Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/புதிய பற்களை முளைக்க வைக்கலாம்!

புதிய பற்களை முளைக்க வைக்கலாம்!

புதிய பற்களை முளைக்க வைக்கலாம்!

புதிய பற்களை முளைக்க வைக்கலாம்!

PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நமக்கு இரு வகையான பற்கள் உள்ளன. பச்சிளம் குழந்தையாக இருக்கும்போது முளைத்து, சிறுவராகும் போது உதிர்ந்து விடுபவை பால் பற்கள் எனப்படுகின்றன. அதற்கு பின் வளரும் நிரந்தர பற்கள் முதிய வயது வரை இருக்கும்.

அரிதாக சிலருக்கு பிறவி குறைபாடால் ஏதேனும் சில பல் அல்லது நிரந்தர பற்கள் வளராமல் இருக்கலாம். சிலருக்கு ஏதேனும் விபத்து காரணமாக பற்கள் விழுந்திருக்கலாம்.

இப்படியாக பற்கள் இல்லாதவர்களுக்கு இதுவரை பரவலான தீர்வு வழங்கப்படவில்லை. செயற்கை பற்கள் முதலிய புதிய தீர்வுகள் இருந்தாலும் கூட, அவை இயற்கை பற்கள் போல் இருப்பதில்லை.

புதிதாக பற்களை வளர வைக்கும் வழியை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த க்யோடோ மருத்துவப் பல்கலை, புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

நம் உடலில் USAG -- 1 எனும் மரபணு புரதம் தான் பற்களின் வளர்ச்சியை தடை செய்யும். இந்த மருந்து, USAG -- 1 புரதத்தை செயலிழக்கச் செய்கிறது. இதனால், BMP எனும் புரதம் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, இயற்கையாக பற்களை முளைக்கச் செய்கிறது.

இந்த மருந்து நம்மைப் போலவே USAG -- 1 புரதத்தை உடைய எலிகள், பெரர்ட் (ஒரு பாலுாட்டி) ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்டபோது, அவற்றுக்கு பற்கள் முளைத்தன. இதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் வரும் செப்டம்பர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரை, மனிதர்களுக்கு இந்த மருந்தை தந்து சோதிக்க உள்ளனர்.

அதன்படி முதலாவதாக ஒரே ஒரு பல் மட்டும் இல்லாத 30 முதல் 64 வயதுடையவர்கள் மட்டும் சோதிக்கப்படுவர். அடுத்த கட்டமாக, நான்கு பற்கள் இல்லாத 2 முதல் 7 வயதுடைய குழந்தைகளுக்கு மருந்து தரப்படும்.

இவ்வாறு படிப்படியாக சோதிக்கப்பட்டு, 2030ம் ஆண்டிற்குள் இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us