/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அமைச்சரையே டென்ஷனாக்கிய பெண் அதிகாரி! அமைச்சரையே டென்ஷனாக்கிய பெண் அதிகாரி!
அமைச்சரையே டென்ஷனாக்கிய பெண் அதிகாரி!
அமைச்சரையே டென்ஷனாக்கிய பெண் அதிகாரி!
அமைச்சரையே டென்ஷனாக்கிய பெண் அதிகாரி!
PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''வீடியோவால மாட்டிக்கிட்டாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''ஏதாவது ஏடாகூட வீடியோவா ஓய்...'' என, ஆர்வமானார் குப்பண்ணா.
''இல்ல... சேலம் மாவட்டம், பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ.,யா இருந்தவரை தான் சொல்றேன்... ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி தான் இந்த ஸ்டேஷனுக்கு வந்தாரு பா...
''வந்ததுல இருந்தே வசூல்ல புகுந்து விளையாட துவங்கிட்டாரு... குறிப்பா, ஆடையூர், பக்கநாடு பகுதிகளில் அனுமதியின்றி செம்மண் கடத்தும் லாரி உள்ளிட்ட வாகனங்களை தனியாளா போய் மடக்கிடுவாரு பா...
''லாரி உரிமையாளர்களிடம் கறாரா கட்டிங் வசூல் பண்ணிட்டு தான், லாரிகளை விடுவிப்பாரு... இது சம்பந்தமா, எஸ்.பி.,க்கு நிறைய புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் எடுக்கல பா...
''இதனால, இவரை பொறி வைச்சு பிடிக்க நினைச்ச சிலர், சமீபத்துல செம்மண் கடத்தியவங்களை மிரட்டி, எஸ்.எஸ்.ஐ., மாமூல் வாங்குறதை வீடியோ எடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிட்டாங்க... இதனால, வேற வழியில்லாம அவரை ஆயுதப்படைக்கு துாக்கியடிச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''திண்டுக்கல் காந்தி மார்க்கெட், மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்குதுங்க... மாவட்டம் முழுக்க இருந்தும், வியாபாரிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வர்றாங்க...
''காய்கறி மூட்டைகளை உள்ளே கொண்டு போறதுக்கு, மாநகராட்சி தரப்புல கட்டணம் வசூலிக்கிறாங்க... ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருத்தர் தான் இந்த வசூல் பணியை செய்றாருங்க...
''ஆனா, இவர் வசூலிக்கற பணத்துக்கும், மாநகராட்சியில கட்டுற பணத்துக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்குதுங்க... இதை கண்டிக்க வேண்டிய உதவி வருவாய் அலுவலரும், 'கவனிப்பு' காரணமா கமுக்கமா இருக்காருங்க...
''காய்கறி மூட்டைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறதுக்கான ஏலத்தையும் நடத்த விடாம, ஆளுங்கட்சி புள்ளிகள் தடுத்துட்டு இருக்காங்க... இதனால, மாநகராட்சிக்கு லட்சக்கணக்குல வருவாய் இழப்பு ஏற்படுதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அமைச்சரையே கடுப்பாக்கிய அதிகாரி கதையை கேளுங்க வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னையை ஒட்டியிருக்கிற பட்டுக்கு பேர் பெற்ற மாவட்ட வருவாய் துறைக்கு, புதுசா ஒரு பெண் அதிகாரி வந்திருக்காங்க... வேலையில சேர்ந்ததுமே, தனது இரு பிள்ளைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து, எல்லாரையும் ஆச்சரியப்படுத்துனாங்க வே...
''இதனால, 'லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியா இருப்பாங்க'ன்னு துறை ஊழியர்களும், பொதுமக்களும் தப்பா நினைச்சுட்டாவ... ஆனா, கமிஷன் கைக்கு வராம, எந்த பைல்லயும் அம்மா கையெழுத்தே போட மாட்டாங்க வே...
''பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று, கல்குவாரி அனுமதி, பட்டா மேல் முறையீடுன்னு எந்த பைலாக இருந்தாலும், லட்சக்கணக்குல கேட்கிறாங்க... அட, அவ்வளவு ஏன்... மாவட்ட அமைச்சர் பரிந்துரை பண்ணி அனுப்பிய ஒருத்தர்கிட்டயே இவங்க கறாரா கமிஷனை கேட்டு வாங்கிட்டாவ... இதை கேள்விப்பட்டு, அமைச்சரே டென்ஷன் ஆகிட்டாரு வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
அரட்டை கச்சேரி முடிய, அனைவரும் கிளம்பினர்.