Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு - கடிகாரம்!

அதிமேதாவி அங்குராசு - கடிகாரம்!

அதிமேதாவி அங்குராசு - கடிகாரம்!

அதிமேதாவி அங்குராசு - கடிகாரம்!

PUBLISHED ON : பிப் 24, 2024


Google News
Latest Tamil News
நேரத்தை அறிவிக்கும் கருவி கடிகாரம். இதற்கு, மணிக்கூடு என்ற பெயரும் உண்டு. கையில் மணிக்கட்டு பகுதியில் அணிவதால் கை கடிகாரம் என்றும் அழைப்பர்.

உலகில், கடிகாரம் பிறந்த கதை சுவாரசியமானது. அது பற்றி பார்ப்போம்...

உலகில் நேரத்தை அளவிடும் முறை கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிக வளர்ச்சியில் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடிகாரம் என்ற சொல், 14ம் நுாற்றாண்டில் உபயோகத்திற்கு வந்தது. லத்தீன் மொழியில், 'லக்ளோக்கா' என்ற சொல்லில் இருந்து பிறந்தது கடிகாரம்.

பழங்காலத்தில், சூரிய ஒளி மற்றும் நிழல் நகர்வை அடிப்படையாக கொண்டு தான் நேரம் கணக்கிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நேரத்தை அளவிட முயன்று முன்னோடியாக விளங்குகின்றனர் சுமேரியர்கள். தண்ணீரை பயன்படுத்தி, நேரத்தை அளவிடும் முயற்சி மேற்கொண்டிருந்தனர் கிரேக்கர்கள். இதற்காக, கருவியையும் வடிவமைத்திருந்தனர்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த பூட்டு செய்யும் தொழிலாளி பீட்டர் ெஹன்கின், நின்ற நிலையில் கடிகாரம் ஒன்றை கி.பி., 1510 உருவாக்கினார்.

ஐரோப்பாவில் டச்சு தொழில் நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ், ஊசல் அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை, கி.பி.,1656ல் உருவாக்கினார். நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். ஒரு நாளை, 24 மணிகளாகவும், மணியை, 60 நிமிடங்களாகவும், நிமிடத்தை, 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய நடைமுறையில், கடிகாரத்தை மேம்படுத்தினார்.

இப்போதுள்ள கடிகாரங்களுக்கு இதுதான் முன்னோடி.

துவக்கத்தில் கடிகாரத்தின் பகுதிகள் எல்லாம் மரத்தால் செய்யப்பட்டு இருந்தன. பின், உலோகம் மற்றும் கண்ணாடியால் செய்யப்படுகின்றன.

வட அமெரிக்க நாடான கனடா தொலை தொடர்பு துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன். கண்ணாடியால் ஆன கடிகாரத்தை, கி.பி., 1927ல் உருவாக்கினார். இது குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஊசல்களை பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே, 19ம் நுாற்றாண்டின் துவக்கம் வரை பயன்படுத்தப்பட்டன. சமச்சீராக அசையும் ஊசல், இரு முட்களை இயக்கி, சரியான நேரத்தை காட்ட பயன்பட்டது. இவ்வகை கடிகாரங்களை இன்றும் காணலாம். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் ஊசல் கடிகாரங்களில் மாற்றம் ஏற்பட்டது.

பாட்டரி என்ற மின்கலத்தை பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தை, 1840ல் கண்டுபிடித்தார் அலெக்சாண்டர் பெயின். பின், இவ்வகை கடிகாரம் மேம்படுத்தப்பட்டது. பெரிய மின்கலங்களுக்கு மாற்றாக, சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி., தொழிலகமே, இந்தியாவில் கடிகார தொழிற்சாலையை முதலில் நடத்தி வந்தது. முதலில் இறக்குமதி செய்த கடிகாரங்களையே விற்பனை செய்தது இந்த நிறுவனம்.

நம் நாட்டில் தற்போது டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற நிறுவனங்கள் கடிகாரம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. படிபடியான வளர்ச்சிகளுக்கு பின், கடிகாரம் முழு வடிவத்தை பெற்றுள்ளது.

அதன் உருவம், உள்ளடக்கத்தில் இன்றும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது கடிகாரத்தின் மீது மனிதனுக்கு இருக்கும் அபரிமித பற்றைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் காலத்தை கனிவுடன் அணுகி சாதனைகள் செய்வோம்.

- -என்றென்றும் அன்புடன், அங்குராசு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us