Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ரோஜர் வால்காட் ஸ்பெர்ரி!

ரோஜர் வால்காட் ஸ்பெர்ரி!

ரோஜர் வால்காட் ஸ்பெர்ரி!

ரோஜர் வால்காட் ஸ்பெர்ரி!

PUBLISHED ON : ஜூன் 14, 2025


Google News
Latest Tamil News
மூளை மற்றும் நரம்பியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் விஞ்ஞானி ரோஜர் வால்காட் ஸ்பெர்ரி. அமெரிக்காவில் ஆகஸ்ட் 20, 1913ல் பிறந்தார். மூளையின் செயல்பாட்டை ஆழமாக ஆராய்ந்து பல ரகசியங்களை வெளிக்கொணர்ந்தார். மூளையின் இடது, வலது பகுதிகளின் தனித்துவ பணிகளை வெளிப்படுத்தியது அவரது ஆய்வு.

இடது மூளை, மொழி, பகுப்பாய்வை நிர்வகிப்பதை கண்டறிந்தார். வலது மூளை, கலை, உணர்ச்சியை கவனிப்பதை நிரூபித்தார். இந்தக் கண்டுபிடிப்பு, மூளைப் பற்றிய புரிதலில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது.

இவரது ஆய்வுகள், மூளையின் இரு பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை விளக்கின. மூளையின் ஒரு பகுதி, மற்றொரு பகுதியுடன் ஒத்துழைப்பதை தெளிவுபடுத்தியது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு, 1981ல் இவருக்கு வழங்கப்பட்டது.

மூளை நரம்பியலில் நெகிழ்வுத்தன்மை பற்றிய ஆராய்ச்சி, மருத்துவத்துறையில் புதிய கதவுகளை திறந்தது. மனித மூளையின் இரு பகுதிகளும், தனித்தனி உணர்வு, எண்ணங்களை கொண்டிருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார், ஸ்பெர்ரி. இது உளவியல், நரம்பியல், கல்வி துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவரது கண்டுபிடிப்புகள், மூளை அறுவை, மனநல சிகிச்சைகளில் புதிய அணுகுமுறையை உருவாக்க உதவியது. மூளை மற்றும் நரம்பியல் ஆராய்ச்சியால் மருத்துவ அறிவியலில் அழியாத புகழ் பெற்ற ஸ்பெர்ரி, ஏப்ரல், 17, 1994ல், தன் 81ம் வயதில் மறைந்தார்.

இவரது பங்களிப்பு, மூளை ஆராய்ச்சியில் முக்கிய வழிகாட்டியாக உள்ளது. மனித மனதின் சிக்கல்களை புரிந்துகொள்ள புதிய பாதையை திறந்து வைத்துள்ளது.

- வி.திருமுகில்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us