PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி:
தென்
மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் ஜாதி கொலைகளை தடுக்க, அடிப்படையிலேயே
மாற்றம் தேவை; நிறைய புரிதல் தேவை. இளைஞர்களுக்குள் அதிக விவாதம்
தேவைப்படுகிறது. உடனே இதை மாற்ற முடியாது. ஜாதி என்பது தென் மாவட்டங்களில்
உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்டம், திட்டம் போட்டு அதை
ஒரே நாளில் மாற்ற முடியாது.
ஜாதிய களம் கொண்ட கதைகளை அமைத்து, இளைஞர்களுக்கு ஜாதி வெறியை ஊட்டுறதுல இவரோட சினிமாவுக்கும் பங்கு உண்டு தானே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழக இளைஞர்கள் இடையே போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், 'ஆன்லைன் ரம்மி' போன்ற சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து, இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருவது வேதனை அளிக்கிறது. அரசு இனியும் அலட்சியமாக செயல்படாமல், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.
அரசியல் தொடர்பாக தொடரப்படும் வழக்குகளை விரைவுபடுத்த மட்டுமே இந்த அரசு முன்வரும்னு இவருக்கு தெரியாதா?
தமிழக அரசின் பாட நுால் நிறுவன முன்னாள் தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை: 'குடும்ப கட்சிகள் ஆறு மாதத்திற்குள் சண்டையிட்டு தெருவுக்கு வந்து விடுவதை நாம் பார்க்கத் தான் போகிறோம்' என, பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்படியானால், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதியாகி விட்டது. ராகுல் பிரதமராக வேண்டும் என, முதலில் வீரவாள் கொடுத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் துணை பிரதமராகி, தமிழகத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அப்படியா... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒன்றில் கூட ராகுல் பிரதமர் ஆவதற்கான அறிகுறியையே காணோம்!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை: மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று சரணடைவதாக அறிவித்துள்ளார். டில்லி மக்கள் தனக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துஉள்ளார். கொள்ளை அடிக்கும் போது தனி; ஆபத்து வந்தால் மக்கள் ஆதரவு... 'புலிக்கு பயந்தவர்கள் என் மேல் விழுங்கள்' என்ற பழமொழி போல இருக்கிறது.
நம்ம ஊர் அரசியல்வாதிகளுடன் நட்பு பாராட்டிட்டு, இந்த அளவு கூட அவர் தேறலைன்னா எப்படி?