PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

பா.ஜ.,வுக்கு இப்போது கிடைத்துள்ளது, தோல்விக்கு சமமான வெற்றியே. கூட்டணி
கட்சிக்காரர்களின் நிபந்தனைகளை மீறி, மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி தொடருமா
என்பதும் கேள்விக்குறியே.
தி.மு.க., அணி 40க்கு 40 இடங்களை
பெற்றிருந்தாலும் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை என்பதால், அதையும்,
'வெற்றிக்கு சமமான தோல்வி'ன்னு இவர் குறிப்பிடுவாரா?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'பா.ஜ., தலைமையிலான கூட்டணி அமைக்க உள்ள புதிய அமைச்சரவையில், ஒரு முஸ்லிம் கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வர்' என, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இதே கேள்வியை 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலினிடம், 'தி.மு.க., வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையே' என கேட்க துணிச்சல் உண்டா?
அப்படியே கேட்டாலும், ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., நவாஸ் கனியை கை காட்டிடுவாங்களே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், தி.மு.க.,விடம் இழந்து நிற்கும் அ.தி.மு.க., அடுத்து தனது எதிர்காலத்தை, பா.ஜ.,விடமும், நாம் தமிழரிடமும் பறிகொடுக்க நேரலாம். இதை தடுக்க ஒற்றுமை என்பது மட்டுமே ஒரே தடுப்பு மருந்தாகும். இளம் தலைமுறையினரை ஈர்ப்பதற்கான நட்சத்திர அந்தஸ்தோ, கரிஷ்மாவோ இல்லாத களமாக அ.தி.மு.க., வெறிச்சோடி நிற்கிறது. இதை ஒற்றுமை என்ற வெளிச்சத்தால் மட்டுமே சமன் செய்ய முடியும்.
இவங்க அணியில் இருந்து தான் புகழேந்தி, ஜே.சி.டி. பிரபாகரன்னு பலரும் பிய்ச்சுக்கிட்டு ஓடுறாங்க... அவங்களை பிடிச்சு நிறுத்துற வழியை முதல்ல பார்க்கலாமே!
திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி: பா.ஜ., கட்சியின் என்.டி.ஏ., கூட்டணியில், பலர் நிர்பந்தம் காரணமாகவே இருக்கின்றனர். ஐந்து ஆண்டுகள் ஆட்சியை தக்க வைப்பதற்கு, பிற இயக்கங்களை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். எம்.பி.,க்களை வசப்படுத்த இ.டி., - ஐ.டி.,க்களை வைத்து மிரட்டி, கடும் நடவடிக்கை எடுப்பர். ஆனால், கண்டிப்பாக, இந்த ஆட்சி ஐந்து ஆண்டு நிலைக்காது.
மற்ற கட்சிகளை வளைப்பது எப்படி என்று, இவரே பா.ஜ.,வுக்கு பாடம் எடுக்கிற மாதிரி தோணுதே!