Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (252)

இளஸ் மனஸ்! (252)

இளஸ் மனஸ்! (252)

இளஸ் மனஸ்! (252)

PUBLISHED ON : ஜூன் 01, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள பிளாரன்ஸ் அம்மா...

எனக்கு வயது, 15; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன். சமீபத்தில், என் தந்தை, ஒரு ஊருக்கு சென்று ஓலைச்சுவடி ஜோசியம் பார்த்தார்.

அந்த ஜோசியம் உண்மையா, பொய்யா... என்று அறியும் ஆசை எனக்கு ஏற்பட்டுள்ளது. ஓலைச்சுவடிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் கூறி, இன்றைய நாளை இனிமை ஆக்குங்கள் அம்மா... மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

டி.பரணி விஜயேந்திரன்.



அன்பு மகனே...

நாடி ஜோதிடம் பொய் என்றே நான் நம்புகிறேன். பல கிராமங்களில் போலி ஓலைச்சுவடிகள் தயாரிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஓலைச்சுவடியின் வரலாற்றை கீழ்கண்டவாறு புரிந்து கொள்...

இன்று, மின் புத்தகம்; நேற்று, அச்சு புத்தகம்; அதற்கு முன் ஓலைச்சுவடிகள்.

ஓலைச்சுவடிகளுக்கு பனைமர ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. இயற்கைக்கு தீங்கிழைக்காத ஒன்று ஓலை.

ஒலியை பதிவு செய்யும் மின்காந்த நாடாவுக்கு, 20 ஆண்டுகள் ஆயுள் உண்டு. தற்போது நடைமுறையில் உள்ள, 'ஆப்டிகல் டிஸ்க்' என்ற தட்டுக்கு, 100 ஆண்டுகள் ஆயுள். ஆனால், ஓலையில் எழுதி தயாரிக்கப்பட்ட சுவடிகளோ, -300 ஆண்டுகள் தாக்கு பிடிக்கும் என்பதை புரிந்து கொள்.

கி.மு., முதல் நுாற்றாண்டில் எழுதப்பட்ட திருக்குறள், 10 முறைகளுக்கும் மேல் மறுபிரதி எடுக்கப்பட்டிருக்கும். இன்று நம் கையில் புத்தகமாக உள்ளது.

பனையில், தாளிப்பனை, கூந்தல் பனை, லாந்தர் பனை என்ற வகைகள் உள்ளன. இவற்றில் குருத்து ஓலைகளை எடுத்து, மஞ்சள் தடவி, நன்கு பதப்படுத்தி, சரியான அளவில் வெட்டிய பின், அதில் எழுத்தாணியால் எழுதும் பழக்கம் பண்டைய தமிழரிடம் இருந்தது.

எழுதிய பின், சுடர்கரி அல்லது மஞ்சளை அதன் மீது தடவுவர். பூச்சி அரிக்காமல் இருக்க, வேம்பு, வசம்பு, எலுமிச்சம் புல் எண்ணெய், கற்பூர எண்ணெய் பூசி பாதுகாப்பர். எழுதிய ஓலைகள் துளையிடப்பட்டு மொத்தமாக கோர்க்கப்பட்டு புத்தகமாக ஆக்கப்படும்.

துணியில் சுற்றியோ, மரத்தாலான உறை போட்டோ, ஓலைச்சுவடிகளை பாதுகாத்தனர் தமிழர்கள்.

உலகிலே நீளமான ஓலைச்சுவடி நாகமாதாச்சாரியா எழுதிய, 'பிரம ேஹஸ்வராச்சார சங்க்ரஹா' ஆகும்.

ஓலைச்சுவடி பயன்பாடு கி.மு., 5ம் நுாற்றாண்டில் துவங்கியதாக கூறப்படுகிறது. அது கி.பி., 19ம் நுாற்றாண்டு வரை ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியாவில் அதிகம் இருந்தது.

தமிழின் தொன்மை செவ்வியல் பாடல்களின் தொகுப்பான சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், புராண இலக்கியம், கட்டடக்கலை, கணிதம், வானியல், ஜோதிடம், மருத்துவம் சார்ந்த அறிவு ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன.

ஓலைச்சுவடி எழுத்துகள் நான்கு வகைப்படும்.

அவை...

* கண்ணெழுத்து

* வட்டெழுத்து

* குயிலெழுத்து

* கோலெழுத்து எனப்படும்.

இது, -கி.பி., 17ம் நுாற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களை கண்டறிந்து பதிப்பித்தார் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர். தமிழகத்தில் தேடி கண்டுபிடித்த, 3,000க்கும் அதிகமான ஓலைச்சுவடிகளை இவர் பதிப்பித்துள்ளார்.

ஓலைச்சுவடிகளை, நவீன தொழில்நுட்பத்தில், 'டிஜிட்டல்' வடிவமாக மாற்றி பாதுகாக்க முடியும். அந்த பணியை செய்வதற்கு ஏராளமான அளவில் பொருள் உதவி செய்துள்ளார் சங்ககால நாணயவியலின் தந்தை என்று போற்றப்படும், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. பழங்கால அறிவின் சேமிப்பகமே ஓலைச்சுவடி.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us