PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM

சென்னை, சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் - சோழிங்கநல்லுார், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் இணையும் பகுதிகளாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இப்பகுதிகளில், இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், ராமாபுரத்தில் 33.33 மீட்டர் நீளத்துக்கு 'யு கர்டர்' நிறுவி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், புதிய சாதனை படைத்துள்ளது. இது, இந்தியாவில் முதல் நீளமுள்ள 'யு கர்டர்' என, மெட்ரோ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியதாவது:
ஒரு துாணையும், மற்றொரு துாணையும் இணைப்பதுதான் யு கர்டர். பாலங்கள், மேம்பால பாதைகள் போன்ற கட்டுமானங்களில் இது பயன்படுத்தப்படும்.
வெளியிடங்களில், ப்ரீகாஸ்ட் முறையில் கான்கிரீட் மற்றும் ஜிப்சம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு, ராட்சத வாகனங்களில் எடுத்து வந்து பணியிடத்தில் பொருத்தப்படும்.
அந்த வகையில் 33.33 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்ட யு கர்டர், ராமாபுரத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல் நீள யு கர்டர் இதுதான். பொறியியல் துறையில் இது புது சாதனை.
வழக்கமாக நான்கு - ஐந்து துாண்களை இணைக்கும் வகையில் 30 நீளத்திற்குள் தயாரிக்கப்பட்ட யு கர்டர் தான் பயன்படுத்தப்பட்டது. ராமாபுரத்தில் ஆறு துாண்களை இணைக்கும் வகையில் யு கர்டர் பொருத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.