Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (308)

இளஸ் மனஸ்! (308)

இளஸ் மனஸ்! (308)

இளஸ் மனஸ்! (308)

PUBLISHED ON : ஜூன் 28, 2025


Google News
Latest Tamil News
அன்புள்ள ஆன்ட்டி...

என் வயது 15; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு சரித்திரக் கதைகள் வாசிக்க மிகவும் பிடிக்கும். குறிப்பாக, பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் படைத்த நாவல்களை மிகவும் விரும்பி வாசிப்பேன்.

ஒரு நாவலில், 'கடற்கரையோரம் ஒதுங்கிய கப்பலில் நங்கூரத்தை பாய்ச்சினர்' என்பதாக ஒரு வாக்கியம் வருகிறது. திரும்ப திரும்ப படித்து பார்த்தேன்.

அதில் நங்கூரம் என்ற சொல் எனக்கு புரியவேயில்லை. அந்த சொல்லின் பொருள் என்ன... அது, இப்போதும் பயன்படுத்தப்படுகிறதா... நங்கூரம் எப்படி இருக்கும்... அது பற்றிய தகவல்களை கூறி என்னை தெளிவு பெற செய்யுங்கள்.

இப்படிக்கு,

டி.பாகீரதி குமரேசன்.



அன்பு செல்லத்துக்கு...

தமிழில் நங்கூரம் என்ற சொல்லை ஆங்கிலத்தில், 'ஆங்கர்' என்பர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளரை, 'டிவி' ஆங்கர் என்றே அழைப்பர்.

நங்கூரம் என்பதை ஆதாரம், நிலைத்துணை, கட்டுப்பிணை என்ற மாற்று சொற்களாலும் அழைக்கலாம்.

கப்பலை, கடலில் அங்கும் இங்கும் அலையவிடாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்க உதவும் கருவியே நங்கூரம்.

இது வார்ப்பிரும்பு, துத்தநாகம் பூசிய இரும்பு, கலப்பு உலோக இரும்பு, பைபர் மற்றும் பாலிமர்களால் தயாரிக்கப்படுகிறது.

அலுமினியத்தால் ஆன நங்கூரம், பந்தய படகுகளில் பயன்படுத்தப்படுகிறது.

நங்கூரத்தில் ஐந்து வகைகள் உண்டு. அவை பற்றி பார்ப்போம்...

* மடக்கும் நங்கூரம்: இதன் எடை, 15 கிலோ வரை இருக்கும்.

* டெல்டா நங்கூரம்: இது, நான்கு கிலோ முதல் 100 வரை இருக்கும்.

* 'சி'டைப் நங்கூரம்: இதன் எடை 4-12 கிலோ வரை இருக்கும்.

* ஐந்து ப்ளூக் நங்கூரம்: இதன் எடை 10- ஆயிரத்து 100 கிலோ வரை இருக்கும்.

* காளான் நங்கூரம்: இதன் எடை பல ஆயிரம் கிலோ வரையில் இருக்கும்.

ஆஸ்திரேலிய கடற்படையில் உள்ள 'ஹெச்.எம்.ஏ.எஸ்.கேனிபரா' கப்பல் நங்கூரத்தின் எடை, 1,800 கிலோ.

அமெரிக்காவில் 'லைட்ஷிப் 1001' என்ற கப்பல் நங்கூரத்தின் எடை, 2,500 கிலோ.

உலகில் முதல் முதலில் புராதன கிரீஸ் மாலுமியர் தான் கி.மு., 592ல் நங்கூரத்தை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பு உள்ளது.

நங்கூரத்தை இணைக்கும் இரும்பு சங்கிலி அல்லது கயிற்று நீளத்தை, 'ஷேக்கில்' என்ற பெயரில் அளப்பர். அதாவது, 1 ஷேக்கில் என்பது 27.5 மீட்டர். நங்கூரத்தை இணைக்கும் இரும்புச்சங்கிலி, அதிக பட்சமாக 410 மீட்டர் வரை இருக்கும்.

ஒரு கப்பலில் இரண்டு நங்கூரங்கள் உண்டு.

நீர் மூழ்கி கப்பலிலும் நங்கூரம் உண்டு. அதை நங்கூரம் ஹெச்ஹெச்பி என அழைப்பர்.

நங்கூரத்தின் தோற்றம்...

* ஆங்கிலத்தில், 'டபிள்யூ' என்ற எழுத்து வடிவில் அகண்ட நிலையில் இருக்கும்

* நடுக்கோடு நீண்டு கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும்

* நங்கூரத்துக்கென தனிப்பட்ட வண்ணம் கிடையாது.

நங்கூரத்தை இறக்கும் போது, கப்பல் பணியாளர்கள் சிறப்பு பாடல் ஒன்றை பாடுவர்.

அந்த பாடல்...

'நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

நம்பினோர் காக்கும் இயேசுவே

பரிசுத்த தேவனே பரலோக ராஜனை

பாடல் பாடி கொண்டாடுவோம்...'

இவ்வாறு உற்சாகமாக பாடி நம்பிக்கையுடன் செயல்படுவர் கப்பல் ஊழியர்கள்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us