Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (296)

இளஸ் மனஸ்! (296)

இளஸ் மனஸ்! (296)

இளஸ் மனஸ்! (296)

PUBLISHED ON : ஏப் 05, 2025


Google News
Latest Tamil News
அன்புள்ள அம்மா...

தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர் கூட்டாக சேர்ந்து இதை எழுதுகிறோம்.

எங்கள் உடற்கல்வி ஆசிரியர், பல்வேறு வகையான பயிற்சிகள் தருவார். அதற்கு தகுந்த வகையில் உத்தரவுகள் பிறப்பிப்பார்.

உடலை முறையாக பராமரிக்கும் வகையில்...

'கூன் போடாதே...'

'நேராக நட...'

'வயிற்றை உள்ளடக்கு...

'காலை அகட்டாதே...

'இரு கைகளையும் உடம்போடு ஒட்டாதே...'

'தோரணையாக இருப்பது மிக மிக முக்கியம்...'

இவ்வாறு அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.

எங்கள் ஆசிரியர் கூற்றுப்படி, 'தோரணையாக இருப்பது' என்றால் என்ன...

எங்கள் இயல்பை மாற்ற ஆசிரியர் முயற்சிக்கிறாரா என்றும் தெரியவில்லை.

இது குறித்து தெளிவு ஏற்படுத்தி தேவையான விளக்கத்தை கொடுங்கள்.

- என்.பூவரசன் மற்றும் வகுப்பு தோழர் தோழியர்.

அன்பு செல்லங்களே...

உங்கள் ஆசிரியர் கூறும் தோரணையாக இருப்பது என்பதை, ஆங்கிலத்தில், 'பாடிபோஸ்ச்சர்' என்பர். தமிழில், தோரணை, நிலை, அங்க ஸ்திதி, தோற்றப்பாங்கு என்றும் கூறலாம். ஒருவர் உட்காருவது, நிற்பது, நடப்பது போன்றவை, 'பாங்கு தோற்ற அமைவு' எனப்படும்.

குறிப்பிட்ட ஸ்டைலில் தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகை நிலை நிறுத்தி வைப்பதே தோற்றப்பாங்கு.

ஒரு மனிதர் நிற்கும் போதோ, நடக்கும் போதோ, உடலை சமநிலையில் நிர்வகிக்க தோற்றப் பாங்கு உதவுகிறது.

உடலின் ஒரு பாகத்தை மற்ற பாகங்களின் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைப்பதும் தோற்றப்பாங்கு தான்!

உன் அப்பாவுக்கு பிடித்த பிரபல தமிழ் நடிகர் சிவாஜிகணேசன் நடப்பதை, 'டிவி'யில் பழைய படங்கள் திரையிடப்படும் போது பார்.

இப்போதைய நடிகர் ரஜினிகாந்த் நடப்பதையும் பார்.

அவர்களது அற்புத தோற்றப்பாங்கு, பெர்சனாலிட்டியை பல மடங்கு கூட்டுவதை உணரலாம்.

கூன் போட்டு நடப்பது, கால்களை அகட்டியபடி வாத்து போல் நடப்பது, இரு கைகளை உடம்போடு ஒட்டியபடி மிஷின் போல் நடப்பது போன்றவை நம் மீது வெறுப்பையே உருவாக்கும். அங்க அசைவு, உடல்மொழிகளை சிறப்பாக கையாண்டால், உடல் ஆரோக்கியம் நீளும். உடல் வலி வராது; காயங்கள் ஏற்படாது. நோய்குறிகள் அண்டாது.

இரு வகையான தோற்றப்பாங்குகள் உள்ளன. அவை...

* நகரும் தோற்றப்பாங்கு: நடப்பது, ஓடுவது, குனிவது

* நிலையான தோற்றப்பாங்கு: அமர்ந்திருப்பது, நின்றிருப்பது, துாங்குவது போன்றவை இதில் சேரும்.

தவறான தோற்றப்பாங்கு, கழுத்து, நடு முதுகு, கீழ்முதுகு பகுதிகளில் முதுகெலும்பை பாதிக்கும்.

உண்ணும் உணவு சரியாக செரிக்காது.

சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

நிலைதடுமாறி விழும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதியில் வலி அதிகரிக்கும்.

நடக்கும் போது...

* என்ன விதமாய் நடக்கிறோம் என, தன்னுணர்வாய் கவனித்து குறைகளை களையலாம்

* உடற்பயிற்சி, யோகா மூலம் தோற்றப்பாங்கை சீர்படுத்தலாம்.

அதே நேரம் உடல் எடையை சராசரியாக வைத்திருக்க முயற்சிக்கவும் வேண்டும்.

செருப்பில் ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும்.

உட்காரும் போது...

* சவுகரியான உயரத்தில் அமர்ந்து பணிகளை செய்யவும்

* உட்காரும் விதத்தை அடிக்கடி மாற்றவும்

* கால்களை குறுக்கே போட்டு உட்காருவதை தவிர்க்கவும்

* தோள்பட்டைகளை தளர்த்தியே வைத்திருக்க வேண்டும்

* முழங்கையை, 90 - 120 டிகிரி கோணத்தில் உடலுக்கு நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்.

இதனால் முதுகு, தொடை, இடுப்பு பகுதியில் சிரமங்கள் குறையும்.

நிற்கும் போது...

* நேராக நிற்க முயலவும்

* தோள்பட்டைகளை பின் தள்ளவும்

* வயிற்றை உள்ளிழுக்கவும்

* உடல் எடையை கால்களுக்கு கடத்தவும்

* தலையை சமநிலையில் வைக்கவும்

* கைகளை இயற்கையாய் தொங்க விடவும்.

பதின்ம வயதில் நிர்வகிக்கும் தோற்றப்பாங்கே ஆயுளுக்கும் தொடரும். இதை நன்றாக புரிந்து சிங்க நடை போட்டு, சிகரத்தில் ஏறுங்கள்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us