/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரிகள்! தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரிகள்!
தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரிகள்!
தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரிகள்!
தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''உணவுப் படியை ரத்து பண்ணிட்டாவ வே...'' என, சங்கதியை ஆரம்பித்தார்.
''யாருக்கு ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர போலீசாருக்கு தினசரி உணவுப்படியா 300 ரூபாய் தருவாவ... இந்த வருஷம், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டதுக்காக, நாலு நாட்கள் அனைத்து போலீசாருக்கும், தேர்தல் கமிஷன் சார்பில் உணவுப்படியா, ஒரு நாளைக்கு 450 ரூபாய் குடுத்திருக்காவ வே...
''இதனால, வழக்கமா போலீசாருக்கு வழங்கும் உணவுப்படியில், அந்த நாலு நாள் தொகையை, 'கட்' பண்ணிட்டாவ... இதுவரைக்கும், தேர்தல் கமிஷன் உணவுப்படி தந்தாலும், வழக்கமான உணவுப்படியை நிறுத்தியது இல்ல... ஆனா, இந்த முறை 1,200 ரூபாயை கட் பண்ணிட்டதால, போலீசார் விரக்தியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அரசுக்கு அந்த அளவுக்கு நிதி நெருக்கடி வந்துடுத்து போல...'' என்ற குப்பண்ணாவே, ''அரசு பள்ளியில், தனியார் டியூஷன் சென்டர் நடத்தியிருக்கா ஓய்...'' என்றார்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஈரோடு மாவட்டம், கோபி பக்கத்துல இருக்கற சந்திராபுரம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில், பல வருஷமா பள்ளி முடிஞ்சதும், அங்குள்ள வகுப்பறையில், ஒரு தனியார் அகாடமி டியூஷன் சென்டர் நடத்தியிருக்கு... சமீபத்துல இந்த விஷயம், கோபி டி.இ.ஓ., கவனத்துக்கு போயும், அவர் கண்டுக்கல ஓய்...
''அப்பறமா, கலெக்டரின் கட்டுப்பாட்டுல இருக்கற ஒரு அதிகாரி கவனத்துக்கு போக, அவரும் விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி, கோபி டி.இ.ஓ.,வுக்கு உத்தரவு போட்டார்... டி.இ.ஓ.,வும் விசாரணை நடத்தி, 'தனியார் டியூஷன் சென்டர் நடந்தது உண்மைதான்'னு அறிக்கை குடுத்திருக்கார் ஓய்...
''ஆனா, பல வருஷங்களா டியூஷன் சென்டர் நடத்தியதுக்கு மின் கட்டணம் கட்டியது யார், அந்த பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு இதுல உண்டா, வட்டார, மாவட்ட கல்வி அதிகாரிகள் என்ன பண்ணிண்டு இருந்தான்னு பல கேள்விகளுக்கு விடை கிடைக்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தனி ராஜாங்கமே நடத்துறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி வித்ததா சிலரை போலீசார் கைது செஞ்சாங்க... இந்த விவகாரத்துல, அவங்களை பிடிச்சது பத்தி, முன்கூட்டியே ஏன் தகவல் தரலன்னு ஸ்டேஷன் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ்காரருக்கு, எஸ்.பி., 'மெமோ' குடுத்துட்டாரு பா...
''அந்த ஸ்டேஷன்ல இருக்கிற ரெண்டு அதிகாரிகள், கள்ளச்சாராயம் காய்ச்சியவங்களை பிடிச்சு, வேற ஒரு இடத்துல ரெண்டு நாளா வச்சிருந்திருக்காங்க... இதை சக போலீசாருக்கோ, தனிப்பிரிவு போலீஸ்காரருக்கோ தெரிவிக்கல பா...
''அந்த இரண்டு நாள்ல, கள்ளச்சாராய வியாபாரிகளிடம் என்ன டீலிங் நடந்துச்சுன்னும் தெரியல... இந்த இரண்டு அதிகாரிகளும், உள்ளூரை சேர்ந்த ஒரு டுபாக்கூர் நிருபருடன் சேர்ந்துட்டு, கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையா இருக்கிறதுன்னு தனி ராஜாங்கமே நடத்திட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''அர்ஜுனும், முத்துவும் வரா... சுக்கு காபி போடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.