Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (24)

பனி விழும் திகில் வனம்! (24)

பனி விழும் திகில் வனம்! (24)

பனி விழும் திகில் வனம்! (24)

PUBLISHED ON : ஜூலை 05, 2025


Google News
Latest Tamil News
முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்காவின் தந்தை துருவ். இமயமலையில் ஏறியபோது விபத்தில் இறந்ததாக அரசு கூறியதை ஏற்காமல் லக்பா என்ற பெண் துணையுடன் தந்தையை மீட்க சென்ற போது, தவறி பனிக்குகையில் விழுந்தாள் மிஷ்கா. அங்கு பனி மனுஷ சிறுமி சூச்சு துணையுடன் தந்தையை தேடி பனிச்சிறுத்தையில் பயணம் செய்து ஒரு வினோத குகையை அடைந்தாள். இனி -

பிரமாண்டமான குகை அது.

வெளிச்சம் எங்கிருந்தோ அதன் உள்ளே பாய்ந்து, மங்கலான காட்சியமைப்பை பரிசளித்தது.

ஆறடி நீளமுள்ள பாறை படுக்கைகள் ஆயிரக்கணக்கில் அதனுள் இருந்தன.

உள்ளே கருவாட்டு வாசனை சுழன்றடித்தது.

ஒவ்வொரு பாறையிலும், ஒரு உருவம் படுத்திருந்தது.

படுத்திருந்த உருவத்துக்கு உயிர் இல்லை.

இறந்த போது அணிந்திருந்த ஆடைகளுடன் உருவங்கள் கிடந்தன.

''இதெல்லாம் என்ன சூச்சு...''

ஒன்றும் புலப்படாமல் கேட்டாள் மிஷ்கா.

'புரியலியா... கடந்த, 200 ஆண்டுகளில் மலையேறி செத்தவங்க உடல்கள் தான் இவை. பனியில் எங்கே மனிதன் செத்துக் கிடந்தாலும், துாக்கி வந்து இங்கே கிடத்துவோம். நாங்க சாப்பிட்டது போக மீதி...' என்றது சூச்சூ.

''மைனஸ் 20 டிகிரி சென்டி கிரேட் குளிரில், மனித உடல்கள் கெடாது. புத்தம் புதிதாய் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன இல்லையா...''

'ஏழு நாட்களுக்கு முன் கூட, மூன்று உடல்களை எடுத்து வந்து, இங்கே பாதுகாக்கிறோம் மிஷ்கா. இவற்றில், உன் தந்தையின் உடல் இருக்கிறதா என தேடிப் பார்...'

''நோ...''

கத்தியபடி அழுதாள் மிஷ்கா.

'அழுது பிரயோஜனமில்லை. உன் தந்தை உடல் இருந்தால் தேடும் உன் படலம் முடிந்து விடும். அந்த உடலை அடிவார முகாமில் சேர்த்து விடுவோம். உன் தந்தையின் உடலுடன், நீ தமிழகம் திரும்பலாம்...'

''இந்த சடலங்களில், என் தந்தை காணக்கிடைக்க மாட்டார்...''

'நல்லது... அப்படியே ஆகட்டும்... ஆனால் ஒவ்வொரு உடலாய் பார்...'

''நீயும் என்னுடன் வா...''

அனைத்து உடல்களும் துாங்குவது போல, புத்தம் புதிதாய் இருந்தன. தட்டினால், கிள்ளினால், தொட்டால் எழுந்து அமர்ந்து விடும் போல...

சிலவற்றை பார்த்த போது, துருவ்வின் முகம் போல, பிரமை கூட்டியது. கண்களை கசக்கி பார்த்தால் அது விலகியது.

''இந்த உடல்களில் எதாவது ஒன்றாய் படுத்திருக்கிறீர்களா அப்பா... உயிரோடு இருப்பவரை இறந்து விட்டார் என நினைத்து, உங்களை இங்கே பாதுகாக்கின்றனரா... பசிக்க பசிக்க படுத்திருக்கிறீர்களா... மகள் வந்து எழுப்புவாள் என்ற நம்பிக்கையில் படுத்து இருக்கிறீர்களா... என் அப்பாவை காட்டுங்க...''

புலம்பியபடி கதறி அழுதாள் மிஷ்கா.

'உன் கதறல் என் இதயத்தை கசக்கி பிழிகிறது மிஷ்கா...'

கடைசியாக கைப்பற்றப்பட்ட மூவரின் உடல்களை சுற்றி வந்தாள் மிஷ்கா.

'யாரென்று தெரிகிறதா மிஷ்கா...'

கேட்டது சூச்சூ.

''நன்றாக தெரிகிறது. என் தந்தையுடன் மலையேறிவர்கள்...''

'ஓவ்...'

''இந்த உடல்களை கைப்பற்றும் போது நீ இருந்தாயா சூச்சூ...''

'இருந்தேன்...'

''நாலாவதாக இருந்த என் தந்தை எங்கே...''

'நாங்கள் யாரும் உன் தந்தையை பார்க்கவில்லை...'

''பின்னே எங்கே போனார்...''

'எந்த இடுக்கிலாவது சிக்கி பனி சமாதி ஆகியிருக்கலாம்...'

''இந்த மூவரின் உடல்களை கைப்பற்றிய இடத்துக்கு, என்னை அழைத்து போக முடியுமா...''

கேட்டாள் மிஷ்கா.

'அழைத்துப் போனால்...'

''பனியை தோண்டி, என் தந்தையை தேடுவேன்...''

'பனிக்குள் புதைந்தவர் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்க முடியும்...'

''வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த, 59 வயது மனிதர் 25.5 மணி நேரம் பனிக்குள் புதைந்திருந்து, 1960ல் மீட்கப்பட்டார். ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த பெண், 43.45 மணி நேரம் புதைந்திருந்து, 1972ல் மீட்கப்பட்டார்...

''விமானப்படையில் ஒருவர், 16 நாட்கள் பனியில் புதைந்திருந்து மீட்கப்பட்டார். காருடன் பனிக்குள் புதைபட்ட ஸ்வீடிஷ் மனிதர் இரண்டு மாதங்களுக்கு பின் மீட்கப்பட்டார்... அப்படி என்றால் என் தந்தையும் உயிருடன் மீட்கப்பட இன்னும் வாய்ப்பிருக்கு தானே...''

'ஆமாம்...'

''வா... என் தந்தையுடன் மலையேறியோர் உடல்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு போவோம்...''

இருவரும் பனிச்சிறுத்தையின் மீதேறினர். அது அதிவேகமாக பாய்ந்தது.

ஒரு இடத்தை சுட்டினாள் சூச்சூ.

பனியை வெட்டி, சக்... சக்... என்று தோண்டி தள்ளி கொட்டினாள் மிஷ்கா.

பனித்தரையில் காதை ஒட்டி வைத்து கேட்டாள்.

''அப்பா... ஒரே ஒரு வார்த்தை முணு முணுங்க... உங்க குரலை கேட்டுட்டா, ஒரு வருஷமானாலும் இந்த பனியை தோண்டுவேன்...''

அப்பாவுக்கும், தனக்கும் இடையிலான அன்பான சம்பவங்களை உணர்ச்சி பொங்க விவரித்தபடியே தோண்டினாள் மிஷ்கா.

''ஒரு தீபாவளிக்கு, உனக்கு, உடம்பு பூராவும், எண்ணெய் தேய்ச்சு குளிக்க வெச்சேனே... மறந்துட்டியா... ஓரிரவு முழுக்க என் குட்டி மடில உன் தலைய வெச்சு துாங்க வெச்சேனே ஞாபகமிருக்கா... ஒரு குல்கந்து ரோஸ்மில்க்கில் எச்சில் துப்பி கொடுத்தேனே... விழுந்து விழுந்து குடிச்சீயே... நினைவிருக்கா. உனக்கு ஒருநாள் பொம்பளை வேஷம் போட்டு அம்மாவா நடிக்கச் சொன்னேனே... கொட்னியே ஞாபகமிருக்கா...''

பயங்கரமாக கத்தினாள் மிஷ்கா.

திடீரென்று தோண்டலில் ஒரு கை வந்து விரைத்து நின்றது.

அவ்வளவு தான் -

பிசாசு பிடித்தது போல கையை சுற்றி பெரிய குழி தோண்டினாள்.

மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், முழு உடலையும் இழுத்து வெளியே போட்டாள் மிஷ்கா.

அது...



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா






      Our Apps Available On




      Dinamalar

      Follow us