Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குரு பக்தி!

குரு பக்தி!

குரு பக்தி!

குரு பக்தி!

PUBLISHED ON : ஜூலை 05, 2025


Google News
Latest Tamil News
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலை பள்ளியில் தொழிற்கல்வி பிரிவு வணிகவியல் ஆசிரியராக, 1960ல் பணியாற்றிய போது நடந்த சம்பவம்...

பள்ளி கல்வியில் புதிய பாடத்திட்டப்படி, வணிகக்கணக்கு மற்றும் கம்பெனி செயல்பாடுகள் பற்றிய பாடத்தை ஆங்கிலமொழி வழியில் கற்பிக்க வேண்டியிருந்தது. இதை புரிந்து கொள்ள பெரும் சிரமப்பட்டனர் மாணவர்கள். பலரும் பின் தங்கிவிட்டனர். படிக்க இயலாமல் தவித்த முத்து என்ற மாணவனை கண்டபடி திட்டுவேன். கடும் தண்டனை தரும் நிலையும் ஏற்பட்டது.

இந்த சூழலிலும் அவனுக்கு என் மீதிருந்த பற்று சிறிதும் குறையவில்லை என்பதை ஒரு சம்பவம் உணர்த்தியது. அன்று ஆசிரியர்களில் சிலர் திடீரென விடுப்பில் சென்றனர். அவர்கள் பாடம் நடத்த வேண்டிய வகுப்புக்கு, மாற்று ஆசிரியராக நான் செல்ல வேண்டியிருந்தது. பலமணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தியதால் களைப்படைந்தேன்.

மாலையில் கடைசி வகுப்பாக தொழிற்கல்வி பிரிவுக்கு பாடம் நடத்த சென்றேன். உடலும் உள்ளமும் ஒத்துழைக்காததால் மாணவர்களை, அமைதியாக அமர்ந்து படிக்க சொல்லி, ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போது, புத்தகத்தை துாக்கியபடி சந்தேகம் கேட்கும் பாவனையில் அதிவேகமாக என்னருகே வந்த மாணவன் முத்து, 'ஐயா... கல்வி அதிகாரிகள் நம் வகுப்பை ஆய்வு செய்ய வருவது போல் தெரிகிறது...' என எச்சரித்து நகர்ந்தான்.

உடனே, சமாளித்தபடி எழுந்து பாடம் நடத்தி சமாளித்தேன். நேரில் கவனித்து ஆய்வை முடித்தனர் கல்வி அதிகாரிகள். ஒருவாறாக பிரச்னை முடிந்தது.

என் வயது 88; பள்ளி ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தேன். பின், தமிழக அரசு கணக்கு அலுவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வகுப்பில் கடுமையாக நடந்து கொண்ட போதும் சிறிதும் மனங்கோணாமல் இக்கட்டான நிலையில் எச்சரித்து உதவிய மாணவன் முத்துவின் குருபக்தியை மனம் மறக்க மறுக்கிறது.

- ம.ரெங்கராஜன், மதுரை.

தொடர்புக்கு : 94894 83132






      Our Apps Available On




      Dinamalar

      Follow us