Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஓட்டுகள் குறைவுக்கு உளவுத்துறை அளித்த விளக்கம்!

ஓட்டுகள் குறைவுக்கு உளவுத்துறை அளித்த விளக்கம்!

ஓட்டுகள் குறைவுக்கு உளவுத்துறை அளித்த விளக்கம்!

ஓட்டுகள் குறைவுக்கு உளவுத்துறை அளித்த விளக்கம்!

PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''வேலையே செய்யாம போயிடுதாரு வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த அரசு அலுவலகத்துல ஓய்...'' என, பட்டென கேட்டார் குப்பண்ணா.

''பெரம்பலுார் மாவட்டம், குன்னம் யூனியன் ஆபீஸ்ல ஒரு உதவியாளர் இருக்காரு... இவர், இந்த துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகியாவும் இருக்காரு வே...

''காலையில ஆபீசுக்கு வந்து கையெழுத்தை மட்டும் போட்டுட்டு, 'சங்க வேலை இருக்கு'ன்னு சொல்லி, நேரா வீட்டுக்கு போயிடுதாரு... இவரது வேலையை, அதே ஆபீஸ்ல தற்காலிக ஊழியரான ஒருத்தர் தான் செய்தாரு வே...

''பணியிட மாறுதல், பதவி உயர்வு எதுவும் எனக்கு தெரியாம நடக்கக் கூடாதுன்னு உயர் அதிகாரிகளை மிரட்டுதாரு... பணியில ஒழுங்கீனம், நிதி முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது புகார் வந்தா, சங்க நிர்வாகி என்ற கெத்துல மாவட்ட உயரதிகாரிகளை பார்த்து, அவங்களை காப்பாத்திவிட்டு, காசும் பார்த்துடுதாரு வே...

''இவரது பேச்சை கேட்காத அதிகாரிகளிடம், 'ஆர்ப்பாட்டம் நடத்துவோம்... ஜாதி பாரபட்சம் பார்க்குறீங்க'ன்னு மிரட்டி, காரியத்தை சாதிச்சுக்கிடுதாரு... இதனால இவருக்கு, 'வம்புராஜ்'னே செல்ல பெயர் சூட்டியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பழைய பகையை இப்பவும் மறக்கலைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, 60 வருஷ பாரம்பரியமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்குது... இயந்திரங்கள் பழுதாகி கிடக்கிறதால, நடப்பாண்டு கரும்பு அரவை நடக்கலைங்க...

''இதை புதுப்பிக்க, 80 கோடி ரூபாய் ஒதுக்கவும், ஆறு வருஷத்துல இந்த கடனை அடைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் பண்ணி, அதிகாரிகள் அரசுக்கு அனுப்புனாங்க... ஆனா, நிதி ஒதுக்க மாவட்ட முக்கிய புள்ளி முட்டுக் கட்டை போடுறாருங்க...

''ஏன்னா, 'சர்க்கரை ஆலை உள்ள, மடத்துக் குளம் தொகுதியில், முன்னாடி முக்கிய புள்ளி போட்டியிட்டப்ப, அவரை எதிர்த்து ஜெயிச்ச, அ.தி.மு.க., வின் சண்முகவேலு தான் இப்ப விவசாயிகள் சங்க தலைவரா இருக்காரு... அதுவும் இல்லாம, தன்னை தோற்கடிச்ச தொகுதிக்கு நல்லது எதுவும் செய்யாம பழிவாங்குறாரு'ன்னு கரும்பு விவசாயிகள் புகார் பத்திரம் வாசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''முதல்வருக்கு விளக்கம் தந்திருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''லோக்சபா தேர்தல்ல, விருதுநகர்ல, தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரனை விட, 4,000 சொச்சம் ஓட்டுகள் அதிகம் வாங்கி தானே, காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஜெயிச்சாரு... இது சம்பந்தமா, முதல்வருக்கு உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில, அஞ்சு முக்கிய அம்சங்களை குறிப்பிட்டிருந்தாங்க பா...

''அதாவது, 'உள்ளாட்சி பிரதிநிதிகள் துவங்கி அமைச்சர்கள் வரை நல்லா சம்பாதிச்ச தோடு, ஆட்சிக்கு கெட்ட பெயரை சம்பாதிச்சு குடுத்திருக்காங்க... தி.மு.க.,வை விமர்சித்து பேசிய, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல வழக்கு போட்டு முன்னாடி ஜெயில்ல அடைச்சாங்க...

''அதுக்கு பழி தீர்க்க நினைச்ச அவர், தேர்தல் களத்துல விஜய பிரபாகரன் வெற்றிக்கு தீயா வேலை பார்த்தாரு... விருதுநகரை, ம.தி.மு.க., வுக்கு விட்டு தர மறுத்த மாணிக்கம் தாகூருக்கு, அந்த கட்சியினரும் ஓட்டு போடலை... தகப்பன் இல்லாத பிள்ளை என்ற அனுதாபம், விஜய பிரபாகரனுக்கு சாதகம்...

''கடந்த தேர்தல்ல ஜெயிச்ச மாணிக்கம் தாகூர் நன்றி சொல்ல கூட பல பகுதிகளுக்கு போகாதது ஆகியவை தான், அவருக்கு ஓட்டுகள் குறைய காரணம்'னு சொல்லியிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

பேச்சு முடிய பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us