Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்! (235)

இளஸ்... மனஸ்! (235)

இளஸ்... மனஸ்! (235)

இளஸ்... மனஸ்! (235)

PUBLISHED ON : பிப் 03, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள ஆன்டி...

என் வயது, 13; பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவி. சமையலில் உப்பை பயன்படுத்தினால், உயர் ரத்த அழுத்தம் வருகிறது. சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் நீரிழிவு நோய் வருகிறது. மசாலாவை பயன்படுத்தினால் வயிற்றுப்புண்ணும், வயிற்றுப் போக்கும் வருகிறது.

உப்பு, சர்க்கரை, மசாலா இல்லாமல் சமைத்து சாப்பிட்டால், மனிதர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாமே... ஏன் கற்காலத்தில் இருந்தது போன்ற வாழ்க்கை முறைக்கு திரும்பக் கூடாது ஆன்டி. சரியான விளக்கம் சொல்லுங்க...

இப்படிக்கு,

ஆர்.எஸ்.தான்யா.



அன்பு மகளே...

மனித இனம் தோன்றி, 26 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. நான்கு லட்சம் ஆண்டுகளாய் வெப்பத்துக்காக, பாதுகாப்புக்காக, சமையலுக்காக நெருப்பை பயன்படுத்துகிறான் மனிதன்.

விவசாயத்தை கண்டுபிடித்து, 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆதி மனிதன் முதலில் மிருகங்களை வேட்டையாடி, அவற்றின் மாமிசத்தை பச்சையாக தின்றான். பின், நெருப்பில் வாட்டி தின்றான். தொடர்ந்து, உப்பு, புளி, காரம், எண்ணெய், மசாலா சேர்த்து சமையல் செய்து நாக்குக்கு ருசியாக தின்கிறான்.

சமையல் துறையில் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நடக்கிறது.

உப்பு ஒரு விலை மதிப்பற்ற கனிமம். நாகரிகத்தின் ஆரம்பக்கால வர்த்தகப் பொருள். ஒரு சில நாகரிகங்களில், குறிப்பாக, ஆசிய நாடான சீனாவில் நாணய செலாவணியாக பயன்பட்டது.

மேற்கு ஆப்பிரிக்காவில் தங்கத்தை கொடுத்து, உப்பை பெற்றனர். கி.மு., 6050 முதல் சமையலுக்கு உப்பு உதவி வருகிறது. உணவை பாதுகாக்கவும், சுவையூட்டவும் பயன்படுகிறது.

உப்பில், 97.99 சதவீதம் சோடியம் குளோரைடு உள்ளது; ஒரு நாளைக்கு, மனிதர் ஒருவருக்கு தேவையான உப்பின் அளவு, 500 மில்லி கிராம்.

வெள்ளை சர்க்கரையில் சுக்ரோஸ் அடங்கியுள்ளது. சுக்ரோஸ் மனித உடம்புக்கு தேவை தான்; குழந்தைகளுக்கு, ஆறு வயதாகும் வரை, 19 கிராமும், பெண்களுக்கும், 7 முதல் 10 வயதுள்ள சிறுவர், சிறுமியருக்கும், 24 கிராமும், ஆண்களுக்கு, 36 கிராமும் சர்க்கரை தினமும் தேவைப்படுகிறது.

சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில், கொத்தமல்லி, சீரகம், கடுகு, கருமிளகு, ஏலக்காய், இலவங்க பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், மஞ்சள், பெருஞ்சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயம், கேரம் விதை, கருஞ்சீரகம், வெந்தயம், குங்குமப்பூ போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் அடங்கியுள்ளன.

மசாலாவின் மூலப் பொருட்களில் ஒன்றான மஞ்சள், அழற்சி நீக்கி, வலி நிவாரணி, மூட்டு வலி போக்கி, நச்சு அகற்றியாக செயல்படுகிறது. இது கல்லீரலின் ஆற்றலை பெருக்கி, ஜீரண சக்தியை கூட்டும்; மஞ்சளில், 'கர்குமினாய்ட்ஸ்' என்ற பொருள் உள்ளது. இது, தினமும், 500 முதல், 2,000 மில்லி கிராம் வரை உடலுக்கு தேவை.

உப்பு, புளி, காரம், எண்ணெய், இனிப்பு மற்றும் மசாலாவால் உடலுக்கு பிரச்னை இல்லை. அதை பயன்படுத்தும் அளவில் தான் சூட்சமம் இருக்கிறது. மிதமாக பயன்படுத்தினால், உணவு, சொர்க்கமாக மாறும்; தாறுமாறாய் பயன்படுத்தினால் நரகமாகி விடும்.

உப்பு, இனிப்பு, மசாலா இல்லாத கற்காலத்துக்கு மனிதன் திரும்பினால் ஆயுள், 35 வயதை தாண்டாது. இப்போதைய, 21ம் நுாற்றாண்டு உணவை நொறுங்க தின்றால், 100 வயது வரை வாழ முடியும்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us