/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அம்ருதா இசை கச்சேரியில் சபையினருக்கு உற்சாகம் அம்ருதா இசை கச்சேரியில் சபையினருக்கு உற்சாகம்
அம்ருதா இசை கச்சேரியில் சபையினருக்கு உற்சாகம்
அம்ருதா இசை கச்சேரியில் சபையினருக்கு உற்சாகம்
அம்ருதா இசை கச்சேரியில் சபையினருக்கு உற்சாகம்
PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

பேஹாக் ராகம், டி.ஆர்.சுப்பிரமணியம் இயற்றிய 'வனஜாக் ஷி'வர்ணம் பாடி, மயிலாப்பூர் தேசிக வித்யா பவனில், தன் கச்சேரியை கச்சிதமாக ஆரம்பித்தார் அம்ருதா வெங்கடேஷ்.
சாமரம் ராகத்தில், 'சித்தி விநாயகம்' என்ற முத்துசுவாமி தீட்சிதரின் கிருதியில், கற்பனை ஸ்வரங்களை அடுக்கி, சபையினர் மனதில், அதை நிலைநாட்டினார்.
இனிமையான ராகமாக கருதப்படும் கமாஸ் ராகத்திலுள்ள 'ப்ரோச்சேவா ரெவ்வருரா' கிருதியை, ராகமாக பாடத் துவங்கிய இவர், இடையில் கற்பனை ஸ்வரங்கள் பதித்து அழகாக்கினார்.
நாசிகபூஷணி ராகத்தில், தியாகராஜரின் படைப்புகளுள் ஒன்றான 'மார வைரி ரமணீ' கிருதியை, திஸ்ர நடை ஆதியில் பாடியும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மீது, பாபநாசம் சிவன் இயற்றிய 'சாமகான லோலனே' என்ற கிருதியையும் திறம்பட வழங்கினார்.
தாமரை மலரை போன்ற கண்ணுடையவர் பெருமாள் என பொருள்படும்படி, மஹாராஜா சுவாதி திருநாள் இயற்றிய 'பங்கஜ லோசனா பாஹி' கிருதியை, பிரதான உருப்படியாகக் கொண்டு, ராக ஆலாபனையாக பாட ஆரம்பித்தார்.
அப்போது, பாம்பே மாதவனின் விரல்கள், வயலினில் கல்யாணி ராகத்தை வரையத் துவங்கியது. மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த இக்கிருதிக்கு நிரவல், கற்பனை ஸ்வரங்கள், கோர்வைகள் என குரலிசையில் அம்ருதாவும், வயலின் இசையில் மாதவனும் அடுத்தடுத்து மாலை தொடுத்தனர்.
அர்ஜுன் கணேஷ் மிருதங்கமும், கார்த்திக் கடமும் தனி ஆவர்த்தனம் நிகழ்த்தி, சபையினருக்கு உற்சாகம் ஊட்டினர். இறுதியில், தில்லானா பாடி, கச்சேரியை விறுவிறுப்பாக பாடி நிறைவு செய்தனர்.
- ரா.பிரியங்கா