Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (309)

இளஸ் மனஸ்! (309)

இளஸ் மனஸ்! (309)

இளஸ் மனஸ்! (309)

PUBLISHED ON : ஜூலை 05, 2025


Google News
Latest Tamil News
அன்புள்ள அம்மா...

என் வயது,12; தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன். கொஞ்சம் குண்டாக இருப்பேன். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுவேன். என் ஒரே பிரச்னை, வகுப்பறையிலும், வீட்டிலும், பொது இடங்களிலும் காற்று பிரிப்பதே. காற்று பிரிக்கும் போது ஏற்படும் துர்நாற்றத்திலிருந்து, பக்கத்திலிருப்பவர் தப்பிக்க, சற்று துாரம் விலகி ஓடியாக வேண்டும்.

காற்று பிரித்தல் ஒரு வியாதிதானே... இதிலிருந்து குணமடைவது எப்படி... சரியாக வழிகாட்டி உதவுங்கள்.

இப்படிக்கு,-

எம்.வர்ணீஸ்வரன்.



அன்பு செல்லத்துக்கு...

அடிவயிற்றிலிருந்து வாயுவை மலவாய் வழியாக விரைவாக வெளியேற்றுதலே காற்று பிரிதல் ஆகும். இதை ஆங்கிலத்தில், 'பர்ட்டிங்' அல்லது 'ப்ளாட்டுலென்ஸ்' என அழைப்பர். தமிழில் வேறு வார்த்தைகளில் அபானவாயு, வேற்றுக்காற்று எனவும் கூறுவர்.

காற்று பிரிதலில் பல வாயுகள் இருக்கும். முக்கியமாக நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்றவை கூடுதலாக இருக்கும். துர்நாற்றம் வீசுவதற்கு, ஹைட்ரஜன் சல்பைடு தான் காரணம்.

நொடிக்கு, 10 அடி துாரத்தில் காற்று பிரிதல் பயணிக்கும். அதாவது மணிக்கு, 11 கி.மீ., வேகத்தில் இருக்கும். ஆண்களை விட, பெண்களே அதிகம் காற்று பிரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரியும் காற்று தீப்பற்றும் பண்பு உடையது. ஆணும், பெண்ணும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 14 முறை காற்று பிரிப்பதாக ஆய்வுகள் வழி தெரிய வந்துள்ளது.

ஒருவருக்கு, ஒருநாளைக்கு, 25 தடவைக்கு மேல் காற்று பிரிதல் இருந்தால், 'ப்ளோடோலாஜிஸ்ட்' என்ற மலக்குடல் சிறப்பு மருத்துவ நிபுணரை அணுகி தக்க ஆலோசனை பெறுவது நலம்.

காற்று பிரிதலை செயற்கையாக தடுத்தால் வயிறு வெடித்து விடும்.

காற்று பிரிதலுக்கான அடிப்படை காரணங்களை பார்ப்போம்...

* மலச்சிக்கல் இந்த பிரச்னைக்கு அடிப்படை

* உண்ணும் போது அதிக காற்றை விழுங்குதல்

* உணவை சரிவர மெல்லாமல் விழுங்குதல்

* செரிக்க தகாத கரடுமுரடான உணவை உண்ணுதல்

* எரிச்சல் கொண்ட குடல்நோய் அறிகுறி

* சில மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவு

* மலம் கழிப்பதை கட்டுபடுத்த முடியாத பலவீனம்

* செலியாக் என்ற தன்னுடல் தாக்க கோளாறு.

சில உணவு வகைகளும் காற்று பிரிதலை அதிகப்படுத்துகின்றன.

அவை...

* இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம்

* பால் மற்றும் பழச்சாறு

* பாலாடைக்கட்டி

* தண்ணீர் விட்டான் கிழங்கு, வெள்ளரிக்காய், தவிடு, கோதுமை, முட்டைக்கோஸ், பச்சைபூக்கோஸ், அவரை போன்றவை.

காற்று பிரிதலை குணப்படுத்த சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

* உணவை சிறிய அளவில் மெதுவாக மென்று சாப்பிடலாம்

* 'பபிள்கம்' மெல்வதை தவிர்க்க வேண்டும்

* குளிர்பானங்களை குடிக்காமல் இருக்கலாம்

* அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்

* ஒவ்வாமை உள்ள பொருட்களை உண்ணாமல் இருக்கலாம்

* சாப்பாட்டுக்கு பின் சிறு நடைபயிற்சி மேற்கொள்ளலாம்

* தயிர் போன்ற ப்ரோபயாட்டிக்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்

* உணவுடன் 'என்சைம்' குறை நிரப்பு எடுத்துக் கொள்ளலாம்

* பெப்பர் மின்ட் டீ குடிக்கலாம்

* வாழைப்பழம், எலுமிச்சையை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

புளிப்புடன் சர்க்கரை, ஆல்கஹாலை மூலப்பொருளாக கொண்ட வேதிபொருள் இணைந்த கார்போஹைட்ரேட் போன்றவற்றை உணவில் குறைக்கலாம். அம்மாவுடன் ஒரு இரைப்பை குடல் சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறு. துரித உணவை துறந்து, சுறுசுறுப்பான தன்னம்பிக்கை மிக்க சிறுவனாய் இரு. அதுவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us