்த துாதுவன். மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை...'

'அவர்களை கைதிகளாக வைத்திருப்பரோ அல்லது சிரச்சேதம் செய்து இருப்பரா...'

'சிரச்சேதம் செய்ய வாய்ப்பில்லை. வீரர்களிடமிருந்து, நம் கோட்டையின் அமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு விபரங்களை அறிய முயற்சிப்பர்...'

'ஒருவேளை, நம் வீரர்கள் போதிய தகவல் சொல்லவில்லை என்றால்...'

'அப்போது, சிரச்சேதம் செய்வர்...'

'நாளை, முழுமையாக படையுடன் களம் இறங்குவோம். தென்திசை நோக்கி பாதுகாப்புடன் நகர்வோம்; அதற்கு முன் எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்க, தகுந்த வியூகங்களை வகுப்போம்...' என்றார் அமைச்சர்.

'குளவிகள் போன்று காட்டு உயிரினங்களை ஏவி தாக்குதல் நடத்தினால் கொடூரமாக இருக்குமே... அதை எப்படி சமாளிப்பது...'

'தேன் சேகரிக்க செல்லும் பழங்குடியின மக்கள், தேனீக்கள் கொட்டுவதை தவிர்க்க, மூலிகைகளை உடலில் தேய்த்து செல்வது போல, நம் வீரர்களுக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்...'

'அதற்கான சிறப்பு தைலத்தை தயாரிக்கிறேன்...'

குறுக்கிட்டார் வைத்தியர்.

'அதை தயாரித்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்...'

'நாட்கள் தேவையில்லை. காட்டில் மூலிகைகள் அபரிமிதமாக வளர்ந்துள்ளன. இந்த தைலம் காய்ச்சுவது எளிதான செயல்முறை தான். என் உதவியாளர்கள் அனைவரையும், தயாரிப்பு பணியில் ஈடுபட செய்தால், 10 மணி நேரத்திற்குள் தேவையான அளவுக்கு தைலத்தை தயார் செய்து விடலாம்...'

'உடனே, ஏற்பாடு செய்யுங்கள் வைத்தியரே...'

'வீரர்களுக்கு மட்டுமின்றி குதிரைகளுக்கும் கூட அவற்றை பூசி, பின் காட்டுக்குள் அனுப்ப வேண்டும். அது தான் பாதுகாப்பானது...' என்றார் தளபதி.

அனைத்து முன்னேற்பாடுகளுடன், அன்று மாலை, தளபதியின் தலைமையில், பெரும் படை கோட்டையின் தென்புறம் களமிறங்கியது.

அதிகாலை சூரியன் உதிக்கும் வேளையில், தேடலை துவங்க வியூகம் வகுக்கப்பட்டது. படை வீரர்களுக்கு வியூகங்களை விளக்கினார் தளபதி.

படை தலைவனான மகேந்திரனும், உடன் இருந்தான்.

அவர்கள், காலை நேரத்திற்காக காத்திருந்தனர்.

- தொடரும்...

- ஜே.டி.ஆர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us