Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சிதம்பரம் கனவு கானல் நீராகும்!

சிதம்பரம் கனவு கானல் நீராகும்!

சிதம்பரம் கனவு கானல் நீராகும்!

சிதம்பரம் கனவு கானல் நீராகும்!

PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தல் திருவிழா முடிந்து, மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசும் பதவியேற்று விட்டது. சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க, 'இண்டியா' கூட்டணியினர் பலரும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடுவிடம் மறைமுகமாக குதிரை பேரம் நடத்தி, அவர்கள் ஒத்து வராமல் போகவே, 'ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும்' என்ற கதையாக ஒதுங்கி விட்டனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தமிழக மூத்த தலைவர் ப.சிதம்பரம் மட்டும், 'இந்த முறையும் காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே... நம்மால் நிதி அமைச்சர் ஆக முடியவில்லையே' என்ற விரக்தியில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளால் படப்போகும் அவஸ்தைகளை காண தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், 'தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் அடக்கத்தை கற்று தந்துள்ளனர்... எல்லா மாநில கட்சிகளையும் இணைத்து கூட்டணி அரசு நடத்துவது எளிதான காரியம் அல்ல... சிரமமான அந்த அனுபவம் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. மோடிக்கு அந்த அனுபவம் துவங்க உள்ளது... எப்படி சமாளிக்கிறார் என வேடிக்கை பார்க்க காத்திருக்கிறேன்' எனவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

அதாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கூட்டணி கட்சிகள் செய்த ஊழல், முறைகேடுகளால், காங்., கட்சி தர்மசங்கடத்தில் சிக்கி தவித்தது போல், தே.ஜ., கூட்டணி ஆட்சியிலும் நடக்க வேண்டும். அதை ஊதி பெரிதாக்கி நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

ஆனால், பாதையில் மாட்டுவண்டி சீராக பயணிக்க காளைகளின் மூக்கணாங்கயிறு வண்டிக்காரன் கையில் இருந்தால், மாடுகள் சண்டித்தனம் பண்ணாது என்பதை சிதம்பரம் அறியாதவர் அல்ல.

ஏன் என்றால், காங்கிரஸ் கட்சி நடத்திய கூட்டணி ஆட்சியில், பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாலும், அவரை ரப்பர் ஸ்டாம்பாக அமர வைத்து, ஆட்சியை நடத்தியது சோனியா குடும்பம் தான் என்பது நாடறிந்த ரகசியம். ஆனால், தற்போது அமைந்துள்ளது சர்வ வல்லமையும், அசாத்தியமான நிர்வாக திறனும் கொண்ட மோடி தலைமையிலான ஆட்சி. எனவே, சிதம்பரத்தின் கனவு கானல் நீராகவே போகும் என்பதில் சந்தேகமே இல்லை!



நல்லாட்சியாக நடக்குமா இது?


சுப்ர.ஆனந்தராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: நடந்து முடிந்துள்ள பொதுத்தேர்தல் மூலம், விவேகமுள்ள சிந்தனை சக்தி மிகுந்த மக்கள் நலன் விரும்பும் மேன்மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில், யார் வேண்டுமானாலும், குறுக்கு வழியில் ஓட்டு பெற்று விடலாம் என்பதே.

சில தேச விரோத சக்திகளும் கூட, பல்வேறு குயுக்தியான இலவச வினியோகங்கள் மூலம், கணிசமான தேர்தல் வெற்றிகளைப் பெற்று விட முடிகிறது.

நரேந்திர மோடியின் தலைமை, நாட்டின் பல பகுதிகளில் உதாசீனம் செய்யப்பட்டிருப்பது, வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயே தெளிவாகி விட்டது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தோல்வியுற்றாலும், அவர் வாங்கிய கணிசமான வாக்குகள், பணம் எதுவும் கொடுக்காமல் நேர்மையாக அடைந்தவை என்று அவர் கூறுவதும் உண்மை.

எனவே, இனிமேலாவது தேர்தல் சீர்திருத்தங்கள் எவ்வளவு அவசியம் என்பதை, தேச நலன் விரும்பும் சான்றோர், ரூம் போட்டு யோசனை பண்ண வேண்டும்.

நாட்டில் நடைபெறும், பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முதல், எம்.பி., தேர்தல் வரை அனைத்திலும் பதிவாகும் மொத்த வாக்குகளில், குறைந்தபட்சம் 51 சதவீத எண்ணிக்கை பெற்றால் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். அப்போது தான், உண்மையான, மெஜாரிட்டி மக்களின் பிரதிநிதித்துவம் உள்ள மக்களாட்சி ஏற்படும்.

இப்போது நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சியினரை அனுசரித்து ஆட்சி நடத்தலாம்; ஆனால் நல்லாட்சியாக இருக்குமா அது?



தி.மு.க., வெற்றியும், உண்மை நிலவரமும்!


கு. காந்தி ராஜா, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் தி.மு.க., 39க்கு 39 என, அனைத்து லோக்சபா தொகுதிகளையும் வென்றிருக்கிறது. ஆனால், 'இந்த வெற்றி, தி.மு.க., ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகளுக்கான அங்கீகாரம்' என்று முதல்வர் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல; எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுபட்டதாலேயே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், தி.மு.க., அனைத்து துறைகளிலும், மிக மோசமான செயல்பாட்டையே பதிவு செய்திருக்கிறது; மின் கட்டணம் உட்பட அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பிரச்னைகளை உருவாக்கியிருக்கிறது.

எங்கும் எதிலும், லஞ்சம், ஊழல், கமிஷன். மாநிலத்தில் நிலவும் பரந்துபட்ட போதை பொருள் பயன்பாடு, மக்களிடையே பெரும் அச்ச உணர்வை உருவாக்கியிருக்கிறது.

பெருகி வரும் வன்முறை கலாசாரத்தால், காவல் துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது; தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெற்றிருக்கும் ஓட்டு, சரிவைச் சந்தித்திருக்கிறது.

கடந்த தேர்தலில், தனிப்பட்டு, 33.53 சதவீத ஓட்டு பெற்ற தி.மு.க., இந்த தேர்தலில், 26.93 சதவீதமே பெற்றிருக்கிறது. இது ஆட்சிக்கெதிரான மக்களின் மனநிலையைக் காட்டுகிறது என்பதை, தி.மு.க., புரிந்து கொள்ள வேண்டும்.



போலியை நம்பி மோசம் போயினர்!


சி.ஆர்.குப்புசாமி, உடுமலைபேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மூன்றாவது முறையாக, பா.ஜ.,வின் மோடி ஆட்சிக்கு வந்தாலும், உ.பி.,யில் அவர் கட்சி நிறைய இடங்களை இழந்தது, தரம் கெட்ட காங்கிரஸ் பிரசாரத்தால் தான்.

'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் கொடுப்பதாக, அக்கூட்டணி வாக்குறுதி கொடுத்து, அதற்கு பிட் நோட்டீசும் வினியோகித்தது. அதை உத்தரவாத நோட்டீஸ் என நம்பிய பெண்கள், அக்கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர். என்னே ஒரு நயவஞ்சகத்தனம்!

மோடி ஆட்சியில், பா.ஜ., அமைச்சர்கள் யார் மீதாவது ஒரே ஒரு ஊழல் வழக்காவது போடப்பட்டிருக்கிறதா? இல்லை!

அப்பழுக்கற்ற ஆட்சியைக் கவிழ்க்க, வேறு வழி தெரியாமல், குறுக்கு வழியில், 'இண்டியா' கூட்டணியினர் சதி செய்தனர். ஆனாலும், அதற்கான பலனை இப்போது அனுபவிக்கின்றனர். தலைகீழ் நின்றாலும், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

அந்த அப்பாவி மக்களோ, போலியை நம்பி மோசம் போயினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us