Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மாவட்ட தலைநகரை புறக்கணிக்கும் மந்திரி!

மாவட்ட தலைநகரை புறக்கணிக்கும் மந்திரி!

மாவட்ட தலைநகரை புறக்கணிக்கும் மந்திரி!

மாவட்ட தலைநகரை புறக்கணிக்கும் மந்திரி!

PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''சட்டுன்னு டிரான்ஸ்பர் பண்ணிட்டதால, 'ஷாக்' ஆகிட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''எந்த அதிகாரியை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''அதிகாரி இல்லைங்க... கோவை மாவட்டம், வடவள்ளி கிராம நிர்வாக அலுவலர் பதவி கிடைக்கிறது குதிரை கொம்புன்னு, வருவாய் துறையில பேசிக்குவாங்க... ஏன்னா, நம்பர் ஒன் வில்லேஜான இங்க வர்ற வி.ஏ.ஓ.,க்கள், ஒரே வருஷத்துல குபேரன் ஆகிடுவாங்க...

''இதனால, இங்க வர்றதுக்கே பெரும் தொகையை செலவு பண்ணுவாங்க... இந்த சூழல்ல, சமீபத்துல இங்க, வி.ஏ.ஓ.,வா நியமிக்கப்பட்ட வெற்றிவேல் என்பவரை, வந்த சில மாசத்துலயே வேற ஊருக்கு மாத்திட்டாங்க...

''அதிர்ச்சியான வெற்றிவேல், தன் இடமாறுதலை ரத்து பண்ணுங்கன்னு, அதிகாரிகளிடம் மன்றாடி யிருக்காரு... அவங்க காதுலயே போட்டுக்காததால, கொதிச்சு போனவர், இடமாறுதலை எதிர்த்து கோர்ட்டுக்கு போயிட்டாருங்க... இதனால, அதிகாரிகள் அதிர்ச்சியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எல்லாத்தையும், 'உதவி'யை கேட்டு தான் செய்யறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி... பதவி உயர்வு அடிப்படையில், முதல் முறையா கலெக்டரா நியமிக்கப்பட்ட இவர், அடிக்கடி அதிகாரிகள் மீட்டிங்கை நடத்தறா ஓய்...

''ஆனா, எந்த முடிவா இருந்தாலும், தன் உதவியாளரை கேக்காம எடுக்க மாட்டேங்கறார்... சமீபத்துல, வருவாய் துறை சம்பந்தமான ஆய்வு கூட்டத்தை கலெக்டர் நடத்தினார் ஓய்...

''இதுல, டி.ஆர்.ஓ., அஜய் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துண்டா... ஆலோசனை முடிஞ்சதும், தன் பக்கத்துல நின்னுண்டு இருந்த உதவியாளரை அழைச்சு, 'இவா சொல்ற மாதிரி செஞ்சா சரியா வருமா'ன்னு கேட்டிருக்கார் ஓய்...

''இதை கேட்டு, வருவாய் துறை அதிகாரிகள் அதிர்ச்சியாகிட்டா... மாவட்டத்துல எல்லா விஷயத்துலயும், 'உதவி' தான் முடிவெடுக்கறார்... இதை சாதகமா பயன்படுத்திக் கொள்ளும், 'உதவி' தனக்கு வேண்டிய பைல்களை நகர்த்தி, காரியமும் சாதிச்சுக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''தெற்கு மாவட்டத்தை புறக்கணிக்கிறதா புலம்புதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''காஞ்சிபுரம் தி.மு.க., வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களா செயல்படுது... வடக்கு மாவட்ட செயலரா, அமைச்சர் அன்பரசனும், தெற்கு மாவட்டத்துக்கு உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தரும் செயலரா இருக்காவ வே...

''ஆனா, தெற்கு மாவட்டத்தை காட்டிலும், வடக்கு மாவட்டத்துல தான் அதிகப்படியான அரசு நிகழ்ச்சிகளும், அரசு திட்டங்களின் துவக்க நிகழ்ச்சிகளும் நடக்கு... சமீபத்துல நடந்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலை உணவு திட்டம், மக்களுடன் முதல்வர் போன்ற திட்டங்களின் துவக்க நிகழ்ச்சிகள், அமைச்சர் அன்பரசனின் வடக்கு மாவட்டத்துலயே நடந்துச்சு வே...

''மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம், தெற்கு மாவட்டத்துல தான் இருக்கு... ஆனாலும், எந்த முக்கிய நிகழ்ச்சியையும் இங்க அமைச்சர் நடத்தவே மாட்டேங்காரு... இதனால, தங்களை புறக்கணிக்கிறதா தெற்கு மாவட்ட தி.மு.க.,வினர் புலம்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பெரியவர்கள் பேச்சு முடிய, பெஞ்ச் மவுனித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us