PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

01. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி., பல்கலை, மணலுக்குப் பதில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்ட காபி துகள்களை கலந்து கான்கிரீட்டை உருவாக்கியது. சாதாரண கான்கிரீட்டை விட 30 சதவீதம் அதிக வலிமை கொண்டிருந்த இந்தப் புது கான்கிரீட்டில், நடைமேடைகள் கட்டிப் பார்த்து சோதித்ததில் நல்ல பலன் கிடைத்தது.
02. உடல் பருமன் குறைப்பு, நீரிழிவு தடுப்பு இரண்டுக்கும் உலகம் முழுதும் பயன்பாட்டில் இருக்கும் மருந்து செமாக்ளூடைட். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், இந்த மருந்து, 'டைப் - 2' நீரிழிவால் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பை கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது.
![]() |
03. நிலவில் ஆய்வு மேற்கொள்ள பெருந்தடையாக இருப்பது, அங்கு நிலவும் இரவு நேர குளிர்ச்சி தான். இது இயந்திரங்களை செயலிழக்கச்செய்யும். இதைச் சரி செய்ய, அணுசக்தி மூலம் வெப்பமூட்டும் முறையை, இங்கிலாந்தைச் சேர்ந்த லெய்செஸ்டர் பல்கலை வடிவமைத்துள்ளது.
![]() |
04. 'இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்' எனப்படும் இடைவெளியிட்ட விரத முறை, உடலுக்கு பலவித நன்மைகள் தருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலை இந்த விரத முறையுடன் அதிகமான புரதச் சத்தை எடுத்துக் கொள்வது, உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது.
![]() |
05. 'மைக்ரோ ஆல்கே' எனப்படும் நுண்பாசிகள் புரதச்சத்து மிக்கவை; உணவாகவும், பயோ எரிபொருள் உருவாக்கவும் பயன்படுபவை. நார்வே நாட்டைச் சேர்ந்த NORCE ஆய்வு மையம், பூச்சிகளின் கழிவைக் கொண்டு நுண்பாசிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தலாம் என்ற ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.