Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (11)

பனி விழும் திகில் வனம்! (11)

பனி விழும் திகில் வனம்! (11)

பனி விழும் திகில் வனம்! (11)

PUBLISHED ON : ஏப் 05, 2025


Google News
Latest Tamil News
முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. இமயமலை சிகரம் ஏறப்போகும் தந்தையை பிரிய மனம் இன்றி கண்ணீர் வடித்தாள். மகளை பிரிந்து இமயமலை அடிவாரப்பகுதிக்கு சென்றான் துருவ். இந்த முறை மலை ஏறுவது ஆபத்து என்ற எச்சரிக்கையை ஏற்காமல் செயல்பட்டான். இனி -

மின் தடுப்பான் இணைக்கப்பட்ட ஹெல்மெட் அணிந்திருந்தான் துருவ்.

உள்ளடுக்கு, நடு அடுக்கு, வெளியடுக்கு என, மூன்று வாட்டர் புரூப் மேற்சட்டையுடன் வாட்டர் புரூப் காற்சட்டையும் உடுத்தியிருந்தான்.

உள்சட்டை மெரினோ கம்பளியால் ஆனது.

நடுசட்டை உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்கும் பாலியஸ்டர் துணியால் ஆனது.

வெளிசட்டை, கோர்டெக்ஸ் வாட்டர் புரூப் வகை.

கால்களில் விசேஷ உறையும், பூட்சும் அணிந்திருந்தான்.

கைகளில் வாட்டர் புரூப் கையுறைகள், மலை ரேடியோ, செயற்கைகோள் தொலைபேசி, இரவில் துாங்குவதற்கு ஆறடி நீளமுள்ள ஜிப்புடன் கூடி பை, சூரிய வெளிச்சம் மற்றும் பூச்சி கடியிலிருந்து தப்பிக்க களிம்புகள் பத்திரப்படுத்தியிருந்தான்.

நிகான் கேமரா மற்றும் வீடியோ கேமரா, விசேஷ பாலிஸ்டரில் செய்யப்பட்ட பனி தடுப்பும், இரு பாதுகாக்கப்பட்ட கதவுகளுடன் கூடிய கூடாரம், டார்ச் விளக்கு, மாமிசம், உருளைக்கிழங்கு, காய்கறிகள் கூடிய சூப் தயாரிக்க போதுமான அளவு பொதி வைத்திருந்தான்.

அரிசியும், பருப்பும் கூடிய தால்பாத் சாமான்கள், கொறிக்க பருப்புகள், பழங்கள், பாலாடைக்கட்டி, உலர்ந்த மாமிசம், சாக்லெட், தேனில் ஊற வைத்த ஓட்ஸ் வகை பொதிகள், தண்ணீர், அடுப்பு வைத்திருந்தான்.

மலையேறுவோருக்கு, அன்றாடம் 10 ஆயிரம் கலோரி வரை சக்தி தரும் உணவு தேவை.

சமவெளியில் வசிப்போரை விட, ஐந்து மடங்கு சக்தி மலையேறிகளுக்கு தேவை.

சுவாசத்தை எளிதாக்கக் கூடிய உபகரணங்கள், பனிக்கோடலி, முதலுதவிப் பெட்டி, பாறை சுத்தியல், தலை விளக்கு, குறும் கத்தி, திசைகாட்டி, கொக்கிகள், 6.6 நைலான் கயிறுகள், மடிக்க கூடிய வழுக்காத அடிப்பகுதி உடைய அலுமினிய ஏணிகள், இரு ட்ரக்கிங் குச்சிகள், அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் விசேஷ கண்ணாடி மிக முக்கியம்.

வாட்டர் புரூப் டப்பல் வகை பை, கைகளை கதகதப்பாக்க கூடிய திரவங்கள், சிக்னல் துப்பாக்கி மற்றும் மடிகணினி, ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருந்தது.

துருவ்வுடன் ஐந்து சகாக்கள். அதில் இருவர் சுமைகளை எடுத்து செல்லும் ெஷர்பாக்கள்; ஒருவர் அமெரிக்கர்; மற்றொருவர் நார்வேயை சேர்ந்தவர். ஐந்தாமவர் மருத்துவர்.

பூஜை ஆரம்பமானது.

அதற்கான மந்திரங்களை உச்சரித்தார் லாமா.

ஆங்காங்கே பிரார்த்தனை கொடிகள் பறந்தன.

குழுமியிருந்த திபெத்தியரும், நேப்பாளியரும், 'சோமோலுங்மா... இந்த உலத்தின் தாயே! மலையேறும் வீரர்களின் முயற்சியை வெற்றிகரமாக்கு... புனித சாகர்மாதா... எங்கள் அனைவரையும் ரட்சி...' என பிரார்த்தனை செய்தனர்.

துருவ்வும், அவனது சகாக்களும் முகத்தில் மாவை பூசியிருந்தனர்.

மக்கள் அரிசியையும், மாவையும் அள்ளி வானத்தில் துாவினர்.

தியானம், தவம், மந்திர உச்சாடனம், ஜெபம்...

அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

மலையேறும் வீரர்கள் இரவுக்காக காத்திருந்தனர்.

வானிலை அறிக்கை வந்து சேர்ந்தது.

'மலையேறுவதை சில நாட்கள் ஒத்திப் போடவும். ஜெட் வேகத்தில் பனிக்காற்று மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் வீசும்...'

உதடு பிதுக்கிய துருவ், 'இன்று கிளம்புவதை இயற்கையின் சீற்றத்தாலும் தடுக்க முடியாது' என எண்ணிக்கொண்டான்.

வெளியே செய்தி சேகரிக்கும் குழு குழுமியிருந்தது.

வீடியோ கேமராக்களும், ஸ்டில் கேமராக்களும் போன்சாய் மின்னலை பாய்ச்சின.

''துருவ்... இரவு வணக்கம்...''

''இரவு வணக்கம்...''

''போதிய பயிற்சி இல்லாமல் மலையேறுகிறீர்கள் என உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே...''

''ஒவ்வொரு நாளும், 20 கி.மீ., ஓடியிருக்கிறேன். அத்துடன், 15 கிலோ எடையை சுமந்து பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு உடல் தகுதியை விட, உள்ள உறுதி சார்ந்த தகுதி அதிகம்...''

''விமர்சிப்போருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்...''

''ஒவ்வொரு எதிர்மறை விமர்சனமும், என்னை இமயமலை ஏறுதலில் ஒரு அடி உயர்த்தும். தொடர்ந்து இழித்து பேசுங்கள். குட் லக் டு யூ...''

''உங்களை நேசிப்போருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்...''

''உலகில் என்னை அதிகம் நேசிப்பது என் மகள் மிஷ்கா தான். சில நாட்கள் காத்திரு தேவதையே... உலக சாதனை முடித்து, உன்னிடம் தான் ஓடோடி வருவேன்...''

பறக்கும் முத்தத்தை கேமராவை பார்த்து அனுப்பினான் துருவ்.

'நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்... ஜெயித்து வாருங்கள். இதய பூர்வமான வாழ்த்துகள்...'

''நன்றி...''

'இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்...'

''அவருக்கும் நன்றி...''

எவரெஸ்ட் ஏற ஆரம்பித்தான் துருவ். குழுவினர் தொடர்ந்தனர்.

கூடியிருந்தோர் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

'ஜெய் சோமோலுங்மா மாதா...'

எவரெஸ்ட் இரு கை விரல்களில் சிறு சதுரம் செய்து, இடது கண்ணில் வைத்து, துருவை பார்த்து, 'வாரே எமனின் பலகாரங்களா' என கிசு கிசுத்தது.



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா






      Our Apps Available On




      Dinamalar

      Follow us