/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கோவில் ஊழியர்கள் பி.எப்., பணத்தில் கோல்மால்! கோவில் ஊழியர்கள் பி.எப்., பணத்தில் கோல்மால்!
கோவில் ஊழியர்கள் பி.எப்., பணத்தில் கோல்மால்!
கோவில் ஊழியர்கள் பி.எப்., பணத்தில் கோல்மால்!
கோவில் ஊழியர்கள் பி.எப்., பணத்தில் கோல்மால்!
PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

“பலியை மறைக்க முயற்சி பண்றாங்க பா...” என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“அடப்பாவமே... எங்கங்க...” என, அதிர்ச்சியாக கேட்டார் அந்தோணிசாமி.
“விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'ஆக்சிஜன் பிளான்டில்' பணிபுரிந்த தனியார் ஒப்பந்த ஊழியரை, போன மாசம் வேலையில இருந்து நீக்கிட்டாங்க... இதனால, கோபமானவர் மே 21ம் தேதி அதிகாலை, மருத்துவமனை வளாகத்துக்கு வந்து, ஆக்சிஜன் சப்ளையாகும் பிளான்ட் வால்வை அடைச்சுட்டாரு பா...
“இதனால, அரை மணி நேரம் ஆக்சிஜன் சப்ளை பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் மூச்சு திணறி போயிட்டாங்க... அப்புறமா, ஊழியர்கள் வால்வை சரி பண்ணிட்டாங்க... இதெல்லாம் செய்திகளா வந்துடுச்சு பா...
“இந்த சம்பவத்துல, தீவிர சிகிச்சை பிரிவுல ஒரு நோயாளி இறந்து போயிட்டாரு... ஆனா, மருத்துவமனை நிர்வாகம் இதை இயற்கை மரணமா பதிவு பண்ணிடுச்சு... 'இந்த சம்பவத்துல, தீவிர விசாரணை நடத்தணும்'னு மருத்துவமனை ஊழியர்களே சொல்றாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“தப்பான செட்டிங்னு புலம்பிட்டே போனாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“மதுரையில், தி.மு.க., பொதுக்குழு நடந்துச்சுல்லா... இதுல, எம்.எல்.ஏ.,க்கள் பெயர் எழுதி ஒட்டியிருந்த சேர்கள்ல இருந்த சீட்டுகளை எல்லாம் கிழிச்சு எறிஞ்சிட்டு, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் எல்லாம் உட்காந்துட்டாவ வே...
“பொதுக்குழு நடந்த இடத்துல, சென்னை அறிவாலயம் மாதிரியே செட்டிங் போட்டிருந்தாவ... ஆனா, 'அடுத்த பொதுக்குழு 2026 சட்டசபை தேர்தல் முடிஞ்ச பிறகு தான் கூடும்... அதனால, தேர்தல்ல ஜெயிச்சு கோட்டையை மறுபடியும் பிடிக்கிற மாதிரி, செயின்ட் ஜார்ஜ் கோட்டை செட்டிங் போட்டிருக்கலாமுல்லா... தேர்தல்ல தோத்து, 'கட்சி ஆபீஸ்ல போய் உட்காருங்க'ன்னு சொல்ற மாதிரி, அறிவாலயம் செட்டிங் போட்டது சரியில்ல'ன்னு சில நிர்வாகிகள் முணுமுணுத்தபடியே போனாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“பி.எப்., பணத்துல முறைகேடு பண்ணிட்டார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த நிறுவனத்துல வே...” என கேட்டார், அண்ணாச்சி.
“துாத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சங்கர ராமேஸ்வரர் கோவில் இருக்கோல்லியோ... இங்க அர்ச்சகர்கள், உதவி அர்ச்சகர்கள், காவலாளிகள்னு 20க்கும் மேற்பட்டோர் பணியில இருக்கா ஓய்...
“இவாளுக்கு அறநிலையத் துறை மூலமா சம்பளம் வழங்கினாலும், பி.எப்., தொகையை தனியார் ஆடிட்டர் ஆபீஸ் மூலமா தான் கட்டறா... இந்த பணிகளை கோவில் பணியாளர் ஒருத்தர் தான் பண்றார் ஓய்...
“ஆனா, கடந்த ரெண்டு வருஷமா கோவில் ஊழியர்கள் சம்பளத்துல பிடித்தம் செய்த பி.எப்., தொகையை கட்டாம, 8 லட்சம் ரூபாய் வரை பணியாளர் முறைகேடு பண்ணியிருக்கார்... இது தெரிஞ்சதும் அதிர்ச்சியான ஊழியர்கள், அறநிலையத் துறை உயர் அதிகாரியிடம் புகார் பண்ணியிருக்கா ஓய்...
“அவரோ, 'இன்னும் மூணு மாசத்துல, 'ரிட்டயர்' ஆக போறேன்... என்னை வம்புக்கு இழுக்காதேள்'னு, 'அன்பா' பேசி நழுவிட்டாரு... 'முறைகேடு செய்தவருக்கு உள்ளூர் அமைச்சர் மற்றும் அறங்காவலர்கள் சப்போர்ட் இருக்கறதால தான், அவர் மேல நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறா'ன்னு ஊழியர்கள் புலம்பறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
அப்போது, வேடிக்கையாக தன் மடியில் அமர்வது போல வந்த நண்பரை பார்த்து, “சுப்பையா இது ரொம்ப தப்பய்யா...” என, சிரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.