Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (21)

பனி விழும் திகில் வனம்! (21)

பனி விழும் திகில் வனம்! (21)

பனி விழும் திகில் வனம்! (21)

PUBLISHED ON : ஜூன் 14, 2025


Google News
Latest Tamil News
முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்காவின் தந்தை துருவ் இமயமலையில் ஏறிய போது விபத்தில் இறந்ததாக தகவல் வந்தது. அதை ஏற்க மறுத்து, தந்தையை உயிருடன் மீட்க சென்றாள். எதிர்ப்புகளை மீறி லக்பா என்ற பெண்ணும் துணைக்கு வந்தாள். அவளுடன் தந்தையை தேடி சென்ற போது பனிக்குகையில் விழுந்தாள் மிஷ்கா. இனி -

மிஷ்காவின் அலறல் பனிக்குகைக்குள் சடு சடு ஆடியது.

பார்வையை மெது மெதுவாக உயர்த்தினாள்.

ரோமம் அடர்ந்த கால்கள்; பருத்த தொடைகள்; தோலாடை கொண்ட அகன்ற இடுப்பு; கழுத்தில், ஏராளமான பாசிமணி மாலைகள்; வட்ட வட்ட கண்கள்; சுரைக்காய் மூக்கு; இடப்பக்கம் எட்டு ட்ராகுலர் பற்கள்; வலப்பக்கம் எட்டு ட்ராகுலர் பற்கள் சிறு கொம்புகள் போல் இருந்தன.

இது போல் தோன்றிய 20 அடி உயர ராட்சச உருவம் நின்றிருந்தது.

அதன் வலது கையில், கதை போன்று கனத்த ஆயுதம் இருந்தது.

ராட்சச உருவத்தின் அருகில், இரண்டடி உயர ராட்சச குட்டி ஒன்று நின்றிருந்தது.

குட்டி உருவம் ராட்சச வடிவத்தை விடவும் அழகாக இருந்தது.

அந்த ராட்சச உருவம், கனத்த சுதை போன்ற ஆயுதத்தால் மிஷ்காவின் தலையை தாக்கும் வண்ணம் ஓங்கியது.

'உச்சோ... உச்சோ மாய்...'

'வேண்டாம்... வேண்டவே வேண்டாம்... பாட்டி...' என பொருள் தரும் வகையில் சத்தமிட்டது, ராட்சச குட்டி.

'ஏன் தடுக்கிறே... அடிச்சுக்கொன்னா ஒரு வாரம் வச்சு தின்னலாமில்ல...'

'அவளும், என்னைப் போல சிறுமி தான். அவ மனுஷ குட்டி. நான் பனி மனுஷ குட்டி...'

'நம்மை, 'ஒலப்' என அழைப்பர்...'

'மாய்... நான் இந்த சிறுமியுடன் பேச விரும்புகிறேன்...'

'அவ்வளவு தானே... இதோ பேசி விடலாம்...'

தன் இடது கையை தன் நெற்றியில் தொட்டபடி, வலது கையை மிஷ்காவின் நெற்றியில் வைத்தது ராட்சச உருவம்.

அடுத்த நொடி மிஷ்காவின் மூளைக்குள் பனிப்பூரான் ஓடியது.

'உன் பெயர் என்ன...'

கேட்டது ராட்சச உருவம்.

'அட இந்த பனி மனுஷி பேசுவது புரிகிறதே' என எண்ணியபடி, ''என் பெயர் மிஷ்கா..'' என்றாள்.

'எங்கிருந்து வருகிறாய்...'

''இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழகத்திலிருந்து...''

'எத்தனை பேர் மலையேறினீர்...'

''என்னுடன் சேர்ந்து அறுவர்...''

'மீதி ஐவர் எங்கே...'

''அவர்களை தனியே விட்டு கிடுகிடு பனிப்பள்ளத்தில் விழுந்து விட்டேன்...''

'எதற்கு எங்கள் நாட்டிற்குள் வந்தாய்...'

''உங்க நாடா...''

'இல்லையா பின்னே... இமயமலை எங்க நாடு. இமயமலையின் குளிர் நாங்கள் உயிர் வாழ தேவையான ஒன்று...'

''நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்... காணாமல் போன என் தந்தையை மீட்க வந்தேன்..''

'அவங்கவங்க இடத்துல இருந்து பொழைப்பை கவனிக்காம, எதுக்கு இமயமலையில் ஏறும் வெட்டி வேலை செய்றீங்க...'

மவுனித்தாள் மிஷ்கா.

'உனக்கு என்ன வயசாகுது...'

''பத்து...''

'அதிகபட்சம் எழுபது ஆண்டுகள் உயிர் வாழுவீர் இல்லையா... நாங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வோம்...'

''நீங்க ஆணா, பெண்ணா...''

'நான் இந்த பனிக்குட்டியின் பாட்டி. எனக்கு, 920 வயதாகிறது...'

''இந்த பனிக்குட்டி பெண் தானே...''

'ஆமாம்... இவளுக்கு, 112 வயது. உங்க ஆயுளை பத்தால், பெருக்கினால் எங்கள் ஆயுட்காலம் கணக்கிடலாம்...'

''இமயமலையில் மொத்தம் எத்தனை பனிமனிதர்கள் வசிக்கிறீர்...''

'நாங்க, 40 பேர் இருப்போம்...'

''நீங்கள் இருப்பது எங்களுக்கு ஏன் தெரியவில்லை...''

'உங்கள் ரோடார் கண்களுக்கு தெரிய மாட்டோம். பனி வீடுகளில் குடும்பமாக வசிக்கிறோம்...'

''உங்கள் உணவு என்ன...''

'மாமிசம் தான். மனித மாமிசம் உப்பட எது கிடைத்தாலும் தின்போம்...'

''சமைத்து சாப்பிடுவீர்களா, பச்சையா சாப்பிடுவீர்களா...''

'எங்கள் உள்ளங்கைகள் அடுப்பு போல... மாமிசத்தை விரல்களுக்குள் மூடி திறந்தால் வெந்து விடும். சாப்பிடுவோம்...'

''மனிதர்களை உங்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா...''

'அறவே பிடிக்காது. எங்கள் வாழ்விடத்தில் அத்துமீறுவோரை எப்படி பிடிக்கும். மலையேறுவது, குடிப்பது, புகைப்பது, சுயமி எடுத்துக்கொள்வது என அற்பத்தனம் மிக்கவர் மனிதர்கள்...'

''உங்களுக்குள் விஞ்ஞான தொழில் நுட்ப வசதிகள் உண்டா...''

'எங்கள் உடலில், இயற்கையாகவே, அலைபேசி இணைப்பு வசதி உள்ளது. ஒருவரை மனதில் நினைத்தால், அவருடன் தொடர்பு ஏற்படும். உடனே பேசலாம்...'

''உங்களிடம் பல விசேஷ சக்திகள் இருப்பதாக தெரிகிறதே...''

'இப்போதே எல்லாவற்றையும் அறிய முயற்சிக்காதே. என் பேத்திக்கு உன்னை பிடித்ததால், நீ உயிர் தப்பினாய்...'

''உங்கள் பேத்தி என்ன படிக்கிறாள்...''

'பள்ளிபடிப்பு கிடையாது. பனி உலக வயது 50ஐ கடக்கும் முன், மூத்தோர் இளையோருக்கு உலக அறிவை தானம் செய்து விடுவர்...'

''உங்கள் பனி உலகத்தில் சூரியன், நிலா, இரவு, பகல் உண்டா...''

'அவை இருப்பது எங்களுக்கு தெரியும். அவற்றை பொருட்படுத்துவதில்லை...'

''எல்லாம் சரி... உங்க பேத்தியின் பெயர் என்ன...''

பாட்டி பனி மனுஷி வித்தியாசமாக சிரித்தாள்.

'பேரை தெரிஞ்சு என்ன செய்யப் போற...'

''அன்பா, ஆசையா கூப்பிடத்தான்...''

'அவள் பெயர் சூச்சூ...'

''என் அன்பான சூச்சூ... என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி...''

அவளை கட்டியணைத்தாள் மிஷ்கா.

சூச்சூ சிரித்தாள்.

அவள் கடவாயோரம் ரத்தம் வழிந்தது.



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா






      Our Apps Available On




      Dinamalar

      Follow us