Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேண்டாமே பொறாமை!

வேண்டாமே பொறாமை!

வேண்டாமே பொறாமை!

வேண்டாமே பொறாமை!

PUBLISHED ON : ஜூன் 28, 2025


Google News
Latest Tamil News
ராமுவும், கோபுவும் நண்பர்கள். ஒரே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர்.

வகுப்பில் முதலிடத்தில் இருந்தான் ராமு. கோபுவோ மூன்றாம் இடம்.

இருவரும் உயர்வு தாழ்வாக எண்ணாமல் சகஜமாக பழகினர்.

இது பலருக்கு பொறுக்கவில்லை.

ஒரு நாள் -

அதே வகுப்பில் படிக்கும் செல்வன், ''ராமுவைப் பார்... எதிலும் முதலிடம் பெறுகிறான்; படிப்போ, விளையாட்டோ உன்னால் முந்த முடிகிறதா... எப்போதும் மூன்றாமிடம் தானே வருகிறாய்... ஒரு முறையேனும் அவனை வீழ்த்தி இருக்கிறாயா...'' என கோபுவை துாண்டி விட்டான்.

''நண்பா... முந்த முயல்கிறேன்; முடியவில்லை. அவன் திறமையால் ஜெயிக்கிறான். இதையா பெரிதாக சொல்கிறாய்...''

அவனை அமைதிப்படுத்தினான் கோபு.

நண்பர்கள் தொடர்ந்து கோபுவை துாண்டிவிட்டனர்.

கடுப்பால் கோபுவின் மனதில் பொறாமை சூழ்ந்தது.

ராமுவைக் கண்டாலே கோபுவிற்கு பிடிக்காமல் போயிற்று.

எப்படியும் ராமுவை பின்னடைய வைக்க வேண்டும் என சிந்திக்க துவங்கி விட்டான் கோபு.

முன்னேற்ற சிந்தனையை மறந்து, ராமுவை தோற்கடிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டான். சரியான நேரத்துக்காக காத்திருந்தான்.

இருவரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

அன்று -

விளையாட்டுப் போட்டி அறிவிப்பு சுற்றறிக்கை வந்தது.

'தகுதி போட்டியில் பங்கேற்க மறுநாள் காலை, 6:00 மணிக்கு விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும்' என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ராமுவை பழி வாங்க இது தான் சந்தர்ப்பம் என திட்டமிட்டான் கோபு.

மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு ஒலிக்க வேண்டிய அலாரத்தை, காலை 6:30 மணியாக கடிகாரத்தில் மாற்றியமைத்தான்.

பின், எதுவும் தெரியாதது போல் படுத்து கொண்டான் கோபு.

அலாரம் ஒலிக்கும் நேரத்தை மாற்றியதால் ராமுவால் சரியான நேரத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என எண்ணியிருந்தான் கோபு.

அதிகாலை, 5:00 மணி -

வழக்கம் போல் எழுந்து தயாராகி விட்டான் ராமு.

இதைக் கண்டதும் கோபுவுக்கு எரிச்சல் ஏற்பட்டது.

''அலாரம் ஒலிக்காமல் எப்படி எழுந்தாய்... நான் தான் மாற்றி வைத்திருந்தேனே...''

உளறியபடி உண்மையை கொட்டிவிட்டான் கோபு.

''இன்று விளையாட்டு போட்டிக்கு தகுதித் தேர்வு நடக்கிறதே! அலாரத்தில் ஏதோ கோளாறு என்றல்லவா நினைத்தேன்; நீ தான் இப்படி செய்தாயா...''

அமைதியாக கேட்டான் ராமு.

வெட்கத்துடன், ''நீ போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்ற பொறாமையில் நேரத்தை மாற்றி வைத்தேன்; மன்னித்து விடு...''

தழுதழுத்தான் கோபு.

''போட்டி இருக்கலாம்; அது பொறாமையாக மாறக் கூடாது. நீயும் முயற்சி செய். நீ வென்றால் நான் அதிகம் மகிழ்வேன்...''

''தவறை உணர்ந்தேன். இழந்த புத்தியை திரும்ப பெற்றேன்...''

''சரி, சீக்கிரம் கிளம்பு. போட்டிக்கு நேரமாகி விட்டது...''

ராமுவுடன் புறப்பட்டான் கோபு. அவன் மனதில் பதற்றம் தணிந்து அமைதி எழுந்தது.

சுட்டீஸ்... யாருடனும் போட்டி போடலாம்; ஆனால் பொறாமைப்படக் கூடாது!

- எஸ்.சுரேஷ்பாபு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us