லஞ்ச பணத்தை கையால் தொடாத அதிகாரி!
லஞ்ச பணத்தை கையால் தொடாத அதிகாரி!
லஞ்ச பணத்தை கையால் தொடாத அதிகாரி!
PUBLISHED ON : ஆக 07, 2024 12:00 AM

இஞ்சி டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''நாம் தமிழர் சீமான், தன் கட்சியின் மயிலாடுதுறை எம்.பி., வேட்பாளரான காளியம்மாளை விமர்சனம் செய்து பேசிய ஆடியோ வேகமா பரவுச்சே... இந்த ஆடியோ பரவியதற்கு திருச்சி எஸ்.பி., வருண்குமார் தான் காரணம்னு சொல்லி, அவரையும் கடுமையான வார்த்தைகளால் சீமான் திட்டி தீர்த்தாருங்க...
''இதுவும் சமூக வலைதளங்கள்ல வேகமா பரவுச்சு... இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, வக்கீல் மூலம் சீமானுக்கு திருச்சி எஸ்.பி., வருண்குமார் நோட்டீஸ் அனுப்பிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நடக்கற மோசடிகளை கேளுங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சேலம், தளவாய்பட்டியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை இருக்கு... மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுல இயங்கறது ஓய்...
''சேலம் மாவட்டத்துல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்ல வேலை பார்க்கற, மாதம், 20,000 ரூபாய்க்குள்ள சம்பளம் வாங்கற 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டவா இதுல சிகிச்சை எடுத்துக்கறா... சிகிச்சை செலவுக்கு உச்ச வரம்பே இல்ல ஓய்...
''இதுக்காக, தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும் குடுப்பா... 50 படுக்கை வசதி உள்ள இந்த மருத்துவமனையில் தினமும், 300 தொழிலாளிகள் வரை வந்து சிகிச்சை எடுத்துண்டு போறா ஓய்...
''இந்த சூழல்ல, இ.எஸ்.ஐ.,யில உறுப்பினரே அல்லாத வெளியாட்களை இங்க, 'அட்மிட்' பண்ணி, தொழிலாளிகளின் அடையாள அட்டையை முறைகேடா பயன்படுத்தி, சிகிச்சை தந்து, அவாளிடம் லட்சக்கணக்கான ரூபாயை சுருட்டிடறா... அங்க வேலை பார்க்கற டாக்டர், உதவியாளர்னு பலருக்கும் இதுல பங்கு இருக்கு ஓய்...
''இது சம்பந்தமா, அங்க இருக்கற நேர்மையான பெண் டாக்டர் ஒருத்தர், சென்னை இ.எஸ்.ஐ., மண்டல இயக்குனர் மற்றும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனருக்கு தனித்தனியே, 'இ - மெயில்'ல புகார் அனுப்பியிருக்காங்க... நடவடிக்கை எடுக்கறாளான்னு பார்ப்போம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பணத்தை கையால தொட மாட்டேங்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''யாருப்பா அந்த நேர்மையான அதிகாரி...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''அவசரப்படாதீரும்... துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் வருவாய் கோட்ட அதிகாரி ஒருத்தர், விதிகளை மீறி இயங்கிய மண் லாரியை சமீபத்துல மடக்கி பிடிச்சு, ஓரங்கட்டி நிப்பாட்டுனாரு வே...
''லாரி உரிமையாளரை மிரட்டி நடத்திய பேரத்துல, 12,500 ரூபாய், 'பைனல்' ஆச்சு... லாரி உரிமையாளர் பணத்தை எடுத்து தந்தப்ப, 'நான் கையில பணத்தை வாங்குறது இல்ல... பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்க் ஊழியரிடம் குடுத்துடுங்க'ன்னு சொல்லிட்டு அதிகாரி போயிட்டாரு...
''இதை பார்த்து, 'லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்கிட கூடாதுல்லா... அதான், அதிகாரி டெக்னிக்கலா வாங்குதார்'னு சொல்ற கீழ்மட்ட அதிகாரிகளும், அவங்க பங்குக்கு நுாதனமா வசூலை வாரி குவிக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சுகுமார் இப்படி உட்காருங்க பா...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.